உலக நாடுகளை புரட்டிப்போட்ட கோவிட்-19 தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, தற்போது அதன் பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் சில நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ் திரிபுகள் பரவி, அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனோம், உலக நாடுகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “தொற்று பாதிப்பால் உலகின் சில பகுதிகளில் இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கைகள் அதிகரித்துள்ளன. மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளிலும் பாதிப்பு காணப்படுகிறது. குளிர்காலத்திற்கு முன்னதாக கோவிட் -19 பரவலுக்கான வாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள், கோவிட் வைரஸ் பரவலை கண்காணிக்காமல் இருப்பது, அல்லது அது தொடர்பான தரவுகளை வழங்காததால், புதிய வகை கோவிட்-19 அச்சுறுத்தலை மதிப்பிடும் பணி தடைப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளில் 43 நாடுகள் மட்டுமே கோவிட் குறித்து அறிக்கை அளிக்கின்றன. 20 நாடுகள் மட்டுமே உலகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்கள் பற்றிய தகவல்களை வழங்குகின்றன.
குளிர்காலத்தில் புதிய வகை கோவிட் பரவும் வாய்ப்புள்ளதால், மருத்துவமனையில் சேரும் நோயாளிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை உலக நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்றும் இறப்புகளின் அதிகரிப்பு போன்றவை, கோவிட் நம்மிடையே தொடர்ந்து தங்குவதற்கு வாய்ப்புள்ளது என்பதையும், அதை எதிர்த்துப் போராடுவதற்கான கருவிகள், மருந்துகள் நமக்கு தொடர்ந்து தேவைப்படும்.“ இவ்வாறு உலகளாவிய ஊடக மாநாட்டில் டெட்ரோஸ் தெரிவித்தார்.
இதனிடையே, உலக சுகாதார அமைப்பின் கோவிட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “தரவுகள் குறைவாக இருந்தபோதிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய மருத்துவமனைகளில் நோயாளிகள் குறித்த தரவுகள் அதிகரித்து வருகின்றன.
சிலநாடுகளில், குளிர்கால மாதங்களில் கோவிட் பரவல் இருக்கலாம். ஜூலை மாத பிற்பகுதியில் இருந்து BA.2.86 வைரஸ் திரிபு, 11 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மக்கள் மத்தியில் பரவிய பிற வைரஸ் திரிபு மாறுபாடுகளுடன் அவை போட்டியிடவில்லை.
இந்த மாறுபாடுகள், உலகளவில் மிகவும் சிக்கலானவை. ஏனெனில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வைரஸ் திரிபுகள் உள்ளன. கோவிட் தொற்றின் இந்த மாற்ற காலகட்டத்தில், நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். கண்காணிப்புக்கான அமைப்புகளை ஒருங்கிணைத்தல், மருத்துவப் பராமரிப்பு மற்றும் மருத்துவ அமைப்புகளை ஒருங்கிணைத்தல் மிக அவசியம்” என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry