எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரும் வழக்கு! சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

0
21

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது.

2021-ம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக நானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்ந்தெடுக்கபட்டோம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணைக் கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கபட்டனர். சட்டமன்ற கட்சியின் செயலாளராக அன்பழகன் மற்றும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்வு செய்யப்பட்டனர்.

2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டு, ஜூலை17-ல் கட்சியின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமார், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்து சபாநாயருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். 5 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கையின் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Also Read : பலரும் அறியாத முருகனின் மகிமைகள்! கைமேல் பலன்கொடுக்கும் கந்தசஷ்டி விரதம்! Kandha Sashti Viratham!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் முறையிட்டோம். அது தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களுடன் அமர்ந்து இருப்பதால், விவாதங்களின் போது அதிமுகவினரால் திறமையாக செயல்பட முடியவில்லை. எனவே, கட்சியில் இருந்து சட்டமன்ற பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கபட்டவர்களை அங்கீகரிக்க, சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு உரிய இருக்கையை ஒதுக்கி அங்கீகரிக்க கோரி 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும், சபாநாயகர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை” என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் ஆகியோர் வரும் டிசம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry