செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல்! சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!

0
137

Artificial Inteligence(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில், ‘ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை’, சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை காவல் துறை இணைந்து, ரூ.645 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ. 465 கோடியும், மீதமுள்ள தொகையை தமிழக அரசும் வழங்குகிறது. சென்னை போக்குவரத்து தகவல் மற்றும் மேலாண்மை, நகர பேருந்துகள் மேலாண்மை என இரண்டு பிரிவுகளாக இது செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் தற்போது உள்ள சிக்னல்கள், போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, போக்குவரத்து போலீசாரால் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சிக்னலிற்கும் அடுத்த சிக்னலிற்கும் தொடர்பில்லாமல் உள்ளது. ஒரு சிக்னலில் நிற்கும் வாகனம் அடுத்தடுத்த சிக்னலிலும் நிற்க வேண்டியிருக்கிறது.

Also Read : சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்வு! வாகன ஓட்டிகள் குமுறல்! அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் சூழல்!

இதற்கு தீர்வு காண, சென்னை போக்குவரத்து தகவல் மேலாண்மை பிரிவில், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் இயங்கும் சிக்னல்கள், 165 போக்குவரத்து சந்திப்புகளில் அமைக்கப்பட உள்ளது. இந்த சிக்னல் கம்பங்கள், அதிக வாகன நெரிசல் உள்ள வழித்தடத்திற்கு அதிகமான நேரத்தில் பச்சை சிக்னலும், குறைவான வாகன நெரிசல் உள்ள வழிதடத்திற்கு குறைவான நேரத்தில் பச்சை சிக்னலும் வழங்கும்.

எந்த நேரத்தில் எந்த வழியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; என்ன மாதிரியான வாகனகள் நெரிசலில் உள்ளன என்ற தகவல்களை சேமித்து அதற்கு ஏற்ப செயல்படும். அடுத்தடுத்த சிக்னல் கம்பங்களுடன் தொடர்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிக்னலில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அதேபோல், ஆம்புலன்ஸ், வி.ஐ.பி. வாகனங்கள் வரும்போது, சிக்னல்கள் தானாகவே பச்சை நிறத்தில் மாறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Also Read : இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம் தகவல்! வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்!

இதற்காக, 165 போக்குவரத்து சந்திப்புகளில், சாலை கட்டமைப்புகளும் மாற்றியமைக்கப்பட உள்ளது. 50 போக்குவரத்து சந்திப்புகளில் ‘ஏஐ’ தொழில்நுட்ப கேமராக்கள், சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும் 10 இடங்களில் வாகன வேகத்தை பதிவு செய்யும் கருவியும் பொருத்தப்பட உள்ளது.
இதன் வாயிலாக சாலை விதிகளை மீறுவோரை ‘ஏஐ’ தொழில்நுட்பம் வாயிலாக கண்காணித்து, இணையம் மூலமாக உடனுக்குடன் சட்டப்படி அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட உள்ளது.

பாலங்கள், விபத்துகள் நடக்கக்கூடிய இடங்கள், போக்குவரத்து அதிகமுள்ள இடங்கள், முக்கிய சந்திப்புகள் போன்ற 58 இடங்களில் கேமராக்கள் வாயிலாக கண்காணித்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘ஏஐ’ தொழில்நுட்பம் தகவல் தெரிவிக்கும். சென்னை மாநகரத்தின் போக்குவரத்து அசைவுகள் அனைத்தையும், ஒரே இடத்தில் இருந்தபடி கண்காணித்து மேலாண்மை செய்யும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.

17 இடங்களில் பெரிய அளவிலான டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்பட உள்ளன. இதில் எந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. எந்த மாற்று பாதையில் போக்குவரத்து குறைவாக உள்ளது. எந்தப் பாதையில், எந்த இடத்திற்கு, எவ்வளவு நேரத்தில் செல்லமுடியும் என்ற தகவலை உடனுக்குடன் வாகன ஒட்டிகளுக்கு திரையிட்டு காட்டப்படும். இதன் வாயிலாக வழக்கமான விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ளலாம்.

Also Read : #OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View

நகரப் பேருந்து மேலாண்மை பிரிவின் வாயிலாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் 2,940 பேருந்துகளில் ‘ஜிபிஎஸ்‘ கருவி பொறுத்தப்பட உள்ளது. 71 பேருந்து நிலையங்களிலும், 532 பேருந்து நிறுத்தத்திலும் பயணிகள் விவர பலகை டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட உள்ளது. இதில், எந்தப் பேருந்து, எந்த வழித்தடத்தில், எங்கு செல்கிறது என்பதனை பயணிகள் தெரிந்து கொள்ள முடியும்.

ரயில் நிலையங்களில் அறிவிக்கப்படுவது போல பேருந்து நிறுத்தங்களில், அடுத்து வரும் பேருந்தின் நேரம், தற்போதைய நேரத்தில் அந்த பேருந்து எங்கு இருக்கிறது, போன்ற விவரங்களையும் பயணிகள் அறிந்துகொண்டு பயணத்தை திட்டமிட முடியும். இதனை மொபைல் செயலி வாயிலாகவும் அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பேருந்தில் பயணியப்பவர்கள் தங்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில், மெட்ரோ ரயிலில் அறிவிக்கப்படுவதுபோல், இறங்கும் இடம் குறித்த அறிவிப்பு, பேருந்து நிறுத்தம் வாரியாக அறிவிக்கப்பட உள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் கூறும்போது, “இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. 31 மாதங்களில் முழுப் பணிகள் முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதுபோன்ற திட்டம், இந்தியாவில் சில நகரங்களில் இருந்தாலும், பெரிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்” என்று கூறினர்.

With Inputs : Indhu Tamizh Thisai

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry