பேச்சிலும், எழுத்திலும் மட்டும்தான் சமூகநீதியா? கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட பட்டியல் சமூக மக்கள்!

0
450

விழுப்புரம் மாவட்டத்தில், கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கூறும் சமூக நீதி இதுதானா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றன.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது ரெட்டணை. இந்த ஊரில் பட்டியலின மக்கள் 350 குடும்பங்கள் வசிக்கின்றனர். மாற்றுச் சமூகத்தினர் சுமார் 1,500 குடும்பங்கள் வரை வசிக்கிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதியில், தொண்டி ஆற்றின் கரையில் ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலய திருவிழா நடக்கும்போது பட்டியலின மக்களை சேர்ப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீ வெண்ணியம்மன் கோவிலில், பட்டியலின மக்கள் வருடா வருடம் ஆடி மாதம் திருவிழா நடத்துகிறார்கள். அப்போதுகூட அவர்களை கோவில் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், வெளியில் இருந்தபடியே பொங்கல் வைத்துவிட்டு சாமி கும்பிட்டு விருவார்கள் என்பது தெரிகிறது. அதுமட்டுமன்றி அந்தப் பகுதியில் உள்ள எந்த திருமண மண்டபத்திலும் பட்டியலின மக்கள் குடும்பவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லை என்பதும் புகாராக உளளது.

RETTANAI VENNIAMMAN KOIL
கோவிலில் வாக்குவாதம்

இந்நிலையில், ரெட்டணையைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும், அவர்களது உறவினர்களும் பொங்கல் வைத்து குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கடந்த 11-ம் தேதி சென்றுள்ளனர். கோவிலுக்குள் அவர்கள் பொங்கல் வைத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த மாற்றுச் சமூகத்தினர் 30 பேர், `நீங்க எப்படி உள்ளே வந்து பொங்கல் வைக்கலாம். வெளியே போங்க’ என அவர்களை வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

அந்தக் குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு கோயிலுக்கு வெளியில் சாலையில் அமர்ந்தபடி மொட்டையடித்து காதணி விழா நடத்தினர். தகவலறிந்து வந்த போலீஸார், `இங்க ஏதும் பிரச்னை பண்ணாதீங்க. அதிகாரிங்க கிட்ட மனு கொடுங்க’ என்று கூறி கோவிலில் இருந்து இரண்டு சமூக மக்களையும் அப்புறப்படுத்தி உள்ளனர். பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்கள் சிலர், கோவிலில் அனைவருக்கு சம உரிமை வழங்கக் கோரி திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திமுக ஆட்சியில் சமூக நீதியைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். செப்டம்பர் 17-ஐ சமூக நீதி நாள் என அறிவித்துள்ளார். சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு பல மாநில தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். சமூக நீதி என்றால் தமிழ்நாடுதான் என இந்தியாவுக்கு காட்டியுள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள சாதி வேறுபாடுகளை களையாமல், உதட்டளவில் சமூக நீதி பேசி, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு ஏற்படுத்துவதால் யாருக்கு பயன்? என்று அப்பகுதி மக்கள் கேட்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry