![Anti-Tobacco Day](https://velsmedia.com/wp-content/uploads/2024/05/VELS-MEDIA-1-17.jpg)
உண்மையிலேயே புகையிலை அச்சுறுத்தக்கூடியதா. அதன் நன்மை தீமைகள் மற்றும் உண்மைநிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்குமுன், புகையிலையின் வரலாறு பற்றி தெரிந்துகொள்வோம்.
புற்றுநோய்க்கு முதல் காரணமாகவும் மரணத்துக்கு முக்கியக் காரணமாகவும் விளங்கும் ‘நிகோடியானா டபாக்கம்’ (Nicotiana tabacum) தோன்றிய இடம் அமெரிக்கா. மிளகு, தக்காளி, சுண்டக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றின் குடும்பத்தைச் சேர்ந்த புகையிலையின் வரலாறு, கி.மு. 6000ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது.
காய்ந்த புகையிலையின் புகை, தங்களது வேண்டுதல்களைக் கடவுளிடம் நேரடியாக எடுத்துச் செல்லும் என்று பெரிதும் நம்பிய அமெரிக்கப் பழங்குடியினர், தங்களது நிலங்களில் செழித்து வளர்ந்த அதன் இலைகளை கடவுளுக்குப் படைத்ததோடு, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தியுள்ளனர். கடவுள் தங்களுக்கு அனுப்பிய பரிசாகக் கருதிய இதை, 1492-ம் ஆண்டு கப்பலேறி வந்த கிறிஸ்டோபர் கொலம்பஸிடம் அமெரிக்க பழங்குடியினர் பரிசாகத் தர, அங்கிருந்து புகையிலையின் உலகப் பயணம் தொடங்கியுள்ளது.
Also Read : எல்லா நோய்களுக்கும் ஒரே அடிப்படை…! உடலுக்குள்ளே இருக்கும் பார்மஸி!
15, 16ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் சிறந்த வலி நிவாரணியாகவும், விஷ முறிவு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்ட புகையிலை மூச்சிரைப்பு, மலேரியா, உணவுக் குழாய் அழற்சி, மூலநோய், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு உள்மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சருமத்தில் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சிரங்கு, தோல் அழற்சி ஆகியவற்றில் மேற்பூச்சாகவும் புகையிலையை உபயோகித்திருக்கிறார்கள். குணப்படுத்த முடியாத ஒற்றைத் தலைவலி (Trigeminal Neuralgia) மற்றும் புற்றுநோய்களால் உண்டாகும் வலிக்கு நிவாரணியாகவும் விளங்கிய புகையிலை, அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் நோய்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
பச்சைப் புகையிலையை கரீபியன் மக்கள் மூலிகையாகப் பயன்படுத்தினர். 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, புகையிலை சுருட்டு வடிவம் பெற்று, பிறகு சிகரெட் என்ற ஆறாம் விரல் தோன்றவும் வழிவகுத்தது. கைகளால் சுருட்டப்படும் கியூபா நாட்டின் சிகார் மற்றும் துருக்கிய சிகார் உலகப் புகழ்பெற்றன. தனக்கு மிகவும் பிரியமான கியூபன் சிகாரை, தனது இறுதி நாள் வரை சேகுவேரா புகைத்தாராம். உலகப்போரின்போது, `படைவீரர்களின் புகை’ என்ற தனி அடையாளத்தைப் பெற்ற சிகரெட், பிற்காலத்தில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு உலக வணிகத்தில் முதல்நிலையை எட்டியது.
புகையிலையில் என்ன உள்ளது?
நிகோடின், நிகோடினிக் அமிலம், மாலிக் அமிலம் போன்ற தாவரச்சத்துகளும், வைட்டமின்கள் சி, ஈ மற்றும் செலினியம், கரோட்டின் ஆகியனவும் நிறைந்துள்ளன. இவற்றுள் சக்திவாய்ந்த தாவர எண்ணெய்யான நிகோடின், உட்கொண்ட எட்டு முதல் பத்து விநாடிக்குள் மூளையைச் சென்றடைந்து, அங்குள்ள டோபமைன்களை ஊக்கப்படுத்தும். அதனால், தற்காலிகமாக உற்சாகமும் சுறுசுறுப்பும் உண்டாவதுடன் போதையையும் ஏற்படுத்தும்.
ஆனால், புகையிலையைப் புகைக்கும்போது, அதிலுள்ள நிகோடின், கோ-நிகோடின், பைரிடின், கார்பன் மோனாக்சைடு போன்ற தாதுக்களாக உருமாறி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். புகையிலையைப் பதப்படுத்த, ஒரு சிகரெட்டில் 4,000-க்கும் மேலான ரசாயனப் பொருள்களும், நூற்றுக்கணக்கான நச்சுப்பொருள்களும் சேர்க்கப்படுவதால் இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் போன்றவை ஏற்படலாம். இவை, அனைத்துக்கும் மேலாக உடல் உறுப்புகளில் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது.
‘ஆக்டிவ் ஸ்மோக்கிங்’, ‘பாசிவ் ஸ்மோக்கிங்’, ‘தேர்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்’ எனப் புகைப்பழக்கம், நான்கு விநாடிக்கு ஒரு மரணத்தை நிகழ்த்துகிறது. வருடத்தில் எட்டு மில்லியன் மக்களை, உலகெங்கும் பலி எடுக்கும் இந்தப் புகையிலை, அவர்களில் பெண்கள், குழந்தைகள் என ஒரு மில்லியன் பேரை புகைக்காமலே மரணிக்க வைக்கிறது. வெறும் இலையாக இருந்தபோது மூலிகையாக மட்டுமே இருந்த புகையிலையை துண்டுகளாகவும் துகள்களாகவும் உருமாற்றியதையடுத்து அது மனிதனை முடமாக்கி நிற்கிறது. மனிதன் மாற்றியமைக்கும்வரை, இயற்கையின் எந்தவொரு படைப்பும் அழிவுக்கான பாதையை வகுப்பதில்லை என்பதற்குப் புகையிலை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
வேளாண் அறிவியல், பயோ டெக்னாலஜி, ஜெனிடிக் இன்ஜினீயரிங் ஆகிய துறைகளில் புகையிலையை பயன்படுத்தும் முயற்சிகளில் அறிவியல் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். புகையிலையிலிருந்து பெறப்படும் புரதத்தின் அளவு, சோயா மற்றும் சோளத்திலிருந்து பெறப்படும் புரதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு கூடுதல் என்பதால், இதைத் தொழிற்சாலை மற்றும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தி வருகின்றனர். பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசிகள் தயாரிக்கவும், மரபணு நோய்கள், அல்சைமர், சர்க்கரைநோய், புற்றுநோய், ஹெச்ஐவி தொற்று எனப் பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கவும் உயிரியல் இன்குபேட்டராக புகையிலை உதவுகிறது என்கிறது விஞ்ஞானம்.
இயற்கை உரங்கள், அழகு சாதனப் பொருள்கள், கால்நடை உணவுகள், புரதங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கவும் புகையிலை உதவுகிறது. அதேநேரத்தில் எளிதில் மறையாத கழிவுகளான `ஜி.டி.என்’ (GTN – Glycerol Tri Nitrate), `பி.இ.டி.என்’ (PETN) போன்ற நைட்ரஜன் வெடிகளின் கழிவுகளை இது அகற்றக்கூடியது. இவை அனைத்துக்கும் மேலாக, `க்ரீன் எனர்ஜி’ (Green energy) என்று அழைக்கப்படும் இயற்கை எரிசக்தியை உற்பத்தி செய்ய புகையிலையைப் பயன்படுத்தலாம் என்ற முக்கியமான ஆய்வைத் தென்னாப்பிரிக்க விண்வெளி மையம் நிரூபித்துள்ளது.
அதேநேரம், தற்போது புகையிலை பயன்பாடு உலகளவில் மரணத்திற்கான முக்கிய காரணியாக உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் புகையிலை காவு வாங்குகிறது. இது தனிநபர்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், சுகாதார அமைப்புகள் மற்றும் பொருளாதாரங்களுக்கும் சுமையாக உள்ளது. குழந்தைகள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள், மில்லியன் கணக்கானவர்கள் ஏற்கனவே மின்-சிகரெட்டுகள் உட்பட புகையிலை பொருட்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
இயற்கை படைப்புகளைப் போலவே புகையிலையையும் முறையாகப் பயன்படுத்தினால் நன்மை அளிக்கும். அதனை அழிவின் கரங்களில் கொண்டு சேர்ப்பதும், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதும், நமது கரங்களில் மட்டுமே உள்ளது. ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், புகையிலை பயன்பாட்டின் பேரழிவு விளைவுகளிலிருந்து விடுபட்ட உலகத்தை நாம் உருவாக்க முடியும். நமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை தேர்ந்தெடுப்போம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry