தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகுமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

0
88
The Kerala Story features actress Adah Sharma.

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் தயாராகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில், அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த திரைப்படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தில் இடம்பெற்ற 10 சர்ச்சை காட்சிகளை நீக்கி மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தப் படத்தின் டீசர் கடந்த நவம்பர் 2-ந் தேதி வெளியானது. அதில் அதில், கேரளாவில் 32,000 பெண்கள் காணாமல்போனதன் பின்னணியை இந்தப் படம் வெளிக்கொண்டுவருவதாகக் கூறப்பட்டது. அனைவரின் கண் முன்பாகவே, சாதாரண பெண்களை பயங்கரவாதிகளாக மாற்றும் ஆபத்தான விளையாட்டு கேரளாவில் நடைபெறுவதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

Also Read : நிலக்கரிக்காக அடுத்தடுத்து ஏலம் விடப்படும் கிராமங்கள்! மாநில நிர்வாகத்துக்கு தெரியாதா? பாஜகவுடன் கைகோர்த்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா?

இந்த நிலையில்தான் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் டிரெய்லர் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில், கேரளாவிலுள்ள ஒரு கல்லூரி விடுதியில் ஒரே அறையில் நான்கு பெண்கள் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் முஸ்லிம் பெண். அந்த முஸ்லிம் பெண்ணைப் பின்பற்றி மூளைச்சலவை செய்யப்பட்டு மற்றவர்களும் முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்காக வேலை செய்ய நாடு கடத்தப்படுவதாகவும் காட்சிகள் வருகின்றன.

ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற இந்துப் பெண் வேடத்தில் அடா ஷர்மா நடித்திருக்கிறார். ‘லவ் ஜிகாத்’ மூலமாக காதல் வலையில் வீழ்த்தப்பட்டு முஸ்லிம் பெண் ஃபாத்திமாவாக அவர் மதமாற்றம் செய்யப்படுகிறார். பிறகு, ஷாலினி உட்பட 48 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்காக வேலை செய்ய வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் வருகின்றன.

மற்றொரு காட்சியில், பிற பெண்களுடன் உறவை ஏற்படுத்தி அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு முஸ்லிம் தோற்றத்தில் இருக்கும் சில ஆண்கள், இளைஞர்களிடம் கூறுகிறார்கள். பிறகு, ஷாலினி உன்னிகிருஷ்ணன் மதம் மாற்றப்படுதல், திருமணம், பாகிஸ்தானுக்கு கடத்தப்படுதல் என்று காட்சிகள் வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் கேரளா, இஸ்லாமிய மாநிலமாக மாறும் என்று கேரளாவின் முன்னாள் முதல்வர் ஒருவர் கூறியிருக்கிறார் என்கிற ஒரு வசனம் டிரெய்லரில் இடம்பெற்றிருக்கிறது.

அதாவது, கேரளாவிலுள்ள இந்துப் பெண்கள், முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மையக்கதை.
இதுபோன்ற விவகாரமான உள்ளடக்கத்தைக் கொண்ட இப்படத்தில், ‘பல உண்மைக் கதைகளால் உந்தப்பட்டு எடுக்கப்பட்ட படம்’ என்ற வாசகமும் இருக்கிறது. இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்து எதிர்ப்புகள் உருவாகும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே, தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை அனுமதிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு மாநில உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில், சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைக் கெடுக்கும் இதுபோன்ற திரைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கக் கூடாது என்றும் முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எஸ்.டி.பி.ஐ. தமிழ்நாடு பிரிவுத் தலைவர் நெல்லை முபாரக், தி காஷ்மீர் ஃபைல்ஸ், (2023ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்) புர்கா, தி கேரளா ஸ்டோரி போன்ற படங்களில் முஸ்லிம் சமூகம் மோசமாகச் சித்தரிப்பது தொடர்ந்து வருவதாகக் கூறினார்.

Also Read : கள்ளச்சாராய விற்பனை அமோகம்! 2 பாக்கெட் வாங்கினால் முட்டை இலவசம்! தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா? என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!

எனவே, தமிழகத்தில் திரைப்படத்தை தடை செய்வது குறித்து, உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.

படத்தில் கூறுவதுபோல எதுவும் கேரளாவில் நடக்கவில்லை. மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளனர்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருப்பதால் இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நாளை மறுநாள் (மே 5-ம் தேதி) படம் வெளியாகவிருக்கிறது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதால், அங்கு இந்தப் படம் வெளியாகுமா என்பது தெரியவில்லை. தமிழகத்திலும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், தடை செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களில் படம் வெளியாவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேநேரம், திரையரங்குகளில் கேரளா ஸ்டோரி படம் வெளியாவதை தடை செய்தாலும், OTT தளத்தில் வெளியானவுடன் மக்கள் பார்ப்பதை யார் தடுக்க முடியும் என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry