தேசியக் கல்விக் கொள்கையை பகிரங்கமாக அமல்படுத்தும் SCERT! மாணவர்கள் நலன் காக்கும் முடிவை எடுக்குமாறு டிட்டோஜாக் அமைப்புக்கு ஐபெட்டோ அறிவுரை!

0
143

ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வீரம் செறிந்த தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களுக்கான போராட்ட வரலாற்றுப் பதிவுகள் நமக்கெல்லாம் எப்போதும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. ஏழு சங்கங்களில் தொடங்கிய டிட்டோஜாக் இன்று 11 சங்கங்களாகப் பெருகி இருப்பது சமுதாய பாதிப்புக்களைக் களையும் வலுவினை ஏற்படுத்தித் தரட்டும்.

முந்தைய காலக் கட்டங்களில் பொதுக் கோரிக்கைகளுக்காகப் போராடினோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில், எமிஸ் இணையதள சித்திரவதை, பிரிட்ஜ் கோர்ஸ் திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டத்தால் கல்வி நலனுக்கும், கற்பித்தல் திறனுக்கும் ஏற்பட்டுள்ள பெருத்த பாதிப்பு, பயிற்சியை நடத்துவதற்கு குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமனம் செய்தல், எதுவாளர்களாக நியமித்தல், பயிற்சி கட்டகம் தயாரிப்பதற்கு மாதக்கணக்கில் நியமித்தல் என ஒட்டுமொத்தத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதற்கு வாய்ப்பளிக்காத திட்டங்கள்.

Also Read : ஆசிரியர்களின் குரல் அமைச்சருக்குக் கேட்கவில்லையா? SCERT இயக்ககம் ரகசியத் திட்டத்துடன் செயல்படுகிறது! ஐபெட்டோ விமர்சனம்!

ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய உயிர்கொல்லித் திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டத்தைத் தொடரக்கூடாது என்று நாம் முழக்கமிடுகிறபோது, இந்தத் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு பி.எட்., மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

29/08/2023 அன்று சென்னையில் இயக்குநர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மதிப்பீடு செய்வதற்காக பி.எட்., மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்ற உறுதிமொழியையும் மீறி, ஏழாம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரையில் பி.எட்., மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.

பள்ளிகளில் மதிப்பீடு செய்வதற்கு பி.எட்., மாணவர்களை அனுப்புவதில் SCERT இயக்ககம் பிடிவாதமாக இருந்ததைப் போல், நாமும் பள்ளிகளுக்குள் பி.எட்., மாணவர்களை அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்து நமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினோம்.

நாடு முழுவதும் செப்டம்பர் 11ஆம் தேதி 38 மாவட்டத் தலைநகரங்களிலும் பெரும் எண்ணிக்கையில் மகளிரணியினர் பங்கேற்று எமிஸ் இணையதள பிரச்சனைகள், எண்ணும் எழுத்தும் திட்டதால் மன உளைச்சல் மற்றும் தேவையற்ற பயிற்சிகளுக்கு எதிராக கோரிக்கை முழக்கமிட்டார்கள். போராட்டம் நடைபெற்ற அந்த நாளிலும் SCERT இயக்குநர் பிடிவாதமாகப் பள்ளிகளுக்கு பி.எட்., மாணவர்களை அனுப்பி மதிப்பீடு செய்வதில் உறுதியாக இருந்தார்கள்.

Also Read : விருது பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது ஏன்? மத்திய அரசுக்கு ஐபெட்டோ அமைப்பு கண்டனம்!

38 மாவட்டங்களில் தலா 22 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்து, தேர்வு சமயத்தில் +1, +2 வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்தினார்கள். SCERT இயக்குநர் மற்றும் அவர்களது மாநில குழுவினருடைய ஆசிரியர் விரோதப் போக்கு, மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிரான போக்கிற்கு இருபதாம் தேதி நடைபெற உள்ள கூட்டம், அவர்களின் அதிகார வரம்பிற்கு ஒரு முடிவினை ஏற்படுத்தித் தர வேண்டும்.

மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசாங்கம் வைக்கக்கூடிய பொதுத் தேர்வினை கடுமையாக எதிர்க்கிறோம். ஆனால் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் வாராவாரம் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போல் திறன்பேசி (செல்போன்) வழியாக மதிப்பீடு நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இணையதள பிரச்சினையால் அந்தத் தேர்வினை நடத்துவதற்கு ஆசிரியர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

தேர்வுகளை, மதிப்பீடுகளை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வினாத்தாள் வைத்து மாநிலம் முழுவதும் நாளைமுதல் பொதுத்தேர்வினை நடத்துகிறார்கள். பல பள்ளிகளில் பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லை. ஆனால் SCERT இயக்ககம் பொதுத்தேர்வினை திட்டமிட்டு நடத்துவதில் உறுதியாக உள்ளார்கள். ஒட்டுமொத்தத்தில் தேசியக் கல்விக் கொள்கையினை பகிரங்கமாக SCERT இயக்ககம் தமிழ்நாட்டில் அமல்படுத்தி வருகிறது.

Also Read : அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை! அண்ணாமலை என்ற நரி ஊளையிடுகிறது! அதிமுகவினர் விடமாட்டார்கள்! ஜெயக்குமார் எச்சரிக்கை!

ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். ஆனால் SCERT இயக்ககம் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை போன்று நவீன குலக்கல்வித் திட்டத்தை அமல் படுத்துவதில் முனைப்புடன் மத்திய அரசின் கிளையாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நமது போராட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு உணர்த்த வேண்டும்.

போர்க்குணமிக்க டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களே..! நமக்கு கண்முன்னர் தெரிவதெல்லாம் நம் மீது நம்பிக்கை வைத்து நமது சங்கங்களில் கையொப்பமிட்டுள்ள ஆசிரியர் அன்புள்ளங்களின் முகங்கள் தான். நம் மீது நம்பிக்கை வைத்து பள்ளிக்கு வருகின்ற இளம் பிஞ்சுகளின் முகங்கள் தான். அரசியல் முகம் பார்ப்பதைத் தவிர்த்து, SCERT இழைத்து வரும் அநீதியிலிருந்து விடுதலை பெறும்வரை களத்தில் நின்று தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு நாம் திட்டமிடுவோம்.

தனிச் சங்கங்களின் போராட்டங்கள் அரசுக்கு எச்சரிக்கையினைத் தருகின்ற போராட்டங்களாக அமையாது என்பதை உணர்ந்து செயல்படுவோம். வெற்றி பெறும் வரை களத்தில் கரம் கோர்த்து நிற்போம். சரியான நேரமிது..! சந்தர்ப்பத்தினை நழுவ விட வேண்டாம்!” இவ்வாறு வா. அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry