இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு அதிகளவில் ஏற்படும் புற்றுநோயாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி ‘நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு’ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் இத்தினத்தின் நோக்கம், Close the care gap என்பதாகும்.
இந்தத் தினத்தில் நுரையீரல் புற்றுநோய் யாருக்கெல்லாம் ஏற்படலாம், இதைத் தடுக்க முடியுமா, முடியுமெனில் என்ன செய்ய வேண்டும், இதன் சிகிச்சைகள் எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னையில் உள்ள அப்போலோ புரோடான் கேன்சர் மையத்தின் புற்றுநோய் நிபுணர் மருத்துவர் காதர் உசைன் புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டி.
Also Read : புற்றுநோய் சிகிச்சையில் பெரும் திருப்புமுனை! 5 ஆண்டுகளில் தடுப்பூசி வெளிவரும் என அறிவிப்பு!
நுரையீரல் புற்றுநோய் யாரையெல்லலாம் அதிகம் பாதிக்கும்?
புகைப்பிடிப்பவர்கள்தான் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடும். 100-ல் கிட்டத்தட்ட 90 பேருக்கு, இந்த வகைப் புற்றுநோய் புகையிலையால்தான் வருகிறது. மற்றபடி மோசமான பேசிவ் ஸ்மோக்கிங்கிற்கு உள்ளாகும் நபர்கள் (நெருங்கிய ஒருவருக்கு உள்ள சிகரெட் பழக்கத்தால், அதிக சிகரெட் புகையை தானும் சுவாசிக்க நேர்ந்து, அதனால் பாதிக்கப்படுவது), ரசாயண / பெட்ரோல் / ரப்பர் போன்ற தொழிற்சாலைகளில் பணிசெய்யும் நபர்கள், ஆஸ்துமா – பிரான்கிடிஸ் எனப்படும் நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள், மரபணுவால் குடும்ப வழியாக பாதிக்கப்படும் நபர்கள் ஆகியோருக்கும் இந்தப் புற்றுநோய் வரக்கூடும்.
அறிகுறிகள் என்னென்ன?
நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் சிரமம். இருப்பினும் வருடம் ஒருமுறை சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்துகொண்டால் நுரையீரல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறியலாம். 10 – 15 வருடங்களாக புகைப்பழக்கம் இருப்பவர்கள் வருடம் ஒருமுறை கட்டாயம் சிடி ஸ்கேன் எடுத்து நுரையீரல் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய வேண்டும். இவர்களை போலவே யாருக்கெல்லாம் வரலாம் என்ற லிஸ்ட்டில் இருக்கும் பிறரும் கவனமாக இருக்க வேண்டும்.
இதைத் தொடக்கத்தில் கண்டறிவதில் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. அதனாலேயே இந்தியாவில் அதிகம் பேரை தாக்கும் புற்றுநோயாக நுரையீரல் புற்றுநோய் உள்ளது. தொடக்க நிலைக்கு அடுத்த நிலையில் இப்பாதிப்பு ஏற்படுவோருக்கு சில அறிகுறிகள் தெரியலாம்.
இருமலின்போது ரத்தம், பசி குறைதல், உடல் எடை குறைதல், மூச்சுத்திணறல், சோர்வு, தொடர் இருமல், நிமோனியா போன்ற பாதிப்புகள், புதிதாக வீசிங் தொந்தரவு, பெருமூச்சு அல்லது இருமலுடன் கூடிய நெஞ்சு வலி, மிக மோசமான இருமல் போன்றவை 2ம் நிலை பாதிப்புக்கான அறிகுறிகள். இவற்றில் எது வாரக்கணக்கில் தொடர்ந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் முக்கியம்.
சிகிச்சைகள் என்னென்ன?
முன்பெல்லாம் ஓபன் சர்ஜரி செய்து புற்றுநோயை குணப்படுத்தினார்கள். இப்போது அப்படியல்ல. சின்ன சின்ன துளைகள் மூலம் எளிமையாக அறுவை சிகிச்சை செய்து நுரையீரல் புற்றுநோயை சரிசெய்து விடலாம். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இப்படியான சிகிச்சைகளை மேற்கொண்டால், 2 – 3 நாட்களிலேயே நோயாளிகள் வீட்டுக்கு சென்றுவிடலாம்.
ரோபோடிக் சிகிச்சைகள் மூலம் இதை இன்னும் எளிமைப்படுத்தலாம். இருப்பினும் இவையாவும் தொடக்க நிலை பாதிப்புகளுக்குத்தானே தவிர, தீவிர நிலைக்கு அல்ல. புற்றுநோய் தீவிரமடையும் போது, சிகிச்சைகளும் தீவிரமாகும். கீமோ வரை செல்லும். ஆகவே பிற புற்றுநோய்களைப்போல, எவ்வளவு விரைந்து கண்டறிகிறோமோ அவ்வளவு நல்லது.
Also Read : உடல் பருமன் அறிகுறிகள்; ஏற்படுத்தும் நோய்கள்! Obesity: What You Need to Know
இந்நோயாளிகளுக்கு கீமோ சிகிச்சை போலவே இம்யூனோதெரபி போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படும். இம்யூனோ தெரபி என்பது, உடலிலுள்ள புற்றுநோய் திசுக்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது. இதன் மூலம் உடலே இப்புற்றுநோய் பாதிப்புக்கு எதிராகப் போராடும். இந்த இம்யூனோ தெரபி, மருந்து – மாத்திரைகள் – ஊசி முதல் உணவு வரை எல்லா வகையிலும் நோயாளிக்கு கொடுக்கப்படும். இவைதான் அடுத்தடுத்து உடலை மீண்டும் புற்று பாதிப்பு தாக்காமல் இருக்க உதவும்.
நுரையீரல் புற்றுநோயை தடுப்பது சாத்தியமா?
தடுப்பது சாத்தியமில்லை. யாருக்கு நோய் பாதிப்புக்கான சாத்தியக்கூறு உள்ளதோ, அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புகைப்பிடிப்பது நிச்சயம் கூடாது. புகைப்பிடிக்க தொடங்கி பல வருடங்கள் கழித்துதான் நோய் வருமென நினைத்து, புகைப்பதை நிறுத்துவதற்கு காலதாமதம் செய்யக்கூடாது.
சிகரெட் பழக்கத்தை விட முடியாமல் தவிப்போர், மருத்துவ உதவியை நாடவும். எவ்வளவு முன்கூட்டியே நோயை கண்டறிகிறோமோ அவ்வளவு விரைந்து எளிமையாக அதிலிருந்து மீளலாம் என்பதால் வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை கட்டாயம்” என்றார்.
Recommended Video
தண்ணீருக்கும் கேன்சருக்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பு! Powerful Truth about Cancer | Listen Fully
மருந்து,மாத்திரை இல்லாம Lungsஐ காப்பாத்திக்கோங்க|Breathing Exercise for #Lungs|AkilaBalaji
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry