பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது! அவதூறு செய்தி வெளியிட்டதாக புகார்! கருத்துச் சுதந்திரம் எங்கே என பாஜக-வினர் கேள்வி?

0
127

தமிழ்நாடு அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டதாக பிரபல யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்யபட்டுள்ளார். விசாரணைக்குப் பின்னர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு அவர் கொரோனா பரிசோதனைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரையின் பிரபல கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றிய மாரிதாஸ் வலதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாட்டில் அரசியல் சார்ந்து இயங்கும் யூ டியூபர்களில் பிரபலமானவர். இவர் தனது Maridhas Answers என்ற யூ டியூப் சேனலில் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவன் மணிகண்டன் மர்ம மரணம் குறித்து கடந்த 7-ம் தேதி மாரிதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சாத்தான்குளம் சம்பவத்துக்காக குரல் கொடுத்த திமுக-வும், முதலமைச்சரும், ஊடகங்களும் மணிகண்டன் மரணம் குறித்து குரல் கொடுக்காததே ஏன் என அந்த வீடியோவில் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வீடியோவில் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைகூற முடியாது என்று மாரிதாஸ் கூறியிருந்தார்.

இந்த வீடியோ பதிவு ஆளும்கட்சி முகாமில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயரிழந்தனர். பிபின் ராவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சிலர் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டனர். அதேபோல் பிபின் ராவத்தை சிறுமைப்படுத்தும் விதமாக #RestInHell என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

இதுபற்றி மாரிதாஸ் டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில் அரசை அவர் விமர்சித்திருந்தார். இதையடுத்து, சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக மாரிதாஸ் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை போலீசார் கைது செய்யப்போவதாக கிடைத்த தகவலை அடுத்து, மதுரை புதூர் சூர்யா நகரில் உள்ள மாரிதாஸ் வீட்டில் பாஜக நிர்வாகிகள் குவிந்தனர். கைது செய்ய வந்த காவல் துறையினரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் மாரிதாஸ் கைதை கண்டித்து மறியல் செய்த பாஜக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. அவர்களை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் மாரிதாஸை கைது செய்து புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாரிதாஸை போலீசார் அத்துமீறி கைது செய்துள்ளனர்; எதற்காக கைது செய்தார்கள் என எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை என மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.

153A, 504, 505(1)(a), 505(1)(b) ஆகிய பிரிவுகளின் கீழ் மாரிதாஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதூர் காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸை, வரும் 23 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி அவர் ஆணையிட்டுள்ளார்.  இதனிடையே, சமூக ஊடகங்களில், பாஜக-வினரும், வலதுசாரி ஆதராவளர்களும் #WeSupportMaridhas என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மாரிதாஸ் கைது குறித்து பேசிய மதுரை பாஜக-வினர், “தமிழ்க் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை கடுமையாக  இழிவுபடுத்திய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டபோது, கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக பலரும் பேசினார்கள். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தற்போது ஆளும்கட்சியாக இருக்கும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குரல்கொடுத்தபோது, கல்லூரி மாணவன் மணிகண்டனம் மரணத்தில் மவுனமாக இருப்பது ஏன் என்று மாரிதாஸ் கேட்டார். அதேபோல், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத்தை பலர் விமர்சித்ததால், உணர்ச்சிப் பெருக்கில் அவர் டிவிட்டரில் கருத்து பதிவிட்டார். அரசுக்கு எதிராக பேசினால், கருத்து பதிவிட்டால், அவர்களை கைது செய்வது, கருத்துச் சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவாலாகவே தெரிகிறது” என்று கூறினார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*