அரசாணை 115 நிறுத்திவைப்பு! 69 விழுக்காடு இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டுள்ளதாக ஆசிரியர் கூட்டணி கருத்து!

0
48

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுப் பணிகளுக்கான பணியாளர்கள் தேர்வு மற்றும் அவர்களுக்கான பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் ஏஜென்ஸிகளிடமிருந்து ஒப்பந்த முறையில் பணியாளர்களைப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினை அமைத்து மனிதவள மேலாண்மைத் துறையின் சார்பில் 18.10.2022 அன்று அரசாணை எண்:115 வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் நிரந்தரப் பணியிடங்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்காலிக, ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கொள்கை கடைபிடிக்கப்படுவதில்லை. பல்கலைக்கழகங்கள், மின்வாரியம், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டி பிரிவு பணியாளர்கள் ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் பணியாற்றுவதத்கு சீனியர் பெல்லோஷிப், ஜூனியர் பெல்லோஷிப் என மாவட்டத்திற்கு தலா 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல் ‘எமிஸ்’ இணைய பணிகளை செய்பவர்கள் அனைவரும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தான். பள்ளிகளில் நிரந்ததர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளனர். தமிழக அரசின் இச்செயல்பாட்டினை பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பினை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

Also Read : 35 ரூபாயாக இருந்த கரன்ட் பில், இப்போது 2 ஆயிரம் ரூபாய்! அதிரவைக்கும் மின்வாரியம்! இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு!

இந்நிலையில், 09.11.2022 அன்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அவர்களுடைய கோரிக்கையினை கேட்டறிந்த முதலமைச்சர், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்ததோடு மட்டுமின்றி, இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வரவேற்று நன்றி பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Also Read : #NIA Raid | 45 இடங்களில் அதிரடி சோதனை! 18 பேருக்கு ISIS இயக்கத்துடன் தொடர்பிருப்பது கண்டுபிடிப்பு!

அரசாணை:115 ஐ நிறுத்தி வைத்துள்ள அறிவிப்பின் மூலம், 55 ஆண்டு காலமாக பின்பற்றப்பட்டுவந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பாதுகாத்துள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவினை தனியார் நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங் என்ற முறையில் ஒப்படைத்து எதிர்காலத்தினை பாழாக்குவதிலிருந்தும் முதலமைச்சர் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பினை வெளியிட்டு சமூகநீதியினை பாதுகாத்துள்ள முதலமைச்சருக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பாதிக்கப்பட்டுள்ள சமுதாயமும் நன்றி உணர்வுடன் புகழாரம் சூட்டி மகிழ்கிறது.

முதலமைச்சரிடம் நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு , பணியாளர்களின் நலன் ஆகியவற்றை பதுகாத்து, பழைய நடைமுறைப்படியே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியங்கள் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்உள்ளிட்ட மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

Also Read : வசூல்ராஜா பட பாணியில் ராகிங்! சீனியர்கள் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்! குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை!

முதலமைச்சர் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் சமூகநீதி கொள்கைக்கு ஏற்பட இருந்த பேராபத்திலிருந்தும், விபத்திலிருந்தும் பாதுக்காத்துள்ளீர்கள் என்ற வரலாறு மக்கள் மத்தியில் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். பள்ளிக் கல்வித்துறையின் மீது முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வி நலன், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியினை பாதுகாக்கப்படும் நாளினை ஆர்வப் பார்வையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” இவ்வாறு அறிக்கையில் வா. அண்ணாமலை கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry