ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு கல்லூரியில் படிக்கும் பி.எட் மாணவர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக, மாவட்டத்திற்கு 22 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு SCERT இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது அழுத்தமான அறிவிப்பால் வந்த மாற்றமே தவிர சாதனை இல்லை; என்பதை நாம் உணர வேண்டும். B.Ed., மாணவர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதற்கு பீறிட்டு எழுந்த நமது உச்சம் தொட்ட அறிக்கையினைப் பார்த்த பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனரை அதிகாலையில் அழைத்து, ஐபெட்டோ அண்ணாமலை அறிக்கைக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்..! என்று அக்கறை உணர்வுடன் சொல்லியுள்ளார்கள். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் நல்லெண்ண நடவடிக்கையினை வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம்.
பள்ளிக்கல்வி இயக்குனரும் செவி வழியாகத் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களுக்கு தகவலினை அனுப்பியுள்ளார். தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களைச் சார்ந்த உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அழைப்பு வந்தவுடன் மானப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வந்துள்ளார்கள். உணர்வுபூர்வமாகக் கூட்டத்தைக் கூட்டினார்கள்.
பி.எட்., மாணவர்களை மதிப்பீடு செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பது முதல் தீர்மானமாகும். எண்ணும் எழுத்தும் திட்டத்தினை கைவிட வேண்டும் என்றும், காலாண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்பினை நடத்தக்கூடாது என்றும், அப்படி நடத்தினால் பயிற்சிக்குச் செல்ல மாட்டோம் என்றும், தீர்மானம் நிறைவேற்றினார்கள். எமிஸ் இணையதள சித்திரவதையில் இருந்து கைவிட வலியுறுத்தியும் இயக்க உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி கையொப்பமிட்டார்கள்.
பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குனர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் தீர்மானங்களை வழங்கினார்கள். போராட்ட அறிவிப்பையும் இந்த கோரிக்கை விண்ணப்பத்தில் சேர்த்திருந்தார்கள். கூட்டம் முடிவுற்ற பிறகு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலும், செய்தி அறிக்கையிலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று உறுதியாகத் தெரிவித்து இருக்கிறார்கள், வரவேற்கிறோம்.
பேச்சுவார்த்தையில் SCERT இயக்குனர் கலந்து கொள்ளவில்லை. உடல்நலக் குறைவால் கலந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்கள். இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்திக் கொண்டுள்ள இணை இயக்குனர்களில் ஒருவராவது கலந்திருக்க வேண்டாமா..? இதை எப்படி நம்மால் பொறுத்துக் கொள்ள இயலும்?
பள்ளிக்கல்வி இயக்குனர், SCERT இயக்குனரை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பி.எட்., மாணவர்களை விட்டுவிட்டு மற்றவர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதாகவும், விடுமுறைக் காலங்களில் பயிற்சி வகுப்பு நடப்பதை தவிர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். எண்ணும் எழுத்தும் திட்டம் முதல்வரின் திட்டமாம்..! அதைப் பற்றி பேச முன்வரவில்லை.
Also Read : ‘One Nation, One Election’க்குத் தயாராகும் பாஜக! சாதக, பாதகங்கள் என்னென்ன? முழுமையான அலசல்!
SCERT இயக்குனர் அவர்களின் செயல்முறைகளின்படி செப்டம்பர் ஏழாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு, மாவட்டத்திற்கு 22 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து, 1-3 வகுப்புகளை மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள். 1,2,3ம் வகுப்பு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அரும்பு, மொட்டு, மலர் மதிப்பீடு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. அதனால் முனைவர் பட்டம் பெற்றவர்களைத் தேர்வு செய்தால் SCERTக்கு இன்னும் பெருமையினைப் பெற்றுத்தரும்.
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் 11,12ம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பார்களே தவிர, 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்குக் கூட முன்வர மாட்டார்கள். Decorum கைவிடாமல் பாதுகாப்பவர்கள், ஒன்று, இரண்டு, மூன்று வகுப்புகளுக்கு மதிப்பீடு செய்யச் சொன்னால் அவர்களுக்கு கௌரவப் பிரச்சனை இல்லையா?
நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியரை, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் இல்லாத ஒரு நாளில் சென்று வகுப்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்றால், எங்களை நியமனம் செய்துள்ளது ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காகத் தான், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எல்லாம் எங்களால் பாடம் நடத்த முடியாது என்று மறுப்பார்கள். பிறகு அந்தத் தலைமையாசிரியரே ஐந்தாம் வகுப்பை பார்த்துக் கொள்ளும் நிலைமை நடுநிலைப் பள்ளிகளில் நிகழ்ந்து வருகிறது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கங்களுக்கு மானப் பிரச்சினை உள்ளதை நீங்கள் உணரவில்லையா..?
Child Psychology (குழந்தை உளவியல்) படித்தவர்களே குழந்தைகள் மன நிலையை அறிந்து கொள்ள பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறோம். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அந்த குழந்தைகளை எவ்வாறு மதிப்பீடு செய்வார்கள்? காலாண்டுத் தேர்வு தொடங்கப் போகிறது. மாவட்டத்திற்கு 22 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எட்டு நாட்கள் வெளியே வந்தால் அவர்கள் நடத்தும் பாடம் என்னாவது? பள்ளிகளை ஆய்வு செய்யும் அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்யும் மதிப்பீடுகள் மீது SCERT க்கு நம்பிக்கை இல்லையா?
தமிழ்நாட்டில் கொரோனா இப்போது இல்லை என்று அறிக்கையினை அன்றாடம் பார்த்து வருகிறோம். கொரோனா காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தை விளம்பரத் திட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்படுவது கைவிடப்படவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர்களை மாணவர்கள் பள்ளியில் தாக்கும் போது அவமானப்படுத்தப்பட்டோம்! நமக்காக தமிழ்நாட்டில் கவலைப்பட எவராவது உண்டா? ஒரு மாவட்டத்தில், ரவுண்டு கட்டி தலைமை ஆசிரியரையும், ஆசிரியரையும் அடித்தார்கள். சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, ஒரு கண்டனம் தெரிவித்தது உண்டா? வருத்தம் தெரிவித்தது உண்டா? மாணவர்கள் அடித்தால் அதனை தாங்கிக் கொள்கிற மன உறுதியை ஆசிரியர்கள் பெற வேண்டும் என்று ஜேக்டீ-ஜியோ ஒருங்கிணைப்பாளராக இருந்து போராட்ட காலத்தில் சிறை சென்ற மூத்த அமைச்சரே நமக்கு அறிவுரை வழங்கவில்லையா? ஆசிரியர்களுக்காக யாராவது அனுதாபப்பட்டு இருப்பார்களா? நம் ஆசிரியர்களைப் பற்றி கவலைப்பட ஆசிரியர் சங்கங்களைத் தவிர வேறு எவர் உள்ளார்கள்?
அது போகட்டும்..! ஹெல்த் ஸ்கிரீன் வந்தது. மாணவர்களின் கண்ணை பார்க்கச் சொன்னார்கள்! பல்லை பார்க்கச் சொன்னார்கள்! தோள்பட்டை, இடுப்பளவு, உயரம், எடையினை அளக்கச் சொன்னார்கள். மாணவர்களின் கால் அளவினையும், பாதத்தையும் அளக்கச் சொன்னார்கள். எத்தனை பேருக்கு கோபம் பீறிட்டு வந்தது? ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது’ என்று கிராமத்தில் சொல்வார்கள். இவற்றையெல்லாம் பாராதிருப்பதுதான் நமது பக்குவ குணமா? இது தேவையானதா?
SCERT நடத்தும் பயிற்சிகளில், ஆடச் சொன்னால் ஆடுகிறோம்..! பாடச் சொன்னால் பாடுகிறோம்..! சிரிக்கச் சொன்னால் சிரிக்கிறோம்..! குதிக்கச் சொன்னால் குதிக்கிறோம்..! இலை தழைகளை கட்டி ஆடச் சொன்னால் ஆடுகிறோம்..! நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? என்று சித்திரவதைபட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து நாமே பாடுகிறோம்..! நீங்கள் அழமட்டும் சொல்லவில்லை, ஆனால் எல்லோரும் அழுது கொண்டிருக்கிறோம். ‘ஆண்டவன் சொன்னால்… அருணாசலம் கேட்க வேண்டுமா..? SCERT ஆணையிட்டால் நாங்கள் செய்யத்தான் வேண்டுமா?
போர்க்குணமிக்க இயக்க தலைவர்களே..! நம்மை நம்பி கையொப்பமிட்டு நமது சங்கத்தில் உறுப்பினராக இருக்கக்கூடிய ஆசிரியர்கள், பெண் ஆசிரியர் சமுதாயம் அன்றாடம் பல்வேறு சித்திரவதைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். சுவர் இல்லை என்றால் சித்திரம் வரைய முடியாது என்பார்கள். சித்திரவதையிலிருந்து மீட்டெடுக்க வீறுகொண்டு, கரம் கோர்த்து களத்தில் நிற்பதைத் தவிர வேறு வழி ஏதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நமக்குத் தெரியவில்லை.
EMISஇல் இருந்தும், எண்ணும் எழுத்தும் திட்டத்திலிருந்தும், தேவையற்ற பயிற்சிகளில் இருந்தும் ஆசிரியர்களை விடுவித்து அறிவித்தால் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால் ஒரு மாற்றம் செய்ததற்கே நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருள் இல்லாமல் போய்விடும்.
ஆணையர் பதவியினை இந்த அரசு விடுவித்தது போல், SCERT இயக்ககத்தை தற்போது நடத்தி வருபவர்களை விடுவித்தாலொழிய, ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு உணர்வு குறைவதற்கு வாய்ப்பே இல்லை! வாய்ப்பே இல்லை..! விரைவில் நல்ல தீர்வினை எதிர்பார்க்கிறோம்.” இவ்வாறு ஐபெட்டோ அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.
Recommended Video
ஆய்வு..! பயிற்சி வகுப்பு! எல்லை மீறுகிறது SCERT! நடவடிக்கை எடுப்பீங்களா..! AIFETO Annamalai சவால்!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry