இந்து வாக்குகளுக்கு வேட்டு வைக்கும் திருமாவளவன் முக்கியமா? ஸ்டாலினை கேள்வி கேட்கும் திமுக-வின் அடிமட்டத் தொண்டன்!

0
6

வணக்கம் தலைவரே! கட்சியில் இருக்கும் சொரணையற்ற இந்துக்களில் ஒருவன் எழுதுவது! மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். குடும்பச் சுமையை உதயண்ணாவிடமும், கட்சிச் சுமையை மருமகன் சபரீசன் மற்றும் பிரசாந்த் கிஷோரிடமும் கொடுத்துவிட்டீர்கள். அறிக்கை எழுத திருமாவேலன் போன்றோர் இருக்கிறார்கள்.

நீங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதுமா? எங்களைப் போன்ற தொண்டர்கள்…! நான் சொல்வது என்னைப் போன்ற இந்துத் தொண்டர்களை. மறைந்த தலைவர், உங்கள் தந்தை, நம்மை(இந்துக்களை)திருடர்கள் என்றார், (நீங்களும் இந்து என்பதால் நம்மை என சொன்னேன்), ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தான் என கேட்டார்? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

என்னைப் போன்ற இந்து தொண்டர்களை உங்கள் தந்தை காயப்படுத்தினார், ஆனால், காயத்தை ஆறவிடுவார், ஆற்றிவிடுவார். குறிப்பிட்ட இடைவெளியில் நாங்கள் அவர் சொன்னதை மறந்து, (சமூக ஊடகங்களின் தாக்கம் இல்லை) வழக்கம்போல உதயசூரியன் சின்னத்தை தேடி வாக்களிப்போம்.

இப்போது நீங்களோ, இந்துக்களை ஏகடியம் செய்வது, காயப்படுத்துவது ஆகியவற்றை மட்டுமே அரசியலாக செய்கிறீர்கள். இஸ்லாமிய திருமண நிகழ்ச்சிக்கு சென்று, நமது திருமண சடங்குகளையும், பிராமணர்களையும் மிகவும் கேவலமாக விமர்சித்தீர்கள். திருமாவளவன், சுப. வீரபாண்டியன், கி. வீரமணி, மணிமாறன் போன்றவர்கள் உங்கள் குரலாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள்.

திருமாவளவன் (இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்) தற்போது கிளப்பியுள்ள சர்ச்சையை பற்றி தங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன். இந்துக்களை கேவலப்படுத்துவது அவருக்கு புதிதல்ல. மனுஸ்மிருதி என ஒன்றை இப்போது ஹாட் டாப்பிக்காக மாற்றியுள்ளார்.

மனுஸ்மிருதியை நீங்கள் படித்திருக்கிறீர்களா? நான் படித்ததில்லை, ஏன், இப்போதுள்ள பிராமணர்களுக்கே அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கும்போது, சில ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதிய மனுஸ்மிருதியானது,  பெண்கள் அனைவரையும் விபச்சாரிகளாக பாவிக்கிறது என சொல்கிறார். இந்துக்களின் காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் போலீஸ் வழக்கு போட்டிருக்கிறது.

உடனடியாக உங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டதே! “திருமாவளவன் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீது வழக்குப் பதிவதா? வரலாற்றுப் பின்னணியைத் தானே அவர் எடுத்துரைத்துள்ளார் என பொங்கினீர்கள்.

அப்படியானால், இப்போதும் நாம் மனுஸ்மிருதி சொல்லியிருக்கிறபடிதான் வாழ்கிறோமா? வரலாற்று பின்னணி அடிப்படையில் நமது குடும்ப பெண்கள் விபச்சாரிகள் என திருமாவளவன் சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா? என கேட்கத் தோன்றுகிறது. திருமாவளவனுக்கு, வைகோ, . சிதம்பரம் போன்றோரும் வக்காலத்து வாங்கியிருக்கிறார்கள். இதை அவர்களும் ஏற்கிறார்கள் போலும்.

மனுஸ்மிருதியை தடை செய்யுமாறு திருமாவளவன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். நடைமுறையில் இல்லாத ஒன்றை தடை செய்ய அவர் கோருவதும், அவருக்கு நீங்கள் தோள் கொடுப்பதும், சில மாதங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். நமது கட்சியைப் பற்றி அவர் பேசியதையும், வைகோ பேசியதையும் சற்றே ரீவைண்ட் செய்து பாருங்கள். சமூக நீதி என்றே சொல்லே நமக்கானது என நாம் பேசிவருகிறோம். ஆனால், திருமாவளவனின் சீடர் வன்னியரசு, கலைஞர் எங்களுக்கு பொதுத்தொகுதியை கொடுக்க மறுத்தார் என்று பொதுவெளியில் போட்டு உடைத்துவிட்டார்.

தலைவரே, ஏற்கனவே சொன்னதுபோல, உங்கள் அப்பா இந்துக்களை திட்டினாலும், அதை சரிசெய்வதற்கான வித்தையை அறிந்து வைத்திருந்தார். ஆனால் இப்போதோ, நீங்கள் தொடங்கி, வீரமணி, திருமாவளவன், சுப. வீரபாண்டியன் இப்படி பலரும் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தால், எவ்வளவுதான் தாங்குவது? உங்கள் அப்பா காலத்தில் அவர் மட்டும்தான் விமர்சிப்பார், இப்போது உங்களைச் சார்ந்தவர்கள் மைக்கை பார்த்தாலே, இந்துக்களை திட்டுகிறார்கள், கேவலப்படுத்துகிறார்கள்.

நீங்கள், ரம்ஜான் வாழ்த்து சொல்லும்போதும், கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லம்போதும், மனம் ஏங்கும், நமது பண்டிகைக்கும் தலைவர் வாழ்த்து சொல்வாரா என்று. இதுவரையில் ஏமாற்றம்தான்.  வீரமணி, திருமாவளவன், சுப. வீரபாண்டியன், வைகோ போன்றவர்கள் நமது நலம் விரும்பிகள் அல்ல. நாமே தேடி வைத்துக்கொள்ளும் ஆப்பு.

இனிமேலும், அவர்கள்தான் முக்கியம் என நினைத்து, அவர்களது இந்து எதிர்ப்பு போக்குக்கு வாழ்த்து சொல்லி வந்தீர்கள் என்றால், என்னைப் போன்ற இந்து உடன்பிறப்புகள் மாற்றி யோசிப்பதை(மாற்றுக் கட்சிக்கு வாக்களிப்பதை) தவிர வேறு வழியில்லை. ஒன்று, நூறாகவோ, ஆயிரமாகவோ, லட்சமாகவோ மாறாமல் காக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. திருமாவளவன் போன்றோரால், சொரணை வந்துவிட்ட, இந்து திமுக தொண்டன் என்பதால் இதனை கூறுகிறேன்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry