சென்னையில் ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு, கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டன் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால், அது திமிர் பிடித்து ஆடும். வீட்டில் உள்ள பண்டபாத்திரங்களை எல்லாம் கொத்தும். சிட்டுக்குருவிகளுக்கே உள்ள புத்தி அது. அதுபோல், தகுதிக்கு மீறிய பதவி, அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து, எதற்காக விருப்ப ஓய்வு பெற்றார் என்று எனக்கு தெரியாது. அங்கு சென்று கிளறினால்தான், இவரைப் பற்றி தெரியும்.
ஒரு அரசியல் தலைவருக்கே லாயக்கில்லாத, பாஜக தலைவருக்கே லாயக்கில்லாத, சிறுமைபுத்திக் கொண்ட, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அண்ணாமலை பேசி வருகிறார். அதிமுக என்பது ஒரு சிங்கக் கூட்டம். அந்த சிங்கக் கூட்டத்தைப் பார்த்து, சிறு நரி அண்ணாமலை ஊளையிடுகிறது. ஊளையிடும் இந்த சிறு நரி தனியாக சென்று நிக்கட்டும்.
Also Read : சுயநலத்துக்காக கூட்டணியை உடைக்கும் கரூர் கோமாளி! அண்ணாமலைக்கு அதிமுக தொண்டனின் பதிலடி!
நோட்டாவுக்கு கீழே அண்ணாமலை வாக்குவாங்குவாரே தவிர, நோட்டாவைத் தாண்டமாட்டார். அப்படியிருக்கிறது அவருடைய செல்வாக்கு. பெரியார் குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எம்ஜிஆர், குறித்துப் பேச என்ன தகுதி இருக்கிறது?
எனவே, தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக, எங்கு பார்த்தாலும், அண்ணாமலை வாழ்க என்று சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு தோழமைக் கட்சி, கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்து முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அதை ஒருகாலும் அதிமுக தொண்டன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.
அண்ணாமலைக்கு பலமுறை எச்சரிக்கை கொடுத்தோம். அதிமுகவினர் திரண்டு எழுந்தால் நீங்கள் தாங்கமாட்டீர்கள். இனிமேல் அதிமுகவினர் அண்ணாமலையை விடமாட்டார்கள். அண்ணாமலையை ஐடி விங்கில், தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். நீங்கள் ஒரு கருத்து சொன்னால், அண்ணாமலை விமர்சனத்துக்கு எதிராக ஓராயிரம் எதிர்கருத்து சொல்லப்படும். அண்ணாமலை குறித்து மேலிடத்திலும் புகார் செய்துவிட்டோம்.
என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, இவரை திருத்த வேண்டும், இதுபோல அவரை பேச வேண்டாம் என்று கூறிவிட்டோம். கூட்டணியில் இருக்கும்போது அண்ணாமலை இவ்வாறு பேசினால், தேர்தல் நேரத்தில் எப்படி வேலை செய்வார்கள்? பாஜக தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை.
Also Read : வாழும் பெரியார் ஈபிஎஸ்! பெண் உரிமையை குழி தோண்டி புதைத்த ஸ்டாலின்! அதிமுக குற்றச்சாட்டு!
அவர் விரும்பாத சூழலில், இதுபோன்ற கருத்தைக் கூறி, எங்களுடைய தலைமையிலான கூட்டணியில் இருந்துகொண்டு அண்ணாமலை வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படி என்ன எங்களுக்கு அவசியம் இருக்கிறது? உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது? உங்களை யாராவது சுமக்கத்தான் வேண்டும். உங்களுக்கே காலே கிடையாது. அண்ணாமலைக்கு காலே கிடையாது.
பாஜக இங்கு கால் ஊன்றவே முடியாது. எந்தளவுக்கு உங்களுக்கு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரியும். அதிமுகவை வைத்துதான் உங்களுக்கு அடையாளமே. ஒரு தன்மானமுள்ள தொண்டன் அண்ணாமலையின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில், மேலிடத்திலும் அவர் குறித்து புகார் அளித்தாகிவிட்டது. திரும்பத்திரும்ப இதுபோல பேசினால், இனியும் பொறுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை.
எனவே, பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்” இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry