களைகட்டும் திருக்கார்த்திகை! சொக்கப்பனை என்றால் என்ன? ஜோதி வடிவான ஈசனை போற்ற யார் விதிக்க முடியும் தடை?

0
462

தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீபமும் ஒன்று. ‘கார்த்திகை விளக்கீடுஎன திருக்கார்த்திகை தீப விழாவை இலக்கியங்கள் போற்றுகின்றன. கார்த்திகை மாதம் முழுக்கவே வீட்டு வாசல்களில் தீபமேற்றி வழிபடுவது நமது பாரம்பரிய வழக்கம். கலாச்சார மாற்றம் இந்த வழக்கத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டது.

திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல தலங்களில், மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதில் திருவண்ணாமலை தீபம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றுவதற்கான வெண்கல கொப்பரை, கி.பி. 1745-ல் மைசூர் சமஸ்தான் அமைச்சர் வெங்கடபதிராயால் வழங்கப்பட்டது. தீபத்திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும். (கொரோனாவால் இந்த ஆண்டு இல்லை) அதில் உண்ணாமுலை அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச் செல்வார்கள்.

Also Read : கொடியேற்றத்துடன் தொடங்கியது தீபத் திருவிழா! வரும் 29-ந் தேதி மகா தீபம்!

தீபத்திருநாளன்று அதிகாலையில், அண்ணாமலையார் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் மாலை கொடிமரத்தின் அருகே பரணி தீபங்கள் ஒன்று சேர்ந்ததும், தீப்பந்தத்தை அடையாளமாகக் காட்டுவார்கள். அதன் பிறகு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதேநாள் மாலை வேளையில் திருக்கோயிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கும். இந்த ஒருநாள் மட்டுமே அவரை தரிசிக்க முடியும். மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் திருவூடல் உற்சவத்தின்போது, அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள்.

சொக்கப்பனை

கார்ததிகை விழாவில் சிறப்பு பெறும் மற்றொரு முக்கிய வைபவம் சொக்கப்பனை கொளுத்துதல். சொக்கர் பனை என்பதே சொக்கப்பனையாக மருவியுள்ளது. சகோதரர்களான தாராகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களை சிவபெருமான எரித்து அழித்தார் என்பது ஐதீகம். ஆணவம், கன்மம், மாயை ஆகிய 3 தீய குணங்களை சிவபெருமான் எரித்து அழித்தார் என தத்துவ ரீதியாகவும் இதைக் கூறுவார்கள். இந்தச் சம்பவம் கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று நடந்ததால், அதை நினைவூட்டும் விதமாக சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

திருக்கார்த்திகை தினத்தன்று, பனை மரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளை கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பு உருவாக்கப்படும். (திருநெல்வேலி மாவட்டம் உவரியில் 30-35 அடி உயர சொக்கப்பனை அமைக்கப்படும்)மாலை வேளையில் இந்த சொக்கப்பனை முன் ஸ்வாமியும், அம்பாளும் எழுந்தருளுவார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளுவது உண்டு. இவர்களுக்கு தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி பக்தர்கள் வழிபடுவார்கள்

சொக்கப்பனை எரிந்து முடிந்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பக்தர்கள் பூசிக்கொள்வார்கள். சொக்கப்பனை சாம்பலை எடுத்துச் சென்று வயல்களில் தூவுவார்கள். அப்படி செய்தால் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை தீபத்தின் நோக்கமே பாவத்தை போக்குதல்தான், அதாவது வாழ்வில் பாவம் எனும் இருள் நீங்கி, தீபம் போல நமது வாழ்க்கை பிரகாசிக்கும். வீட்டிலிருந்தவாறே ஜோதி வடிவான ஈசனை மனமுருக பிரார்த்திக்க யாரும் தடை விதிக்க முடியாது. வாசகர்களின் வீடுகளில் அகல் விளக்கு ஒளி வீச, இல்லங்களில் இன்ப ஒளி கூட, அண்ணாமலையாரிடமும், முருகப்பெருமானிடமும் வேல்ஸ் மீடியா சார்பாக பிரார்த்திக்கிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry