கோரிக்கையை ஏற்பதாக மத்திய அரசு கடிதம் அனுப்பிய நிலையில், நாளை மறுதினத்துடன் (11-ம் தேதி) போராட்டத்தை முடித்துக்கொள்வதாக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து, டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
இந்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த மத்திய அரசு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதாவை நிறைவேற்றியது.
எனினும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ளாததால் மீண்டும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாரானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போராட்டக் குழுவினரிடம் தொலைபேசியில் பேசினார். அவரிடம் மீதம் உள்ள கோரிக்கைகளை தெளிவாக விளக்க ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை விவசாயிகள் அமைத்திருந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க தயார் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான கடிதம் விவசாய சங்கங்களின் குழுவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளைத் திரும்பப் பெறவும் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒப்புக்கொண்டன.
இதனையடுத்து விவசாயிகள் டிசம்பர் 11 ஆம் தேதி சனிக்கிழமையன்று போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பப் போவதாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கூடாரங்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இன்று மாலை 5:30 மணிக்கு வெற்றி பிரார்த்தனை நடத்தவுள்ளனர்.
11 ஆம் தேதி காலை 9 மணியளவில் டெல்லி எல்லையில், சிங்கு மற்றும் திக்ரி போராட்டப் பகுதிகளில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். பஞ்சாப் விவசாயத் தலைவர்கள் வரும் 13 ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா வரும் 15 ஆம் தேதி டெல்லியில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தவுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஜனவரியில் கூடி பேசுவோம் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*