சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி! புகார் அளித்தவர் லாரி ஏற்றிக் கொலை!

0
137

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே காளிபாளையம் என்ற இடத்தில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. உரிமை முடிந்த பின்னரும் அந்த குவாரி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக, காளிபாளையம் வெட்டுக்காட்டு தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெகநாதன்(52) என்பவர் கனிமவளத் துறைக்கு புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய கனிமவளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் தலைமையிலான அதிகாரிகள், உரிமமின்றி இயங்கிய கல்குவாரியை இழுத்து  மூட உத்தரவிட்டனர். இதற்கு முன்னரும் பலமுறை குவாரி குறித்து ஜெகநாதன் புகார் அளித்திருப்பதால் ஆத்திரத்தில் இருந்த செல்வகுமார், தற்போது குவாரியை மூட வைத்ததால் பழிவாங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

Also Watch : சுயலாபத்திற்காக ஏன் இப்படி செய்ய வேண்டும்? Babu Murugavel Ex MLA

இந்த நிலையில் ஜெகநாதன் நேற்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். காருடையம்பாளையம் என்ற ஊரில் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் ஜெகநாதனின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது விபத்து அல்ல, முன் விரோதம் காரணமாக நடந்த கொலை என்று ஜெகநாதன் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இறந்து போன விவசாயி ஜெகநாதனின் மகன் அபிஷேக் செய்தியாளர்களிடம் பேசும்போது, கல்குவாரி உரிமையாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி வந்தார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். ஜெகநாதன் மீது மோதிய லாரி செல்வகுமாருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள க .பரமத்தி போலீஸார், குவாரி உரிமையாளர் செல்வகுமார், லாரி ஓட்டுநர் சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளனர். குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர், குவாரிக்குச் சொந்தமான லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– ஆனந்தகுமார், செய்தியாளர், கரூர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry