உள்ளாட்சித் தேர்தலுக்காக, வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட்டு தேமுதிக–வுடன் கூட்டணி அமைக்க திமுக தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறை பணிகள் நடைபெறாத காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேநேரம், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளனர். தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகள் மற்றும் வியூகங்களை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கூட்டணியை மாற்ற வேண்டும் என்பதே திமுக, அதிமுக முகாம்களில் அதிகம் கேட்கும் குரலாக இருக்கிறது. இருபெரும் திராவிடக் கட்சிகளும், தேசியக் கட்சிகளை சுமையாகவே கருதுகின்றன.
திமுக ஆட்சி அமைத்துவிட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பின்தங்கினால், அக்கட்சிக்கு அது மிகப்பெரும் பின்னடைவாகவே கருதப்படும். மின்சாரம், நீட் தேர்வு, பெட்ரோல் – டீசல் விலை போன்றவற்றில் திமுக விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தப் பிரச்சனைகள் அனைத்துமே உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கக் கூடியவைதான். உள்ளாட்சித் தேர்தலில், தனி நபர் செல்வாக்குடன், கட்சி, கூட்டணி ஆகியவையும் ஆதிக்கம் செலுத்தும்.
தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளவைகளில் பெரும்பாலானவை வட மாவட்டங்கள்தான். இங்கு மட்டுமின்றி தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு என வாக்கு வங்கி இல்லை. எனவே, காங்கிரஸை கைகழுவி விட்டு, தேமுதிக–வை தங்கள் முகாமுக்குள் கொண்டுவர திமுக திட்டமிடுகிறது. பெரும் தள்ளாட்டத்தில் இருக்கும் தேமுதிக–வை திமுக–வுடன் இணைக்கும் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது. இதுபற்றி கடந்த மாதம் 16-ந் தேதி வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டிருந்தது.
Also Read: திமுக–வுடன் இணைகிறது தேமுதிக? நெருக்கும் நிதிச்சுமை! நிர்வாகிகள் மட்டுமே மிஞ்சியிருப்பதால் விரக்தி!
தமிழகம் முழுவதும் உள்ள 15 மேயர் பதவிகளில் ஐந்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்க தயாராக இல்லாததால் திமுக, தேமுதிக–வை நெருங்கியுள்ளது. வட மாவட்டங்களில் செல்வாக்காக உள்ள பாமக எதிரணியில் இருக்கும் நிலையில், தேமுதிக–வை உள்ளே கொண்டு வருவதன் மூலம் அவர்களை சமாளிக்கலாம் என திமுக கருதுகிறது. வடமாவட்டங்களில் திமுக – தேமுதிக கூட்டணி பலமான வாக்கு வங்கியாக இருக்கக்கூடும். இப்படியொரு கூட்டணி அமைந்தால் தேமுதிகவினருக்கும் புதுரத்தம் பாய்ச்சியது போல இருக்கும்.
அதேநேரம், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வாக்கு வங்கி அதிமுக–வுக்கு கைகொடுக்கவில்லை. பாஜக–வுக்கும் வாக்கு வங்கி இல்லாத நிலையில், தலைமை கூட்டணியை மாற்றுமா என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அதிமுக முகாமைப் பொறுத்தவரை கூட்டணி மாற்றத்துக்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. சுமையாக இருந்தாலும், சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தாலும், பாஜக–வுடன் பயணிப்பதே பாதுகாப்பானது என அதிமுக தலைமை கருதுவதே இதற்குக் காரணம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry