உலக சைக்கிள் தினம்! சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு! சுற்றுச்சூழல், உடல் நலம் மேம்படும் அற்புதம்!

0
286

போக்குவரத்திற்கு பயன்பட்ட சைக்கிள்கள் இன்று மோட்டார் சைக்கிள்களின் ஆதிக்கத்தால் அழிவைச் சந்தித்து வருகிறது. அதனை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியாக ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி உலக சைக்கிள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பதினேழாம் நூற்றாண்டில் பொழுதுபோக்காக பிரான்ஸைச் சேர்ந்த கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte mede de Sivrac) உருவாக்கியது தான் சைக்கிள். இரண்டு மரத்துண்டுகளை வைத்து விளையாட்டுத்தனமாக சைக்கிளுக்கு அவர் உருவம் கொடுத்தார். அப்போது அவருக்குத் தெரியாது, பின்னாளில் இது பூமிக்கு எவ்வளவு தேவையான பொருளாக உருமாறப் போகிறது என்று.

தான் உருவாக்கிய அமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, 1791ம் ஆண்டு மரச் சைக்கிள் ஒன்றை உருவாக்கினார் கோம்டி. இந்த சைக்கிளுக்கு பெடல்கள் கிடையாது. காலால் தரையை உந்தித் தள்ளி தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும்.1794ம் ஆண்டு தனது கண்டுபிடிப்பை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார் கோம்டி.

பின்னர் மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் ( karl Von Drais). இவர் 1817ம் ஆண்டு மரத்தினால் திசைமாற்றியுடன் கூடிய முதல் மிதிவண்டியை உருவாக்கினார். சுமார் 30 கிலோ எடை கொண்டதாக அந்த சைக்கிள் இருந்தது. இந்த சைக்கிள் 1818- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட மிதிவண்டி இதுதான்.

மரத்தால் மட்டுமே செய்யப்பட்டு வந்த மிதிவண்டிகளுக்கு மாற்றாக, லண்டனைச் சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி சைக்கிளைத் தயாரிக்க முயற்சி செய்தார். 1818-ஆம் ஆண்டு அவர் சில குறிப்பிட்ட பாகங்களில் உலோகப்பொருளை பயன்படுத்தி புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். அதன் நேர்த்தியான தோற்றம் மற்றும் எளிதில் உருளக்கூடிய சக்கரம் ஆகியவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், டென்னிஸ் செய்த சைக்கிளிலும் பெடல் இல்லை. உலகின் முதல் பெடல்களைக் கொண்ட மிதிவண்டியை, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவர் உருவாக்கினார். 1839ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவரது சைக்கிள் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்ததால், வரலாற்றில் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமை கிர்க்பாட்ரிக்கிற்குக் கிடைத்தது.

இந்நிலையில், உடல் நலம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்ற போக்குவரத்து முறை சைக்கிள் என்பதால், சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க ஆண்டுதோறும் சைக்கிள் தினம் கொண்டாடப்படும் என்று 2018-ம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகத்தில் வெளியாகும் கார்பன் அளவில் 24 சதவீதம், மேட்டார் வாகனங்களில் இருந்து வெளியாகிறது. எனவே, இதற்கு மாற்றான போக்குவரத்து முறையை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கார்பன் அளவை குறைக்க இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து திட்டங்களை அனைத்து நாடுகளும் செயல்படுத்தி வருகிறது. இதன்படி நகரங்களில் சைக்கிள் ஓட்டுவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

ஒருவர் தனது காரை விட்டு விட்டு சைக்கிளை பயன்படுத்துகிறார் என்றால், அவர் ஓரு கிலோ மீட்டருக்கு 150 கிராம் கார்பன் வெளியாவதை தடுத்துள்ளார். 7 கி.மீ சைக்கிள் ஓட்டினால் 1 கிலோ கார்பன் வெளியாதை தடுக்கிறார். எனவே, கார்பன் வெளியாதை தடுப்பதில் சைக்கிள் பயன்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் காரணமாக மனிதர்கள் உடற்பயிற்சி செய்வது குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், சர்க்கரை நோய்களின் பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. எனவே, உலகம் முழுவதும் உடற்பயிற்சி அவசியத்தை உணர்த்த உலக சுகாதார நிறுவனம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

தாத்தா, பாட்டிகாலத்தில் பள்ளி, அலுவலகங்கள், வெளியிடங்களுக்கு சென்று வர வசதியாக வீட்டுக்கு வீடு கண்டிப்பாக சைக்கிள் இருந்தது. காலபோக்கில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பைக், கார்களின் ஆதிக்கம் காரணமாக சைக்கிள் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது.

சைக்கிள் இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாகத் தான் மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. காரணம் உடல் ஆரோக்கியம். குறைந்த நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அதிக கலோரிகளை எரிக்க முடியும். உடல் எடையை எளிதாக குறைக்க உதவும்.

2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் சைக்கிளிங் உள்ளிட்ட உடற் பயிற்சிகளை அதிகரிப்பதற்கான செயல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் தினசரி 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் வாரத்திற்கு 1,000 கலோரிகளை எரித்து உடல் நலத்துடனும், 1 கிலோ கார்பனை குறைத்து சுற்றுச்சூழல் நலமாக இருக்க உதவுவோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry