நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்று முடியும் நிலையில், ஒருசில சுயேச்சை வேட்பாளர்கள், முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களையே திக்குமுக்காடச் செய்துள்ளனர்.
வரும் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜ.க., ம.நீ.ம., நாம் தமிழர், அ.ம.மு.க, விஜய் மக்கள் இயக்கம், சுயேட்சைகள் என 10 முனைப் போட்டி நிலவுகிறது. இவர்களில், ஒருசில சுயேச்சை வேட்பாளர்கள் மக்களிடம் ஈர்ப்பினை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சியில் கவனம் ஈர்க்கும் சுயேச்சை வேட்பாளராகளில் முக்கியமானவர் வர்ஷா. இவர், பி.ஏ சமூகவியல் முடித்துவிட்டு, டாட்டா இன்ஸ்டியூட்டில் எம்.ஏ. நீர் கொள்கை மற்றும் நிர்வாகம் படித்துக் கொண்டிருக்கிறார். “ரோல் மாடல் வார்டினை உருவாக்குவதே லட்சியம்” என்கிறார் இந்த 21 வயது தாரகை.
அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மண்டலம் எட்டில், வார்டு 107-ல் அவர் போட்டியிடுகிறார். ‘Vote for Varsha – Globe சின்னம்’ என்று பொறிக்கப்பட்ட மஞ்சள் வண்ண டி-ஷர்ட் அணிந்தபடி, கைகளில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு, குளோப் எனப்படும் உலக உருண்டை சின்னத்தை ஏந்தியபடி, இளைஞர்கள், இளைஞிகளுடன் தெருத்தெருவாகப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ‘வாக்கு வர்ஷாக்கு.. வெற்றி மக்களுக்கு’ என்ற அவரது முழக்கம் மக்களின் கவன் ஈர்க்கிறது.
“என்னை பற்றிப் புரிந்துகொண்ட எனது பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் என்னுடன் பணியாற்றி வருகிறார்கள். குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெரியவர்களும் துணைக்கு வருகிறார்கள். பலவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக, நான் பெற்றி பெற்றால் 107-வது வார்டினை சென்னையின் RMW-ஆக, அதாவது ரோல்மாடல் வார்டாக மாற்றுவதே எனது லட்சியம்!” என்கிறார் வர்ஷா.
‘தரமான சாலைகள், சுத்தமான தெருக்கள், குடிநீர் மேலாண்மை, கழிவுநீர் சாலைகளில் வெளியாவதைத் தடுப்பது, மழைநீர் மேலாண்மை மூலம் நிலத்தடி நீர் உயர திட்டங்கள் வகுப்பது, சூழல் மேம்பாட்டுக்காக மரங்களை நடுவது, வெளிப்படையான நிர்வாகம் போன்ற இன்னபிற வாக்குறுதிகளை முன்வைத்து வர்ஷா களமாடி வருகிறார்.
அடுத்ததாக வர்ஷாவுக்கு நேர்மாறாக 94 வயதான காமாட்சி சுப்ரமணியன் என்ற மூதாட்டியும் களத்தில் இருக்கிறார். வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட, 174-வது வார்டில் சுயேச்சையாகக் களமிறங்கி இருக்கிறார் 94 வயதான காமாட்சி சுப்ரமணியன். இவருக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ததோடு சரி, வயது மூப்பின் காரணமாக பேசவும், நடக்கும் முடியாமல் சிரமப்படுவதால், நேரடிப் பிரசாரத்துக்கு இவர் செல்லவில்லை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry