3.40 minutes Read: கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை ஏற்பட்டபோது, அதற்குப் பழிவாங்குவதாக நினைத்து தமிழ்நாட்டில் பிராமணர்கள் பூணூலை அறுப்போம், பிராமணர்கள் பூணூல் அணிவதை தடை செய்வோம் என ஒரு கூட்டம் கிளம்பியது.
பொதுவாக பாஜக-வை விமர்சிக்க நினைப்பவர்கள், பிராமணர்களை அச்சில் ஏற்றமுடியாதபடி வசைபாடுவது வழக்கமாக இருக்கிறது. இதை நுணுகிப் பார்க்கும்போது, பிராமண சமுதாயம் எளிமையான இலக்கு, எதிர்வினை இருக்காது என்பதே பலரது எண்ணமாக இருக்கிறது. இதை பிராமண சமுதாயம், இந்து மதம் என்று பகுத்தறிந்து அதன் வரலாற்றைப் பார்க்க வேண்டும்.
“பார்ப்பன வந்தேறிகள்” என்ற சொல்பதம் தமிழ்நாட்டில் மிகப்பிரபலம். சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, நீதிக் கட்சி காலம்தொட்டு இது வழக்கில் இருந்து வருகிறது. நீதிக் கட்சி, திராவிட இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர், வருகின்றனர். தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அவர்களுக்கு பிராமண எதிர்ப்பு தேவைப்பட்டது. ஈவெரா கூற்றுப்படி, பிராமணர்கள் வந்தேறிகளா? என்றால், ஆம். எப்போது வந்தார்கள்? தமிழின் முதல் காப்பிய நூலான தொல்காப்பியத்தில் (தோராயமாக கி.மு. 7 – 5) இதற்கு ஆதாரம் உள்ளது.
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றி
– 1560
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயும் காலை அந்தணர்க்கு உரிய
– 1561
பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவு இயல் மரபின் அறு வகையோரும்
களவின் கிளவிக்கு உரியர் என்ப
– 1436
பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணம் சான்ற அறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா
முன்னுதறக் கிளந்த கிளவியொடு தொகைஇத்
தொன்நெறி மரபில் கற்பிற்கு உரியர்
– 1437
ஈ.வெ. ராமசாமி மற்றும் அவரது அடியொற்றிகளின் பார்வையில், தொல்காப்பிய காலம் தொட்டே தமிழகத்தில் இருந்த பிராமணர்கள் வந்தேறிகள். ஆனால், கிபி 1336-ல் மாலிக் கபூர் தலைமையில் தமிழ்நாட்டில் கொள்ளையடிக்க வந்த இசுலாமியர்களும், வியாபாரத்துக்காக வந்து கி.பி. 1500களில் மேற்கு கடற்கரை பகுதிகளில் தங்கி மதமாற்றம் செய்த கிறித்தவர்களும், கிபி 1758 தொடங்கி தென்னிந்தியாவில் நிலங்களை கையகப்படுத்திய கிறித்தவர்களும் மண்ணின் மைந்தர்கள்.

சோழர்கள் காலத்தில் பிராமணர்கள் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். மேலும் மங்கலம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பல ஊர்கள் உள்ளன. இவை எல்லாம் பிரம்மதேயம்; அதாவது பிராமணர்களுக்கு மன்னர்கள் அளித்த ஊர்கள். இதுதவிர வேள்விக்குடி போன்ற பெயர்களிலும் யக்ஞ பூமி என்பதைக் காணலாம். இதன்மூலம் பார்ப்பனர்கள் நேர்மறை எண்ணங்களைப் பரப்பி ‘எல்லோரும் வாழ்க’ என்று பிரார்த்தித்து வந்தனர்.
தொல்காப்பிய காலத்து பிராமணர்கள்தான், தமிழ்நாட்டில் எப்போதுமே மிக எளிமையான இலக்கு (Soft Target). எனவேதான், பிராமணர்களின் பூணூல், குடுமி போன்றவை இவர்களது விளையாட்டுப்பொருள். இவர்கள் மீது பலப்பிரயோகம் செய்தாலும், இவர்களது தனிப்பட்ட கலாச்சாரத்தை கேலிக்கு உள்ளாக்கினாலும், யாரும் கேட்கமாட்டார்கள்.
ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவோரும் உடனடியாக பார்வையைத் திருப்புவது பிராமணர்கள் மீதுதான். எனவேதான் கர்நாடக ஹிஜாப் பிரச்சனைக்காக, தமிழ்நாட்டில் காஞ்சி சங்கர மடத்தில் இருந்து பூணூல் அறுக்கும் போராட்டம் தொடங்குவோம் என்று அறிவித்தது. பூணூல் அணிய தடை விதிப்போம் என முழங்குவது.
அடுத்ததாக, பிராமணர்களையும், பாஜக-வையும் இணைக்கும் அரசியல். கி.பி. 1132-ல் இசுலாமியர்கள் ஆட்சிக் காலத்தில் சிந்து – இந்துவாகி, பின்னர் இந்துஸ்தான் ஆனது. ஆனால் பண்டைய வட மொழி இலக்கியங்கள் பாரத், பாரதம் என்றே குறிப்பிட்டன. சைவம், வைணவம் என பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில், கி.பி. 1530-களில், நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில்தான் இந்திய சமயம் என்ற ஒன்று உருவானது. அதுவே தற்போதைய இந்து சமயம்.
சைவமும், வைணமும் தொன்று தொட்டு, சூழலுக்கு ஏற்ப தம்மை தகவமைத்துக் கொண்டுதான் வருகின்றன. சைவ, வைணவ மத குருமார்கள், மற்ற மதங்களின் செயல்பாடுகளிலோ, மதமாற்றங்களிலோ ஈடுபடுவடவில்லை. எனவே, சைவ, வைணவ சமயங்களுக்கோ அல்லது இந்து மதத்துக்கோ பிரத்யேகக் காவலன் தேவைப்படவில்லை.
இதை உணரும்போது, இந்துக்களுக்கு பாஜக மட்டுமே பாதுகாவலன் இல்லை என்பதை அறிய முடியும். மத மாற்றம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், இது உளறல் என எண்ணத் தோன்றலாம். அப்படிக் கருதமுடியாது, ஏனெனில் பல அழித்தொழிப்புகளை கடந்து இன்றும் தலைநமிர்ந்து நிற்பதுதான் இந்து மதம்.
பாஜக என்றால் பிராமணக் கட்சி, எனவே அது ஒடுக்கப்பட வேண்டும் என்று திராவிடவியலாளர்கள் கூறுவார்கள். பாஜக பிராமணக் கட்சியா? என்றால், சர்வ நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். ஒரு கட்சியில், குறிப்பிட்டதொரு சமுதாயத்தினர் அதிகம் இருந்தால், அதை அந்த சமுதாயத்துக்கான கட்சியாக எப்படி பார்க்க முடியும், கூற முடியும்? திராவிடவியாளர்களின் கூற்றுப்படி திமுக எந்த சமுதாயத்துக்கான கட்சி? பாஜகவுக்கு, தேசிய, மாநில அளவில், பிராமணர்களை தவிர்த்து இன்னபிற சமூகத்தினரும் தலைவர்களாக இருந்துள்ளனர், இப்போதும் இருக்கிறார்கள்.

முஸ்லிம் என்ற வார்த்தையை தாங்கியுள்ள கட்சிகள், இயக்கங்கள், தாங்கள் இசுலாமிய சமுதாய காவலர்கள் என எப்படி கூறிக்கொள்கின்றவோ, அப்படித்தான் பாஜகவும். இந்துத்துவா என்பது பாஜக-வின் அரசியல் சித்தாந்தம், அவ்வளவே. இந்துத்துவாவை இந்தியாவில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் ஏற்பதாக இருந்தால், நாட்டில் பாஜக-வைத் தவிர்த்து ஒன்றிரண்டு கட்சிகள் இருப்பதே ஆபூர்வம்.
கடந்த 7-8 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்து மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் பெருமளவில் அறியப்படாததால், இப்போதைய சூழல் சிலருக்கு புதிதாகவும், பலருக்கு வெறுப்பாகவும் இருக்கிறது. இதை மறுதலிப்பதாகவும், பாஜக-வை எதிர்ப்பதாகவும் நினைத்து பிராமணர்கள் மீது பகைமையை, வெறுப்பை உமிழ்வதுதான் இப்போது நடந்து வருகிறது. பாஜக மத அரசியல் செய்வதாகக் கூறுபவர்கள்தான், பூணூல் அறுப்போம், பூணூல் அணிய தடை விதிப்போம் என்கிறார்கள்.
பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின்போது பிராமணர்களை படிக்க அனுமதித்தது மிஷனரிகள்தான். அப்போது, பிராமணர்களுக்கு மட்டுமே கல்விகற்க அனுமதி தரும் நீ, எங்களுக்கு கல்வி தர மறுப்பது ஏன் என்று மிஷனரிகளிடம் கேட்கவில்லை. சமூக நீதி என்றாலே, பிராமண எதிர்ப்பு என்றாகவிட்டதால், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அரசியல் அங்கீகாரமும் கிடையாது. இராஜாராம் மோகன்ராய், பி.எம்.மலபாரி, நாராயண குரு, அய்யா வைகுண்டர், வைத்தியநாத ஐயர், பாரதியார், வஉசி, வவேசு ஐயர், பசும்பொன் திருமகனார் உள்ளிட்டவர்களைவிடவா ஈ.வெ. ராமசாமி சீர்திருத்தம் செய்துவிட்டார்?

எளிமையான இலக்கு, சாதிச் சிறுபான்மை, ஆயுதமேந்தி சண்டையிடத் தெரியாது போன்ற காரணங்களால்தான் தமிழ்நாட்டில் பிராமணர்கள் மீது பலப்பிரயோகம் செய்வது ஒரு நூற்றாண்டாக வழக்கத்தில் இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு, பிராமணர்களுக்கு மட்டுமானது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டால் பயன்பெறும் இன்னபிற சாதியினர், நாங்களும்தானே பயன்பெறுகிறோம் என வாய் திறக்க மறுக்கிறார்கள். பிராமணர்கள் ஒற்றுமையாக இருந்து “சாதிச் சிறுபான்மை” அந்தஸ்து பெற்றால் மட்டுமே, வரும் சந்ததிகளாவது தமிழகத்தில் வாழ முடியும்.
– “கோ”, பத்திரிகையாளர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry