திமுக-வுடன் இணைகிறது தேமுதிக? நெருக்கும் நிதிச்சுமை! நிர்வாகிகள் மட்டுமே மிஞ்சியிருப்பதால் விரக்தி!

0
12

தேர்தலுக்குத் தேர்தல் தேய்மானத்தைச் சந்தித்து வருகிறது தேசிய முற்போக்கு திராவிடக் கழகம். எப்படியிருந்த கட்சி இன்று இப்படி ஆகிவிட்டதே என சாமானியர்களே கவலைப்படும் நிலையில், தேமுதிக, திமுகவுடன் இணைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக திரைத்துறையில் விஜயகாந்தை, விஜி என்றுதான் அன்போடு அழைப்பார்கள். வெள்ளந்தியான அன்பால் பலரையும் அவர் கட்டிப்போட்டு வைத்திருந்தார். தயாரிப்பாளர்கள் கடனை அடைக்க தேவையான உதவிகளை செய்வார். கஷ்டப்படும் பலருக்கும் வாரி வழங்கியிருக்கிறார். டி.ஆர். பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது, சென்னையில் கோயம்பேட்டில் இவரது திருமண மண்டபம் நீள் வாக்கில் பிளக்கப்பட்டது. இதனால் மனதளவில் நொறுங்கிப்போன விஜயகாந்த், 2005-ம் ஆண்டு தேமுதிக ஆரம்பித்தபோது எதிர்பார்ப்பு எழுந்தது. திமுக, அதிமுகவுக்கு மாற்று கிடைத்துவிட்டதாக நடுநிலை வாக்காளர்கள் பெருமளவு நம்பினார்கள்.

அதற்கேற்றார்போல, 2006 சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் கூட்டணி என்ற முழக்கத்துடன் தனியாக தேர்தலைச் சந்தித்தது தேமுதிக. அந்தத் தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றிபெற்றார், அக்கட்சி 8.45% வாக்குகளை பெற்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக-வும், அதிமுகவும் மிரட்சிக்கு உள்ளாகின. 2009 மக்களவைத் தேர்தலிலும் தனித்து களம் கண்ட தேமுதிக 0.75% வாக்குகளை பெற்றது. பின்னர், 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 41 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, 29 இடங்களில் வெற்றி பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.  கட்சி பெற்ற வாக்கு விகிதம் 7.88%. ஆனால், அரசியல் நெளிவு சுளிவு தெரியாததால், விஜயகாந்த், ஜெயலலிதாவை முறைத்துக்கொண்டார். விளைவாக, தேமுதிக எம்.எல்..க்கள் 8 பேரை வளைத்தார் ஜெயலலிதா. இவர்கள் ராஜினாமா செய்ததால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் இழந்தார். 

இதன்பிறகுதான் தேமுதிக ஆட்டம்காணத் தொடங்கியது. திருமண மண்டபத்தை இடித்த திமுக, பின்னர் வடிவேலுவை தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கி, விஜயகாந்த் மீதான தனிமனிதத் தாக்குதலை தொடுத்தது. இதுஒருபுறம் என்றால், ஜெயலலிதா தேமுதிகவை அமைப்பு ரீதியாக பலவீனப்படுத்தினார். இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளான விஜயகாந்துக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. அதுவரை சில முடிவுகளில் மட்டும் தலையிட்டு வந்த விஜயகாந்த் குடும்பம், பிறகு மொத்தமாக கட்சியை கையிலெடுத்தது.  2016 சட்டமன்ற தேர்தலில் 2.41% வாக்குகள் பெற்ற தேமுதிக, 2021 தேர்தலில் 0.43% வாக்குகளை மட்டுமே பெற்றது.

2014 மக்களவைத் தேர்தலில் 0.38%, 2019 மக்களவைத் தேர்தலில் 0.15% வாக்குகளையே தேமுதிக வாங்கியது. 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் டெபாசிட் இழக்கும் அளவுக்கான தோல்வியால் தொண்டர்கள் நம்பிக்கை இழந்தனர். இதன் காரணமாக, தேமுதிகவில் தற்போது நிர்வாகிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகத் தெரிகிறது. இதற்கு அரசியல் அனுபவமில்லாத விஜயகாந்த் குடும்பத்திரின் முடிவுகளே காரணம் என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை, தப்பான கூட்டணி அமைப்பது, விஜய பிரபாகரனின் எல்லை மீறிய பேச்சு போன்றவையே கட்சியின் தற்போதைய நிலைக்குக் காரணம் என தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விஜயகாந்த் எப்போது தனது பேச்சை இழந்தாரோ அப்போதே கட்சி முழுமையாக வீழ்ந்துவிட்டதாக தொண்டர்களும், நிர்வாகிகளும் கருதுகின்றனர். கட்சி நடத்த தலைமை நிதி உதவி செய்யாது என்பதால், நிர்வாகிகள் பலரும் மாற்றுக்கட்சியை நாடத் தொடங்கிவிட்டனர்.

இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெற்றவுடன், கடந்த மே-4ந் தேதி விஜயகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். உதயநிதியை திரைப்பட நடிகர் என்றே விஜயகாந்தின் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதன்பிறகுதான் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளன. கட்சி ஏறக்குறைய கரைந்துவிட்டதால், தேமுதிகவை, திமுகவுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவுடன் அணுக்கமாக இருந்து, சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியை இணைப்பது என்ற ரீதியில் திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் கடந்த 11-ந் தேதி முதலமைச்சர் மு.. ஸ்டாலின், விஜயகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த சந்திப்பை சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள், மரியாதை நிமித்தமான அல்லது நட்பு ரீதியான சந்திப்பு என எப்படிச் சொன்னாலும், திமுக லைனில் தேமுதிக வந்துவிட்டதாகவே தெரிகிறது. பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கும்பட்சத்தில், சில மாதங்களுக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகலாம். கட்சியை நடத்துவதற்கான நிதி விஜயகாந்த் குடும்பத்துக்கு சவாலாக இருக்கிறது. இதுதான் இணைப்பு முடிவுக்கான முக்கிய காரணம் என்கின்றனர். விஜயகாந்தின் உடல்நலன் நன்றாக இருந்திருந்தால் இன்றைய அரசியல் களம் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry