தமிழ்நாட்டின் கிராமப் பொருளாதாரத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக முக்கியப் பங்குவகிப்பது பால் உற்பத்தி. விவசாயம் கையைச் சுடுகிறபோதெல்லாம் விவசாயிகளைக் காப்பாற்றும் காமதேனுவாகக் கறவை மாடுகளே உள்ளன.
இந்தப் பின்னணியில், பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை, நுகர்வோருக்குத் தரமான பால் பொருள்களைத் தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்வது ஆகிய உயரிய நோக்கங்களோடு ஆரம்பிக்கப்பட்ட ஆவின் நிறுவனம், இன்று பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது.
கிராமப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம், மாவட்ட அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம், மாநில அளவிலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆகிய மூன்றடுக்கு அமைப்பின் மூலம் ஆவின் எனும் மாபெரும் கூட்டுறவு நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டுவருகிறது.
Also Read : ஆவின் பால் கொள்முதல் குறைவு! விநியோகத்தில் பெரும் குளறுபடி! முதலமைச்சர் தலையிட பாமக வலியுறுத்தல்!
எனினும், 12,000க்கும் மேற்பட்ட பால் ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்கள் 9,673ஆகக் குறைந்துவிட்டன; பால் கொள்முதலோ நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் என்ற நிலையிலிருந்து சுமார் 30 லட்சம் லிட்டர் என்ற நிலைக்கு இன்று வந்துவிட்டது.
இந்நிலையில், அதிகளவில் பால் சார்ந்த பொருள்களை உற்பத்திசெய்யவும் பிற மாநிலங்களில் சந்தைப்படுத்தவும் அதிநவீனத் தொழில்நுட்பம் மிக்கதாக ஆவின் நிறுவனம் மேம்படுத்தப்படும் என்றெல்லாம் தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
போதாக்குறைக்கு குஜராத் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் ஈடுபட்டால் ஆவின் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் அமுல் இன்னும் கொள்முதலை தொடங்கவில்லை. இருப்பினும் ஏற்கெனவே ஆவின் நிறுவனம் சரிவை நோக்கிச் சென்றுகொண்டுதான் இருக்கிறது; இது குறித்து விவாதிப்பது அவசியம்.
தமிழ்நாட்டில் ‘ஆரோக்கியா’, ‘ஹெரிடேஜ்’, ‘ஹட்சன்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்து பால் / பால் பொருள்கள் விற்பனையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு, ஒரு லிட்டருக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை – அரசு தீர்மானித்துள்ள விலையைவிடக் கூடுதலாக – கொடுத்து கொள்முதல் செய்கின்றன.
Also Read : கர்நாடக அமைச்சருடன் எதற்காகப் பேச்சுவார்த்தை? துரைமுருகனுக்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம்!
தமிழ்நாடு அரசு 2022 நவம்பர் 3 அன்று, பால் லிட்டர் ஒன்றுக்குக் கொள்முதல் விலையில் ரூ.3 உயர்த்தி அறிவித்தது. இதனால் தற்போது பசும்பால் ரூ.35, எருமைப்பால் ரூ.44 என்று உள்ளது. 8.3% கொழுப்பு அல்லாத இதரச் சத்துக்கள், 4.2% கொழுப்புச் சத்து என இருந்தால்தான் இந்த விலை கிடைக்கும். எந்தவொரு உற்பத்தியாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள விலை தற்போது கிடைப்பதில்லை.
பொதுவாகவே, பால் சத்து அளவு மூன்று இடங்களில் மதிப்பிடப்படுகிறது. உற்பத்தியாளர்கள் தரமான பாலைக் கொடுத்தாலும் மூன்று இடங்களிலும் மூன்று விதமான கணக்கு வருகிறது. இதற்குக் காரணம் ஒன்றிய – இணையத்தில் அவரவர் பங்குக்குத் தண்ணீர் கலப்பதுதான்.
இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆரம்பப் பால் கூட்டுறவுச் சங்கங்களில் வண்டியில் பாலை ஏற்றுகிறபோதே, அதன் சத்து அளவை மதிப்பிட்டுக் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 25.10.2017 அன்று உத்தரவிட்டது. ஆனால், இதுவரை அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இதனால், உற்பத்தியாளர், நுகர்வோர் இருவரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், உற்பத்தியாளர்களுக்கு வாரந்தோறும் பால் பணம் வழங்கப்படாமல் பல ஒன்றியங்களில் இரண்டு மாதம்வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் பால் நிறுவனங்கள், உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் பால் உற்பத்தியாளர்களுக்குப் பால் சத்து அளவு குறித்துச் செய்தி அனுப்புகின்றன.
Also Read : கருணாநிதியின் அரசாணையை நிராகரிப்பது நியாயமா? அரசுக்கெதிரான மனக்குமுறலை வெளிப்படுத்தும் அரசு மருத்துவர்கள்!
வாரம்தோறும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. கூடுதல் விலை கிடைப்பது போன்ற காரணங்களால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்குப் பதிலாகத் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்கின்றனர் என்பதே உண்மை. அதேநேரம், ஆவின் என்ற கூட்டுறவு நிறுவனம் இல்லாமல் போனால், தனியார் நிறுவனங்கள் இப்படி நடந்துகொள்ளாது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
ஆவின் நிறுவனம் மூடப்பட்டால் தனியார் வைத்ததுதான் சட்டமாகும்; அவர்கள் கொடுப்பதுதான் விலை என்ற நிலை ஏற்படும். எனவே, ஆவின் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பால் உற்பத்தியாளர்களின் முக்கியக் கோரிக்கை.
தமிழ்நாடு அரசு சார்பில் ஈரோட்டில் தீவன ஆலை செயல்படுகிறது. அந்த நிறுவனம் தீவனம் அனுப்பும் வாகனத்துக்கான வாடகையை இணையம் மட்டுமே ஏற்க வேண்டியுள்ளதால், அது தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறது. உற்பத்தியாளர்களின் முழுத் தொகையையும் அதனால் ஈடுசெய்ய முடிவதில்லை.
எனவே, தீவன உற்பத்தியிலும் தனியார் நிறுவனங்கள்தான் தேவையை ஈடுசெய்கின்றன.
ஆவின் நிறுவனம் வழங்குவதைவிட விலை கூடுதல் என்றாலும், சந்தையில் கிடைப்பது தனியார் மாட்டுத்தீவனங்களே என்பதால் விவசாயிகள் அவற்றை நோக்கித்தான் செல்ல வேண்டியிருக்கிறது.
ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் பாலைக் கொள்முதல் செய்யும் வகையில் அதன் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
அதன் நிர்வாகத்தில் உள்ள ஊழல், முறைகேடுகள் முற்றிலும் களையப்பட வேண்டும். கூடுதல் ஊதியம் பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். ஆவின் கடைகளில் ஆவின் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். மாறாக, மினி உணவு விடுதிகள் போல பல்பொருள் விற்பனை அங்காடியாகச் செயல்படுகிறது. முகவர்களுக்குக் கொடுக்கப்படும் கமிஷனாக ரூ.1.57 முதல் 2 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுவது இதற்கு ஒரு காரணம். இந்தக் கமிஷன் தொகை உயர்த்தப்பட வேண்டும்.
Also Read : அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மூடுவிழா? பெற்றோர், கல்வியாளர்கள் கடும் அதிருப்தி!
ஆவின் நிலையத்தில் தனியார் பால் விற்பது தடுக்கப்பட வேண்டும். ஆவினில் தயாரிக்கப்படும் உப பொருள்களின் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்கப்பட வேண்டும். நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். பால் பொருள் விற்பனைச் சந்தையை விரிவுபடுத்த வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் வழங்குவதன் மூலம் கொள்முதலை அதிகப்படுத்துவதுடன் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.
பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி வழங்குவது, வாரந்தோறும் உற்பத்தியாளர்களுக்குப் பணம் கிடைக்கச் செய்வது, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் வழங்கப்படுவதுபோல் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, தீவனத்தை 50% மானிய வகையில், தேவையான அளவு வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
ஆரம்பக் கூட்டுறவுச் சங்கங்கள் குறைவான தொகையில் வாடகை, ஊழியர் சம்பளம் போன்றவற்றை வழங்க முடியாமல்மூடும் நிலையில் உள்ளன. எனவே, அந்தச் சங்கங்களுக்கான கமிஷன் தொகை தற்போது உள்ள நிலையிலிருந்துலிட்டருக்கு 50 காசுகளாவது உயர்த்த வேண்டும்.
நுகர்வோருக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 விலை குறைத்தது திமுக அரசின் வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால், அதற்குரிய பணம் ஆவினுக்கு வழங்கப்படாததால் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை அரசு உடனே ஈடுகட்ட வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுஉடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு, உற்பத்தியாளர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள இத்துறையில், கூடுதலாக அமுல் நிறுவனம் வருகிறது என்பதைத் தவிர, அதனால் பெரும் பாதிப்பு நிகழ்ந்துவிடும் எனச் சொல்ல முடியாது. அதைவிடவும், அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் நடைமுறைப் பிரச்சினைகளை அரசு முதலில் கவனிக்கட்டும்.
நன்றி : இந்து தமிழ் திசை
கட்டுரையாளர் : பெ. சண்முகம், மாநிலத் தலைவர் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
தொடர்புக்கு – pstribal@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry