புதுச்சேரி பாஜக-வின் ஸ்பீட் பிரேக்கராக மாறிப்போன சாமிநாதன்! மெத்தனமான செயல்பாட்டால் மலராத தாமரை!

0
53

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அமித் ஷாமோடி இணை வழிகாட்டுதலில், பாரதிய ஜனதா கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும், பாஜக, குடத்திலிட்ட விளக்காய் இருப்பது, கட்சி மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தை முன்வைத்து முழுவீச்சில் செயல்பட்டு வரும் பாஜக, பீகார் சட்டப்பேரவை மற்றும் 11 மாநில இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரசுக்கு மட்டுமல்லாது, மாநிலக் கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. தென் மாநிலங்களில் பாஜக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புதுச்சேரியில், மாற்றுக்கட்சியினர் பலர் பாஜகவில் இணைந்து வந்தனர். ஆனால், மாற்றுக்கட்சி பிரபலங்கள் யாரும் இணையவில்லை. இதுபற்றி வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே எழுதியிருந்தோம்.

Also Read : புதுச்சேரியில் மொட்டு விடும் தாமரை! பாஜகவில் இணைய ஆர்வம் காட்டும் மாற்றுக் கட்சியினர்!

புதுச்சேரியில் மொட்டுவிட ஆரம்பித்த தாமரை அதற்கு மேல் மலராததற்கான காரணம் என்ன என்பது குறித்து அம்மாநில பாஜக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத அவர்கள், பெரிய வருத்தத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. பொங்கித் தீர்த்துவிட்டனர். “மாநிலத்தில் கட்சி வளராததற்கு, மாநில தலைவர் சாமிநாதனே காரணம். இரண்டாவது முறையாக மாநிலத் தலைவர் பதவி கிடைத்துள்ளபோதும், அவரே ஸ்பீட் பிரேக்கராக இருக்கும்போது, கட்சி எப்படி அடுத்த கட்டத்துக்குச் செல்லும்? புதுச்சேரி பாஜகவுக்கு தாம்தான் நிரந்தர தலைவர் என்ற மனோநிலையில் அவர் இருக்கிறார்.

தமக்கு போட்டியாக வளர்ந்துவிடுவார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, சக நியமன எம்எல்ஏக்களான, சங்கர், செல்வகணபதியை வெளி உலகத்துக்கு காட்டாமல் தந்திரமாக ஓரங்கட்டிவைத்துள்ளார்.

மக்கள் செல்வாக்கு பெற்ற பிரபலங்கள் கட்சிக்கு வந்தால் தனது முக்கியத்துவம் குறையும் என அவர் நினைப்பதால், பிரபலங்களை கட்சிக்கு வரவிடாமல் பார்த்துக்கொள்கிறார். புதுச்சேரியின் பெரும்பான்மையான வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் கட்சியில் வளர்ந்து விடக்கூடாது என்பதை அவர் தாரக மந்திரமாகவே கொண்டுள்ளார்.

புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க ஆளுநர் முயற்சிப்பதாக முதலமைச்சர் கூறிவருகிறார். இதுபற்றி சாமிநாதன் என்ன கருத்து தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சி என்ற வகையில், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தும், அரசுக்கு எதிராகவும் எத்தனை பெரிய போராட்டங்களை அவர் நடத்தியிருக்கிறார்? தேர்தலை எதிர்கொள்வதற்கான எந்த திட்டமிடலும் அவரிடம் இல்லை என்றே தெரிகிறது. அறிக்கை அரசியல் செய்து வரும் அவர், வேட்பாளராக நிறுத்தும் அளவுக்கு எத்தனை தொகுதிகளில் நிர்வாகிகளை வளர்த்துவிட்டுள்ளார்?

புதுச்சேரி பாஜகவில் பெரும்பாலான நிர்வாகிகள் லாஸ்பேட்டை தொகுதியைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். மற்ற தொகுதிகளில் இருந்து பதவி பெற யாருக்கும் தகுதி இல்லையா? மாநில தலைவர் பொறுப்பு, நியமன எம்.எல்.. பதவி போன்றவை அவருக்கு தேடி வந்தது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பொறுப்பு கிடைத்தது போல, தமக்கும் பெரி பொறுப்பு கிடைத்துவிடும் என அவர் நம்புகிறார்.

தமிழகத்தில் மாநில தலைவர் எல். முருகன் எவ்வளவு சிறப்பாக பணியாற்றுகிறார். கூட்டணியில் இருந்தாலும், அதிமுக தவறுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். எல். முருகன் நடத்தும் வேல் யாத்திரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகிறது, கட்சியினருக்கும் புது உத்வேகம் அளிக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சாமிநாதன் என்ன செய்திருக்கிறார்? நாராயணசாமி அரசு மீது மக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. அதை கட்சிக்கு சாதகமாக மாற்ற அவர் எதுவுமே செய்யவில்லை.

புதுச்சேரி பாஜகவில் சாமிநாதன் மற்றும் வன்னியரான ஏம்பலம் செல்வத்தை தவிர வேறு யாரையும் மக்களுக்குத் தெரியாது. சாமிநாதன் கட்சியை கம்பெனி போல நடத்துகிறார் என விசிசி நாகராஜன் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் மோடி, அமித் ஷா ஆகியோரின் உழைப்பை பயன்படுத்தாமல், புதுச்சேரியில் கட்சியை வளர்க்காமல், சாமிநாதன் வீணடித்து வருகிறார் என்பது மட்டும் உண்மைஎன்று கூறி முடித்தார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry