என்.ஆர். காங்கிரஸில் ஐக்கியமானார் ஏ.கே.டி. ஆறுமுகம்! மெய்யானது வேல்ஸ் மீடியாவின் கணிப்பு!

0
90

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராகவும், மூத்த தலைவர்களில் ஒருவருமாகவும் இருந்த AKD ஆறுமுகம், என்.ஆர். காங்கிரஸில் இணைந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட AKD ஆறுமுகம், கடந்த சட்டமன்ற தேர்தலில், இந்திரா நகர் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார். ரங்கசாமிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்திய அவர், 3404 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளராக பணியாற்றி வந்த அவருக்கும், நாராயணசாமிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், கட்சியில் இருந்து ஆறுமுகம் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டார். கட்சிக்காக பெருமளவு செலவு செய்தும், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது அவருக்கு வருத்தமாகவே இருந்து வந்தது. எனவே, எதிரெதிர் துருவமாக இருந்தாலும் பரவாயில்லை, ரங்கசாமியோடு கைகோர்த்துவிடலாம் என அவர் கருதினார். இதுபற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதியே வேல்ஸ் மீடியா செய்தி வெளியிட்டிருந்தது.

Also Read : முகாம் மாறும் AKD ஆறுமுகம்! பலவீனமடையும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி!

ஆனால், அப்போது இந்தச் செய்தியை ஆறுமுகம் திட்டவட்டமாக மறுத்தார். அவரது மறுப்பையும் வேல்ஸ் மீடியா வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்திரா நகர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

FILE IMAGE

அப்போது அவர் பேசுகையில், “இந்திரா நகர் தொகுதியில் கடந்த மூன்று முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். வரும் சட்டசபை தேர்தலில் மாற்றுக் கட்சிக்கு செல்ல இருப்பதாக தொகுதி மக்களிடையே கருத்து நிலவி வருகிறது. எனது தொகுதி மக்களின் விருப்பப்படியே நடந்து கொள்வேன். நீங்கள் விரும்பினால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன். இல்லை எனில் போட்டியிட மாட்டேன், என்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியிலேயே போட்டியிடுங்கள் உங்கள் வெற்றிக்கு நாங்கள் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றுவோம் என்றனர்.

ஆனால், ஏகேடி ஆறுமுகம் என்.ஆர். காங்கிரஸில் இணைந்துள்ளார். இதன் மூலம் வேல்ஸ் மீடியாவின் கணிப்பு உண்மையாகியுள்ளது. அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரஸில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திரா நகர் தொகுதியில், என். ஆர். காங்கிரஸ் சார்பில் அவர் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், “புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம், காங்கிரஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வேறு ஒரு கட்சிக்கு மாறும் முயற்சியை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குகின்றோம்என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry