பலரும் அறியாத முருகனின் மகிமைகள்! கைமேல் பலன்கொடுக்கும் கந்தசஷ்டி விரதம்! Kandha Sashti Viratham!

0
75
The glories of Lord Muruga; Kandasashti fasting that gives fruit on the hands.

சூரபத்மனை எதிர்த்து முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக கந்த சஷ்டிவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முருக பக்தர்கள் 6 நாட்கள் விரதமிருப்பார்கள், சஷ்டி விரதம் இந்த ஆண்டு நவம்பர் 13 முதல் நவம்பர் 19 அனுஷ்டிக்கப்படுகிறது.

ஐப்பசி மாதத்துக்கு ஆயிரம் பெருமைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது சஷ்டி விரதம். தமிழ்க் கடவுளான முருகனை வழிபட உகந்த திதி சஷ்டி. அதிலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி, கந்த சஷ்டி என்று புகழப்படுகிறது. சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

முருகனுக்கு அழகுதமிழில் ஆயிரம் நாமங்கள் உண்டு. முருகன், கந்தன், குமரன், வேலன், செவ்வேள், செய்யோன் என ஒவ்வொன்றும் ஒரு சிறப்பை உடையது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. இதில் ‘கந்தன்’ என்னும் பெயர் தனிச் சிறப்புடையது. கந்த புராணம், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி, கந்த சஷ்டிக் கவசம் எனக் கந்தன் என்னும் பெயரோடே முருகனின் பெருமைகள் பேசப்பட்டு வந்துள்ளன.

Also Read : Aadi Krithigai! ஆடிக் கிருத்திகை விரதமுறை, பலன்கள்! முருகப்பெருமானின் மூல மந்திரம்!

`கந்து’ என்றால் பற்றுக்கோடு என்று பெயர். இந்த வாழ்க்கைக் கடலைக் கடக்க நாம் பற்றிக்கொள்ள வேண்டியவன் என்பதால் அவன் ‘கந்தன்’. வடமொழி நிகண்டு ஒன்று கந்தன் என்ற சொல்லுக்கு பகைவர்களின் பராக்கிரமங்களை ஒடுக்குபவன் என்று பொருள் சொல்கிறது. நமக்குள் இருக்கும் பகை நம் மனம். அதை ஒடுக்கி நல்வழிப்படுத்துபவன் என்பதால் அவனைக் கந்தன் என்று சொல்வது பொருத்தமே. இத்தகைய பெருமைகளையுடைய கந்தனின் பெயராலே குறிப்பிடப்படும் கந்த சஷ்டி, ஆறுநாள் விரதமாக முருக பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

முருகக் கடவுளின் பராக்கிரமங்களைச் சொல்வது சூர சம்ஹாரம். சூரபத்மன் ஆணவத்தில் முருகக் கடவுளோடு போர்புரிந்தான். தன் வலிமையாலும் மாயையாலும் முருகனை வெல்ல நினைத்தான். ஆனால், ஆதிமுதல்வானான ஈசனின் மகனுக்கு முன்பாக அவை தோற்றன. முருகனின் கை வேலுக்கு சக்திவேல் என்றுபெயர். அன்னையே தன் அம்சமாக அந்த வேலை முருகக் கடவுளுக்கு வழங்கினார். அந்த சக்திவேல் சூரர் படையை அழித்தது.

வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்று உணர்ந்த சூரபத்மன், இறுதியில் தன் மாயையால் வெல்ல நினைத்து மாமரமாகி நின்றான். வீரத்தை வெல்ல சக்தியாக நின்ற வேல், மாயையை வெல்ல ஞானவேலாக மாறியது. மாயையை இருகூராகக் கிழித்தது. பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும், மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார்.

Also Read : ஆரோக்கியத்துக்கும், செல்வச் செழிப்புக்கும், தீபாவளிக்கும் என்ன தொடர்பு? அதிசயிக்க வைக்கும் ஆன்மிகமும், அறிவியலும்!

இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு, ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்ஹாரமாகும்.

சூர சம்ஹாரம் ஞான உபதேசமாக மாறிப்போக, பகைவனான சூரபத்மன் முருகக் கடவுளின் புகழ்போற்றும் கொடியும் வாகனமும் ஆனான். ஆணவம் அழிந்து ஞானமும் பெற்றுவிட்டால் எந்த ஆன்மாவும் அந்தப் பரமாத்மாவோடு ஐக்கியமாகிவிடலாம் என்பது கந்த சஷ்டி சொல்லும் வாழ்க்கை ரகசியம். அந்த ஞானத்தைப் பெற்றுத் தரும் அற்புத விரதமே கந்த சஷ்டி.

இந்த ஆண்டு நவம்பர் 13 அன்று தொடங்கும் இந்த விரதம், ஆறாவது நாளான நவம்பர் 19 அன்று சூரசம்ஹாரத்தோடு நிறைவுபெறும். தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம். ஆறு நாள்களும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து திருநீறு தரித்து, முருகக் கடவுளை வணங்க வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது சிறப்பு.

Also Read : களைகட்டும் திருக்கார்த்திகை! சொக்கப்பனை என்றால் என்ன? ஜோதி வடிவான ஈசனை போற்ற யார் விதிக்க முடியும் தடை?

குறிப்பாக, யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெறும் ஆலயங்களுக்குச் செல்வது விசேஷம். ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிக்க வேண்டும்.  உடல் ஆரோக்கியம் அனுமதிப்பவர்கள் ஆறு நாள்களும் உண்ணா நோன்பிருக்க வேண்டும். கடுமையாக விரதம் இருப்பவர்கள் மிளகு விரதம் கடைபிடிப்பார்கள்.

முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாளில் இரண்டு மிளகு, என ஏழு நாட்கள் மிளகு உண்டு விரதம் இருப்பவர்கள் உண்டு. இளநீர் மட்டும் எடுத்து கொள்வது, பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கொள்வது, கீரை உணவு வகைகள் மட்டும் எடுத்து கொள்வது, சிலர் ஒரு வேளை உணவு உண்பார்கள், சிலர் காலை தவிர்த்து மீதமுள்ள இரண்டு வேளைகள் உணவருந்தி விரதம் இருப்பார்கள். அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்து விரத முறையை தேர்ந்து எடுத்து கொள்வார்கள்.

எதுவாக இருந்தாலும் ஆறுநாள்களும் ஒரே மாதிரி வழக்கத்தைப் பின்பற்றுவது நன்று. பருத்தி ஆடைகள், பச்சை மற்றும் காவி நிற ஆடைகளை விரத காலத்தில் உடுத்தி கொள்ளலாம். முருகனின் பெருமைகளைப் பாடும், கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், வேல் வகுப்பு போன்ற துதிகளை நாள்முழுவதும் பாட வேண்டும். இதன்மூலம் மன ஒருமைப்பாடு சாத்தியப்படும்.

Also Read : ஸ்டாலின் கடவுள் இல்லைன்னு சொல்லுவாரு, ஆனா பெருமாள் பக்தர்! உண்மையை ஒப்புக்கொண்ட துர்கா ஸ்டாலின்!

சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகாசரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச்சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர்.

ஆறாவது நாள் சூர சம்ஹாரத்தை தரிசித்து நீராடிப் பின் முருகனை வழிபட வேண்டும். ஒருசிலர் சூரசம்ஹாரம் முடிந்ததும் உணவு எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. ஏழாவது நாள் காலையில் முருகப் பெருமானை தரிசித்த பின்பு உணவு உண்டு விரதம் முடிப்பதே சிறந்தது. விரதத்தில் முக்கியமானது பக்தி. இந்த ஆறுநாள்களும் முருகனை மனதில் நினைத்துத் துதித்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு விரதம் இருந்தால் முருகப் பெருமானின் அருள் ஸித்திக்கும்.

Also Read : எதற்காக கோயில்களுக்குப் போக வேண்டும்? அகத்திலிருந்தே மனதை ஒருநிலைப்படுத்தினால் போதாதா?

இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறை ஆற்றலின் பெருமையே கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

மு – முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு – ருத்ரன் என்கிற சிவன்
க – கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

ஆறுமுகமான – சண்முக தத்துவம் என்ன ?

ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் – அக்னிக்கு,
மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் – பிரம்மனுக்கு,
ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் – கந்தனுக்கு.

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார்:

  1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
  2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
  3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
  4. உபதேசம் புரிய ஒரு முகம்,
  5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
  6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

ஸரவணபவ – என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன?

  • ஸ – லக்ஷ்மிகடாக்ஷம்
  • ர – ஸரஸ்வதி கடாக்ஷம்
  • வ – போகம் – மோக்ஷம்
  • ண – சத்ருஜயம்
  • ப – ம்ருத்யுஜயம்
  • வ – நோயற்ற வாழ்வு

ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி பயன்பெறலாம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்
பழனி – மணிபூரகம்
சுவாமிமலை – அனாஹதம்
திருத்தணிகை – விசுத்தி
பழமுதிர்சோலை – ஆக்ஞை.

முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான், இது தேவ மயில். பின்னர் சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடிவிடுவார்கள்.

வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே
தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு
மேவ வாராதே வினை.

என்பது முன்னோர்கள் மொழி. வந்தவினை மட்டுமல்ல வரப்போகும் வினையையும், முன்கூட்டியே தீர்க்கின்ற ஆற்றல் வேலன் வழிபாட்டிற்கு உண்டு. மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் குமரனுக்கு உரிய நாள். எனவே சஷ்டி விரதம் அனுசரித்து முருகன் அருள் பெறுவோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry