போதையில் தொடர்ந்து டார்ச்சர்! கணவர் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி!

0
272

மதுபோதையில் அன்றாடம் அடித்து துன்புறுத்தியதுடன், பாலியல் தொந்தரவு கொடுத்த கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை மனைவி ஊற்றிய சம்பவம் ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டானைச் சேர்ந்தவர் நடராஜன் (30). இவருடைய மனைவி குப்பம்மாள்(28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பேருந்துகளில் தின்பண்டங்களை விற்கும் வேலையில் நடராஜன் ஈடுபட்டு வந்தார். அத்துடன் குடிக்கு அடிமையான இவர், சம்பாதித்த பணத்தை முழுவதும் மதுவிற்கே செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அவரது மனைவி குப்பம்மாள் கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தனது மனைவியை நடராஜன் கொடுமைப்படுத்தத் துவங்கியுள்ளார். இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு முறை குப்பம்மாள் புகார் கூறியுள்ளார். இதையடுத்து நடராஜனை அழைத்து போலீஸார் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு போதை தலைக்கேறிய நடராஜன், குப்பம்மாளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குப்பம்மாள், கொதிக்கும் ரசத்தை நடராஜன் முகத்தில் ஊற்றினார். இதில் நடராஜன் முகம் வெந்து போனது.

இதனையடுத்து, மனைவி மீது புகார் கொடுக்க குடிபோதையில் நடராஜன் காவல் நிலையம் சென்றார். கொதிக்க கொதிக்க ரசத்தை தன் முகத்தில் ஊற்றிய மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறு போதையில் புலம்பிய அவர் திடீரென சாலையில் சென்று படுத்தார்.

சாலையின் நடுவில் படுத்து கிடந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தினார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இரண்டு மணி நேரமாக போதையில் நடராஜன் அட்டகாசம் செய்துள்ளார். இதையடுத்து அவரை மேல்சிசிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மீது புகார் கொடுக்க வந்து ரகளையில் ஈடுபட்ட நபரால் புதுச்சேரி – கிருஷ்ணகிரி சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொதிக்கும் ரசம் பட்டதில் முகம் வெந்து காணப்பட்ட நடராஜனை அங்கு சுற்றி இருந்தவர்கள் பரிதாபத்துடன் பார்த்து சென்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry