இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு! உலக சுகாதார நிறுவனம் தகவல்! வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்!

0
73

கரோனா பரவல் ஆரம்பத்திலிருந்து 2023 மார்ச் 26ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 76.1 கோடி தொற்றுகளும், 6 கோடியே 80 லட்சம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், பிப்ரவரி 27 முதல் மார்ச் 26, 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் இதே காலகட்டத்தில் 36 லட்சம் புதிய தொற்றுகளும் 25 ஆயிரம் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இது அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது முறையே 27 சதவீதம் மற்றும் 39 சதவீதம் குறைவாகும். ஒட்டுமொத்த போக்கு இவ்வாறாக இருக்க, சில நாடுகளில் சமீபமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

Also Read : ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்! ராகுல் பதவி நீக்க விவகாரத்தில் ஜெர்மனி கருத்து!

தெற்காசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் 18,130 பேர் புதிய தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதவாது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 1.3% என்ற விகிதாச்சாரத்தில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தோனேசியாவில் 8,405 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 3.1 புதிய தொற்றுகள் என்றளவில் உள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தில் மட்டும் 27 ஆயிரம் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது மார்ச் 27க்கு முந்தைய 28 நாட்கள் புள்ளிவிவரத்துடன் ஒப்பிட்டால் 152 சதவீதம் அதிகமாகும். தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளில் 7 நாடுகளில் கரோனா தொற்று 20 சதவீதம் அல்லது அதற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே கரோனா பரவல் அதிகமாகவே உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தற்போதுள்ள XBB.1.5 திரிபை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என உலக சுகாதார நிறுவனம்(WHO) தெரிவித்துள்ளது. தவிர, மார்ச் 22 பட்டியலில் கண்காணிக்கப்பட வேண்டிய திரிபுகளில் BQ.1, BA.2.75, CH.1.1, XBB, XBF and XBB.1.16 ஆகியன உள்ளன என்றும் WHO கூறியுள்ளது.

Also Read : பாஜக – திமுகவின் செல்லப் பிள்ளை ஓ.பி.எஸ்! மு.க. ஸ்டாலின் சொந்த புத்தியோடு செயல்பட மூத்த பத்திரிகையாளர் அறிவுறுத்தல்!

XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக உள்ளது. எக்ஸ்பிபி வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸின் மரபணு மாற்றமான எக்ஸ்பிபி 1.16 என்ற வைரஸ்தான், தற்போது நிறைய பேரை பாதிக்கக் காரணமாக இருக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொற்று எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோவிட்-19 பரவல் தடுப்பு தயார்நிலை குறித்து அவர் மதிப்பாய்வு செய்தார்.

மருத்துவ உள்கட்டமைப்பின் தயார்நிலையை உறுதி செய்வதற்காக ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சுகாதார நிலையங்களில் மாக் ட்ரில் எனப்படும் மாதிரி பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அவர் அறிவுறுத்தியுள்ளார். மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பைக் கணக்கிடுவது இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

Also Read : பிளஸ்-2 கணிதத் தேர்வு கடினம்! உயிரைப் பறிக்கும் வகையில் தேர்வுத்தாளை தயாரிக்கும் வக்கிரபுத்தி? கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

இந்நிலையில், கரோனா பாதிப்பு சீராக அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

Recommended Video

லோன் ஆப்பில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டும் சைபர் சட்ட நிபுணர்! Advocate Karthikeyan

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry