கூட்டுறவுத்துறைக்கு மட்டும் 10 சதவிகிதம் போனஸ்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெயா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!

0
32
It is not fair to announce a 20% Diwali bonus for all public sector undertakings and 10% only for the cooperative sector– EPS | File Image

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்(கூட்டுறவுத்துறை மற்றும் வனத்துறை உள்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவிகிதம் வழங்கப்பட்டது.

எனவே, 2022-2023ம் ஆண்டிற்கான அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்தினோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, விடியா திமுக அரசும் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Also Read : பெரியாறு – வைகைப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்!

ஆனால், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகையாக 10 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும் என்று 7.11.2023 அன்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது. ’கூட்டுறவே நாட்டுயர்வு’ என்று இந்தியாவிலேயே தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சிறப்பான இடத்தை வகிப்பதோடு, இந்திய அளவில் பல முதல் பரிசுகளைப் பெற்றுள்ளது மற்றும் லாபத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசின் வேளாண் நலத் திட்டங்கள் அனைத்தும் கூட்டுறவுத்துறை மூலமே தமிழக விவசாயிகளைச் சென்றடைகிறது. மேலும், கூட்டுறவுத் துறையைப் பொறுத்தவரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அந்தந்த வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் நிதியில் இருந்துதான் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் நிதியின் இருந்து போனஸ் வழங்கப்படுவதில்லை.

கடந்த பல ஆண்டுகளாக, அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவிகித தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக அறிவித்துவிட்டு, கூட்டுறவுத்துறைக்கு மட்டும் 10 சதவிகிதம் மட்டும் அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது, ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மறு கண்ணில் வெண்ணெயுமாக இந்த விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

Also Read : மத்திய அரசின் கொள்கையினை அடிபிறழாமல் அமல்படுத்துவதா? நிறைவேற்றியதாகச் சொன்ன வாக்குறுதிகள் என்னென்ன? ஐபெட்டோ சரமாரிக் கேள்வி?

மேலும், 1.1.2021 முதல் ஏற்படுத்தப்பட வேண்டிய அனைத்து மத்திய கூட்டுறவு மங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம், கடந்த 34 மாதங்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் இந்த விடியா திமுக அரசு காலதாமதம் செய்து வருவது கூட்டுறவுத்துறை ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சிக்கு வந்த நாள் முதல் கூட்டுக்கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த விடியா திமுக ஆட்சியாளர்கள், வேளாண் பெருமக்கள் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காகப் பாடுபடும் கூட்டுறவு சங்க ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அஇஅதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன்.

எனவே, உடனடியாக கூட்டுறவுப் வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; அம்மா ஆட்சியில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் வழங்கியதுபோல், 2021ஆம் ஆண்டு முதல் 20 சதவிகித ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.“ இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி கே பழனிசாமி கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry