Aadi Krithigai! ஆடிக் கிருத்திகை விரதமுறை, பலன்கள்! முருகப்பெருமானின் மூல மந்திரம்!

0
57
Lord Muruga

வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு, ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய “ஆடிக் கிருத்திகை”.

கிழமைகளில் செவ்வாயும், திதிகளில் சஷ்டியும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் முருகனுக்கு உகந்தது. ஆடிக் கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக் கிருத்திகை என மூன்று கிருத்திகைகளே முக்கோடி கிருத்திகை என அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்தவை. தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வருவது ஆடிக் கிருத்திகை. கிருத்திகை நட்சத்திரம் முருகனை வழிபட மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

Also Read : வீடுகளில் எளிதாக வளர்க்கக்கூடிய அவசியமான மூலிகைகள்! மருத்துவ பயன்களுடன் ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஆடிக் கிருத்திகை சிறப்பு குறித்தும், அந்நாளில் முருகனின் அருளை பெறும் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் இருக்கும் முறை குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இந்தாண்டு  ஆடி கிருத்திகை நாளை (ஆகஸ்ட் 9) வருகிறது. முருகப்பெருமானின் ஆலயங்கள் நாளை பக்தர்களால் நிரம்பி வழியும். ஆறு படை வீடுகளில் ஆடிக் கிருத்திகை விழா களைகட்டும்.

ஆடிக் கிருத்திகை நாளில் முருகனை மகிழ்விக்க சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. ஆடிக் கிருத்திகை நாளில் காவடி யாத்திரை முக்கிய நிகழ்வு ஆகும். முருகப்பெருமானுக்கு உகந்த திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படிப்பதோ அல்லது கேட்பதோ மிகவும் நல்லது. திருப்புகழ் பாராயணம் செய்வோருக்குத் தீராத துன்பமும் தீரும்.

கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரங்கள் இணைந்த கூட்டத்தின் பெயர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும், ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர, அவற்றை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால், அவர்கள் 6 பேரும் முருகப்பெருமானுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.

Also Read : விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் மாதுளை! சருமப் புற்றுநோயை தடுத்து, இதயத்தையும் ஆரோக்கியமாக்கும் மாதுளை தோல்!

கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரிய பகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. எனவே, கிருத்திகை நட்சத்திர நாளில் முருக வழிபாடு செய்வதன் மூலம் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். பொதுவாகவே, கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல அழகோடும் பொலிவோடும் காணப்படுவர். கிருத்திகை தினத்தன்று அவர்கள் விரதமிருந்து வழிபட்டால் மேலும் அழகும் அறிவும் பெறுவர். அதிலும் குறிப்பாக, ஆடிக்கிருத்திகை அன்று முருகனை வழிபட்டால் அவை மேம்படும்.

கிருத்திகை விரதமிருப்பவர் அதிகாலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, இயலாதவர்கள் வீட்டிலேயே நீராடிவிட்டு, பூஜை அறை உள்பட வீட்டை தூய்மைப்படுத்தி, முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு பூக்களிட்டு இருபுறமும் நெய் தீபமேற்றி, தேங்காய், பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும். காலை உணவேதும் உட்கொள்ளாமல், மதியம் உப்பில்லா உணவை முருகனுக்கு படைத்து அதை உண்டு, இரவு பால் பழத்தோடு விரதத்தை முடிக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் அனுமதித்தால், மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் குளித்து விட்டு முருக பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

Also Read : அரைஞாண் கயிறு! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய அறிவியல், ஆரோக்கியம்!

கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. ஆடிக் கிருத்திகையன்று கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றை மனமொன்றி படிக்க வேண்டும். ஆடி மாதத்தில் தொடங்கி, ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

‘ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்று சொல்வார்கள். ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள்.

மேலும், ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். எனவே, செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை – செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும், பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

“ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்”

என்ற முருகப்பெருமானின் மூல மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜபித்து, மனமுருக பெருமானைப் பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry