இந்த வார ராசிபலன் – 2023 ஜூலை 31 முதல் 2023 ஆகஸ்ட் 6 வரை; மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.
மேஷம் : முன்கோபம் அதிகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் தந்தை வழி உறவுகள் மீது பாசம் அதிகரிக்கும். சிலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். பெற்றோர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அனுபவிப்பீர்கள். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக பாசம் காட்ட வேண்டாம். ஓடி விளையாடும் போது குழந்தைகளுக்கு காலில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கல், மண், இரும்பு, மர வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் மீது கவனம் செலுத்த வேண்டாம். சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும்போது கவனமாக இருங்கள். ஏற்கனவே பதிவு செய்த சொத்துக்கள் வழியில் வில்லங்கம் வர வாய்ப்பு உள்ளதால் ஆவணங்களை பாதுகாத்து வைப்பது நல்லது. சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
ரிஷபம் : தன்னை அழகுபடுத்தி கொள்வதில் ஆர்வம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, ராசிநாதன் சுக்கிரன் வக்கிர நிலையில் இருந்தாலும் 4ம் இடத்தில் செவ்வாய் உடன் சேர்ந்து இருப்பதால் வாழ்க்கை துணைக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்வீர்கள். சிலர் மனைவிக்கு நகைகள், சேலைகளை வாங்கி கொடுத்து அசத்துவார்கள். தம்பி, தங்கை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவி செய்வீர்கள். சிலருக்கு பூர்வீகத்தில் சொத்து வாங்கலாமா? என்ற எண்ணம் வரும். பழைய வீட்டை புதுப்பிப்பது, இடித்து கட்டும் நேரம் இது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும். மக்களின் குறைகளை கேட்டறிந்து செயல்படுவது நல்லது. 31ம் தேதி பிற்பகல் வரை சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய வேலைகளை ஒன்றாம் தேதிக்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தள்ளி போடுவது நல்லது. குழந்தைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ளவர்கள் தாராளமாக தொழிலை விருத்தி செய்யலாம்.
Also Read : சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?
மிதுனம் : கலைகளில் ஈடுபாடு கொண்ட மிதுன ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 3ல் இருப்பதால் எழுத்து, ஓவியம், பேச்சாற்றல் அதிகரிக்கும். தொலைத்தொடர்பு துறையில் இருப்பவர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம். சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு உதவி செய்ய நேரிடும். தந்தை வாங்கிய கடனை அடைக்கும் வாய்ப்பு அமையும். சொன்னதை செய்ய போராட வேண்டியிருக்கும் என்பதால் வாக்கு கொடுப்பதற்கு முன்பு சிந்தித்து செயல்படுங்கள். 31ந்தேதி பிற்பகல் தொடங்கி 2ந்தேதி பிற்பகல் வரை சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய வேலைகளை தள்ளிப்போடுவது நல்லது. தாய், மாமியாரை அனுசரித்து செல்லுங்கள். புதிதாக அறிமுகமாகும் நபர்களால் சிக்கல் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதாகி செலவுகளை கொடுக்கும்.
கடகம் : பிறருக்கு வழிகாட்டும் கடக ராசிக்காரர்களே, ராசியில் சூரியன் இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை, கெளரவமான வாழ்க்கையை விரும்புவீர்கள். வார தொடக்கத்தில் சற்று சோர்வாக இருந்தாலும் வார இறுதியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சகோதரர்களுக்காக விட்டு கொடுத்து செல்ல வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நடந்து முடிந்தவற்றை பேசி குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகளை உண்டாக்க வேண்டாம். மீடியா, மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். கடன் வாங்கி தொழில் தொடங்குவது, வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணத்தை தள்ளிப்போடுவது நல்லது. வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி தொலைபேசி வழியாக வந்து சேரும். 3, 4 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம் : பிடிவாத குணம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, ராசிநாதன் சூரியன் 12ல் இருப்பதால் தன்னம்பிக்கை, எதையும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் குறையும். இருப்பினும் குரு பார்வை, செவ்வாய், புதன், சுக்கிரன் ராசியில் இருப்பதால் பிரச்னைகளை கடந்து வருவீர்கள். வாழ்க்கை துணை, தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லுங்கள். சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் உதவி செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர் வழியில் செலவுகள் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உயர் பதவி உங்களை தேடி வரும். கலைத்துறையில் இருப்பவர்கள் புகழடைய அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். 1, 2 ஆகிய தேதிகளில் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். 5, 6 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வு ஏற்படும். 3, 4 ஆகிய தேதிகளில் மனம் குழப்பமான மனநிலையில் இருக்கும் என்பதால் வேலை, தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கன்னி : நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ராசிநாதன் புதன் 12ல் இருப்பதால் மாணவர்களுக்கு கவனம் சிதறும். ஊர் சுற்றுவது, நண்பர்களுடன் வெளியே செல்லும் எண்ணம் தோன்றும். தகவல் தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். சிலர் லாட்டரி சீட்டு, ஆன்லைன் மோசடியில் சிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாக இருங்கள். கவர்ச்சி விளம்பரங்கள், பேச்சுகளை நம்பினால் பணத்தை இழக்க நேரிடும். சேமிப்புகள் குறையும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தாயார் மீது பாசம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்காக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நெருக்கடி உண்டாகும். 3, 4 ஆகிய தேதிகளில் தாயாருடன் வாக்குவாதம், கருத்து வேறுபாடுகள் வந்து செல்லும் என்பதால் கவனமாக இருங்கள். உணவு பொருட்கள் உற்பத்தி, விற்பனை செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
Also Read : சுவையான நஞ்சா அஜினோமோட்டோ? அதென்ன ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’? THE HARMFUL EFFECTS OF AJINOMOTO!
துலாம் : சுகபோக வாழ்க்கையில் பிரியம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, வாழ்க்கை துணை, மூத்த சகோதரம், சித்தப்பா வழியில் ஆதாயம் கிடைக்கும். அரசு வேலைக்கு தாராளமாக முயற்சி செய்யலாம். அரசு கடன், நிதியுதவி, ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடற்படை, நீர்வளத்துறையில் வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு லாபகரமான வாரம். காலி நிலம், வீடு, வாகனங்களால் ஆதாயம் உண்டு. உணவு விடுதி, ரியல் எஸ்டேட், கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். பிள்ளைகளுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். திருமண வரன் அமையும். பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாடுகள் கைக் கூடும். குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்பதால் முக்கிய வேலைகளை தாராளமாக செய்யுங்கள்.
விருச்சிகம் : எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்யும் விருச்சிக ராசிக்காரர்களே, ராசிநாதன் செவ்வாய் 10ல் இருப்பதால் அதிகாரம் செலுத்தும் வேலை அமையும். பூர்வீகத்தில் உள்ள அசையா சொத்தால் லாபம் கிடைக்கும். சிலர் சேமிப்புகளை வைத்து பண்ணை, தோட்டம் வாங்கி ஆசையை நிறைவேற்றி கொள்வார்கள். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் செயலில் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. சிறிய கவன குறைவால் தவறு நிகழ்ந்து உயரதிகாரிகளிடம் அவப்பெயர் ஏற்படும் என்பதால் வேலையில் எச்சரிக்கையாக இருங்கள். பழைய வாகனங்கள் அடிக்கடி பழுதாகி செலவுகளை கொடுக்கும். வாழ்க்கை துணையின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். ஆசிரியர், வங்கி ஊழியர்களுக்கு அனுகூலமான வாரம். மஞ்சள் நிற பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சிபாரிசு மூலம் ஆதாயம் அடைவீர்கள். சந்திராஷ்டமம் இல்லை.
Also Read : எப்படி, என்னென்ன சாப்பிடனும்னு தெரிஞ்சிக்கோங்க! ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு முறைகள்! Vels Exclusive!
தனுசு : சாந்த குணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, பாக்கியாதிபதி சூரியன் ராசிக்கு 8ல் இருப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதாலும் அரசு சார்ந்த விஷயங்கள், பூர்வீகத்தில் தடை, பிரச்னைகள் ஏற்படும். சிறுசிறு பிரச்னைகளுக்கு பிறகே அனைத்தும் சரியாகும். போட்டி தேர்வு எழுதி அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு பணி ஆணை கிடைப்பதில் தாமதம் உண்டாகும். 3, 8 ஆகிய தேதிகளில் உறவினர்கள் வழியில் மனக்கசப்பு ஏற்படும். பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தை தொழிலாக கொண்டவர்களுக்கு ஏற்றம் தரும் வாரம் இது. தையல், ஃபேஷன் டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பல் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை என்பதால் வேலை, படிப்பு தொடர்பான விஷயங்களை மேற்கொண்டால் வெற்றி கிட்டும்.
மகரம் : அதிர்ஷ்டத்தை காட்டிலும் உழைப்பின் மீது அதீத நம்பிக்கை கொண்ட மகர ராசிக்காரர்களே, ராசிநாதனும் தன ஸ்தான அதிபதியுமான சனிபகவான் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. குடும்ப உறுப்பினர்கள், வயதில் மூத்தவர்களை அனுசரித்து செல்லுங்கள். உங்களுக்கு பக்கபலமாக வாழ்க்கை துணையும் சம்பாதித்தாலும் சேமித்து வைக்க முடியாத அளவிற்கு செலவுகள் அடுத்தடுத்து வரும். ஓய்வில்லாமல் உழைத்தும் என்ன பிரயோஜனம் என்ற கவலை உங்களை வாட்டும். அச்சு, புத்தக விற்பனை, ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை, ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்களுக்கு லாபகரமான வாரம் இது. கட்டுமான பொருட்கள் சப்ளை செய்பவர்கள் கடனுக்கு வியாபாரம் செய்தால் பணத்தை வசூலிப்பதில் சிக்கல் வரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் அரசியல்வாதிகள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் வாய்ப்பு அமையும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
Also Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!
கும்பம் : தடைகளை தாண்டி முன்னேற துடிக்கும் கும்ப ராசிக்காரர்களே, ராசிநாதன் சனிபகவான் ராசியில் ஆட்சியாக இருப்பது சிறப்பு. உபஜெய ஸ்தானமான 6ல் சூரியன் இருப்பதால் கடுமையாக முயற்சி செய்தால் வெற்றி மேல் வெற்றி கிட்டும். வேலை மாற்றம், சம்பளம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். அரசு உதவி, அரசியல்வாதிகள் அறிமுகம் உண்டாகும். அனைத்திலும் சாதகமான வாரமாக கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமையும். இரண்டாவது குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட கும்ப ராசிக்காரர்கள் தற்போது நிம்மதி அடைவார்கள். மெக்கானிக், கனரக வாகனங்கள், இயந்திரங்களை இயக்கும் தொழில் செய்பவர்களுக்கு அனுகூலமான வாரம். சிலர் மனைவி பெயரில் வாகனம், நிலம் வாங்குவார்கள். 3, 4 ஆகிய தேதிகளில் மட்டும் மனக்குழப்பம் ஏற்படும் என்பதால் சற்று கவனமாக இருங்கள்.
மீனம் : எப்போதும் சந்தோஷமாக இருக்க விரும்பும் மீன ராசிக்காரர்களே, வெளிநாடு செல்ல நீண்ட நாட்களாக முயற்சி செய்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பயிற்சிக்காக சென்று வருவீர்கள். குழந்தைகள் வழியில் செலவுகள் இருக்கும். நீட் போன்ற போட்டி தேர்வுக்கு தயாராக பிள்ளைகளை பயிற்சி மையங்களில் சேர்ப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணைக்கு அரசு உதவிகள், வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஒன்றரை ஆண்டுகளாக பிரச்னைகளை சந்தித்து வந்தவர்களுக்கு தற்போது விடிவு காலம் பிறக்கும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள், எதிர்ப்பு காட்டியவர்கள் விலகி செல்வார்கள். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.
‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி நிலையம், சென்னை. தொடர்புக்கு : astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry