இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்! ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி துணிச்சலான முடிவெடுத்ததாக பாராட்டு!

0
69
CM M.K. Stalin and Leader of Opposition Edappadi Palaniswami

நீண்ட கால இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி சட்டப்பேரவையில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது.

சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியக் கைதிகள், அவர்களின் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் கூட, 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் வாடிக் கொண்டுள்ளனர். கோவை மத்திய சிறையில் மட்டும் 38 கைதிகள் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்வோம் என தேர்தல் பரப்புரையின்போதும், பிரச்சார பொதுக்கூட்டங்களிலும், இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகளிடமும் திமுக தலைமை உறுதி தந்தது. ஆனால் ஜெயலலிதா காலம் தொட்டு, முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை பற்றி நாங்கள் பேச மாட்டோம் என வெளிப்படையாகவே அறிவித்து வந்தது அதிமுக.

Also Read : இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலைகோரி, அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம்! முதல்வர் கோபமும், எரிச்சலும் அடைவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

தேர்தல் நேரங்களில், அதிமுக தலைவர்களைச் சந்தித்த இஸ்லாமிய பிரதிநிதிகள், சிறைவாசிகள் விவகாரம் குறித்து, வாக்குறுதி அளிக்குமாறு கேட்க, அது எங்கள் அஜெண்டாவில் இல்லை என வெளிப்படையாக அறிவித்தது அதிமுக தலைமை. மாறாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறையில் வாடும் இஸ்லாமியர்களை முன் விடுதலை செய்வோம் என உறுதி கூறி வந்தது திமுக.

அதன் அடிப்படையில், சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., முன் விடுதலையின்போது இஸ்லாமிய சிறைவாசிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என நம்பினோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளியிட்ட அரசாணையில், `முன் விடுதலை’ என்ற சலுகையைப் பெறுவதற்குத் தகுதியுள்ள சிறைவாசிகள் யார்? என்பது குறித்து பட்டியலிடப்பட்டது.

அந்த ஆணையில், பயங்கரவாதம், மதமோதல், வகுப்பு மோதல், பாலியல் வன்கொடுமை, சாதி மோதல், அரசுக்கு எதிராக செயல்பட்டவர்கள், சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு என 17 குற்றங்களை வகைப்படுத்தி, இந்தக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் இஸ்லாமிய சிறைவாசிகளின் முன் விடுதலை கேள்விக்குறியாக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, காவல்துறை, உளவுத்துறை, பாஜக தலைவர்களின் அழுத்தம் காரணமாக, சிறைவாசிகள் விவகாரத்தில் கடும்போக்கை கையாண்டு வந்தார். ஆனால் எல்லா அரசியல் கணக்குகளையும் தவிடு பொடியாக்கி, அதிமுகவின் நீண்ட கால நிலைப்பாட்டையே தலைகீழாக மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அரசியல், வாக்கு வங்கி இவை அனைத்தையும் தாண்டி, ஜெயலலிதாவால் கூட எடுக்க முடியாத துணிச்சலான முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அதிமுக அதிரடியாக வெளியே வந்ததை, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள், திராவிட இயக்க சிந்தனையாளர்கள், தலித் செயற்பாட்டாளர்கள் பெரிதும் வரவேற்று போற்றி வருகின்றனர். இஸ்லாமிய சிறைவாசிகள் முன் விடுதலையை ஆதரித்தால், அதிமுகவின் பாரம்பரிய கொங்கு மண்டல வாக்குவங்கியில் பாதிப்பு ஏற்படும் என்ற பாஜகவின் பூச்சாண்டிகளை புறந்தள்ளி அதிரடி முடிவை எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சிறைவாசிகள் விவகாரத்தை, முஸ்லிம் கட்சிகளைத் தாண்டி, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவையும் வலியுறுத்திப் பேசி வந்தன. தற்போது, அதிமுக பேசி இருப்பதன் மூலம், அந்த விவகாரம் வெகுஜனப் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. “இஸ்லாமிய சிறைவாசிகளின் முன் விடுதலைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் அவர்களுக்கு நீதி வழங்க முடியும்” என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Also Read : ஆசிரியர்கள் போராட்டம் பற்றி விவாதம் நடத்தாதது ஏன், அரசின் மீதான அச்சமா..? ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட ஈபிஎஸ் வலியுறுத்தல்!

இஸ்லாமிய சிறைவாசிகள் விவகாரம் குறித்து, ஓரிரு தருணங்களில் சட்டப்பேரவையில் பேசியுள்ள முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள், முஸ்லிம் சிறைவாசிகள் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல், நீண்ட கால சிறைவாசிகள் என்ற வார்த்தைகளையே பயன்படுத்தினர். அந்த அளவுக்கு அந்த விஷயத்தில் திமுக தலைமை அவர்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு, மற்றும் குண்டு வெடிப்பு அல்லாத வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது, சுமார் 25 ஆண்டுகளாக சிறைகளில் உள்ள இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்க கூடாது என தமிழக அரசு நீதிமன்றங்களில் கூறி வருகிறது. அதே நேரம் 20 கைதிகளை விடுவிக்கலாம் என ஆதிநாதன் குழு கூறியுள்ளதாகவும், அந்தப் பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

ஒரு திரைப்படத்தில் நான் மலையை தூக்குகிறேன் எனக்கூறி ஊர் மக்களை ஒன்று திரட்டும் நடிகர் செந்தில், மலையை தூக்கி தனது முதுகில் வைத்தால், தூக்குகிறேன் என்பார். அதைப் போலவே தமிழக அரசின் இந்த விளக்கம் பார்க்கப்படுகிறது. பாஜக தனது பாரம்பரிய வாக்காளர்கள் எவ்வளவு பெரிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டாலும், அவர்களை சட்டத்தை வளைத்து காப்பற்ற தயங்குவதில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு உள்ளிட்ட இந்தியாவையே உலுக்கிய, 100க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட, கொடூர தாக்குதல்களை நடத்திய பிரக்யா சிங் தாகூர் போன்ற பயங்கரவாதிகள் மக்களவையை அலங்கரித்துள்ளனர்.

Also Read : டெங்கு காய்ச்சலுக்கு ஏற்ற மருத்துவம் எது? Medicine & Treatment for Dengue Fever!

குஜராத்தில் பல்கீஸ் பானு வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொடூர வழக்குகளில் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் நற்சான்று பெற்ற, சிறையில் பட்டப்படிப்பு வரை பயின்ற, இவர்களை விடுதலை செய்வது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்ட பல இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்காமல், நொண்டிக் காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு.

25 ஆண்டு காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளான கூலை இப்ராஹிம், யாசுதீன் கபாலி ஆகியோர் தங்களது முன் விடுதலைக்காக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தி.மு.க. அரசு மதத்தைக் காரணமாகக் காட்டி, எதிர்ப்புத் தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ‘முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்தால் சமூக அமைதி சீர்குலையும் என்றும், அவர்களின் விடுதலை, மேடைப்பேச்சாக மாறி சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தும், அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்’ என்று தமிழக அரசு பிரமானப் பத்திரத்தில் கூறியிருந்தது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read : இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனையின் பின்னணி! ஹமாஸ் இயக்கம் தோன்றிய வரலாறு! The Israeli-Palestinian conflict!

இஸ்லாமியக் கைதிகள் முன் விடுதலை தொடர்பான கோப்புகளை விரைந்து பரிசீலனை செய்து, அவர்களை முன் விடுதலை செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். விடுதலை செய்ய தி.மு.க. அரசுக்கு அதிகாரமிருந்தும், ஆளுநருக்கு அனுப்பித்தான் விடுதலையைப் பெற வேண்டுமென கூறுவது, போகாத ஊருக்கு வழிகாட்டுவது போல இருக்கிறது.

இந்தச் சூழலில், அதிமுகவின் கவன ஈர்ப்புத் தீர்மானம் இஸ்லாமியர்களின் காயங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது. இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில் நம்பிக்கையளிக்கும் செய்தி இல்லை, நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதம் எதுவும் அரசு சார்பில் அளிக்கப்படவில்லை. திமுக இதே நிலைப்பாட்டில் தொடர்ந்தால், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகள் எட்டாகனியாகும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கட்டுரையாளர் : கா. இஸ்மாயில், மூத்த ஊடகவியலாளர், ஆசிரியர் – Q7 டிஜிட்டல் ஊடகம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry