அதிமுகவுக்கு ஒற்றை தலைமை! ஒரே குரலில் ஒலிக்கும் நிர்வாகிகள்!

0
193

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதில், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 152 பேர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீரசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை தேவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஒற்றை தலைமை தேவை என்பதை பெரும்பாலான மாவட்ட செயலர்கள் வலியுறுத்தி உள்ளனர். தொண்டர்கள், நிர்வாகிகளின் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமை. இது காலத்தின் கட்டாயம். ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும். இதற்கு செயல்வடிவம் கொடுப்பதையும் கட்சி தான் முடிவு செய்யும். யார் வேண்டுமானாலும் ஒற்றை தலைமையாக இருக்கலாம்.

இந்த கூட்டத்தில் சசிகலா குறித்து ஆலோசிக்கப்பட்டதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், 
சசிகலாவுக்கு கட்சிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? கட்சியில் இல்லாதவர்களை பற்றி பேச வேண்டியதில்லை. சசிகலா குறித்து விவாதிக்க வேண்டிய தேவை என்ன? கட்சிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் குறித்து விவாதித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.


இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அதிமுக ஓட்டு சதவீதம் குறையாது. அதிமுகவுக்கு அழிவு என்பது கிடையாது. 100 ஆண்டுக்கு மேல் கட்சி இருக்கும். வெற்றி தோல்வி நாணயத்தின் இருபக்கம் போல், மாறி மாறி வரும். தற்போது 3 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் தோல்வியை சந்தித்துள்ளோம். வரும் லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். நாங்கள் தான் முதன்மையான கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மொபைல் போன் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. மொபைல் போனை பாதுகாவலர்கள் வாங்கி வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்.பி., மைத்ரேயன் கூட்டத்தில் பங்கேற்காமல் கிளம்பி சென்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry