Wednesday, December 7, 2022

#EWS சட்டத்தை உருவாக்க துணைபுரிந்த திமுக இப்போது இரட்டை வேடம் போடுகிறது! அதிமுக கண்டனம்!

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”எம்.ஜி.ஆர், தனது திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியது போல, அரசியலில் இரட்டை வேடம் போட்டு தானும் வெற்றி பெறலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது கனவில் மிதந்து வருகிறார்.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில், தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக, சட்டமன்ற அனைத்துக் கட்சிகளையும் முதல்வர் துணைக்கு அழைக்கிறார். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து ஆராய 2006-ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ்-திமுக கூட்டணியிலான மத்திய அரசு. அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ்-திமுக மத்திய கூட்டணி அரசு.

Also Read : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நீடிக்கும் மழை! சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர்! மக்கள் அவதி!

இந்த சட்டத்தை தான் இன்றைய பாஜக அரசு 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. காரியம் ஆகவேண்டுமென்றால் யார் காலையும் பிடிப்பதும், காரியம் முடிந்தவுடன் காலை வாருவதையும் கொள்கையாகக் கொண்ட திமுக தலைமை, தற்போது பாஜக தேவையில்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பதுபோல் நடிக்கிறது.

இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, நமது வாதங்கள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தாமல், வழக்கின் தீர்ப்பு வந்தபிறகு, தற்போது மற்ற கட்சிகளை அழைப்பதை எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?

இன்றைய தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், இந்த முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்து கொண்டு, அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான இந்த இட ஒதுக்கீட்டை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளன.

Also Read : 35 ரூபாயாக இருந்த கரன்ட் பில், இப்போது 2 ஆயிரம் ரூபாய்! அதிரவைக்கும் மின்வாரியம்! இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு!

அதிமுகவை பொறுத்த வரை எந்தவொரு இட ஒதுக்கீடாக இருந்தாலும், அது எவரையும் பாதிக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69% இட ஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பிரச்னை வந்தபோது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து, அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க வைத்து நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்தார். மேலும் அரசியல் சாசன சட்டத்தின் 9-வது அட்டவணையில் இதை சேர்த்து உறுதிப்படுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எளிய மக்களுக்காக சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தி தந்த 69% இடஒதுக்கீட்டிற்கு எந்தவித பங்கமும் வராமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளையும், தலைசிறந்த வழக்கறிஞர்களையும் வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்காட வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

Also Read : முன்னாள் ஐ.ஜி. ஜாபர் சேட், கருணாநிதியின் செயலாளர் குடும்ப சொத்துக்கள் முடக்கம்!அமலாக்கத்துறை அதிரடி!

ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி, மத்தியில் ஆட்சி செய்தபோது கொண்டு வந்த இந்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு விஷயத்திலும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு / மறு சீராய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த திமுக-வின் கபட நாடகத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles