பாஜக – திமுகவின் செல்லப் பிள்ளை ஓ.பி.எஸ்! மு.க. ஸ்டாலின் சொந்த புத்தியோடு செயல்பட மூத்த பத்திரிகையாளர் அறிவுறுத்தல்!

0
73

62 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவுக்கு சட்டமன்ற துணைத் தலைவர் பதவி வழங்காமல், நால்வராக உள்ள பன்னீர்செல்வத்திற்கு தந்து, பேச வைக்கிறது திமுக அரசு.

பல கட்ட முட்டுக் கட்டைகளைக் கடந்து அதிமுக விவகாரத்தில் அந்தக் கட்சிக்கு சாதகமான ஒரு தீர்ப்பை நீதிமன்றம் தந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒ.பிஎஸ்சுக்கு 100 சதவிகித பக்க பலத்துடன் இருக்கும் காரணத்தால், சென்ற ஆண்டு ஜுன் 22 பொதுக் குழுவிலேயே முடிவுக்கு வந்திருக்க வேண்டிய இந்த பிரச்சினை, இப்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

அதிகார மட்டத்தின் அனைத்து நிலைகளில் இருந்தும் தந்து கொண்டிருக்கும் அழுத்தம் காரணமாக நள்ளிரவிலாகட்டும், விடுமுறை நாளாகட்டும் நீதிபதிகளால் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஒ.பி.எஸ்சால் ஏற்பட்டு உள்ளது.

Also Read : UPI கட்டணங்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகள்! நண்பர்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பினால் கட்டணமா? முழு விவரம்!

ஒரு பிரச்சினைக்கு ஒரு முறை தீர்ப்பு தந்தால் போதாது என்று மீண்டும், மீண்டும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று கதவுகளை தட்டி, செல்லுபடியாகாத வாதங்களையே மாற்றி, மாற்றி வைத்து, நீதிபதிகளையே சோர்வுக்கும், மன விரக்திக்கும் உள்ளாக்கி உள்ள வழக்காகவும் இதனை பார்க்கிறோம். இவை, அனைத்துமே  பாஜக மற்றும் திமுகவின் செல்லப் பிள்ளையாக ஓ.பி.எஸ் இருப்பதால் அதிமுக சந்திக்க நேர்ந்துள்ள அவலங்களாகும்.

அதுவும், தற்போது பொதுக் குழு நடத்தியது செல்லும், அதில் போடப்பட்ட தீர்மானங்கள் செல்லும், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே ஈரோடு இடைத் தேர்தலிலேயே கட்சியின் இரட்டை இலை சின்னமும் வழங்கப்பட்டுவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் தேர்வை உறுதி செய்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள 85 பக்க தீர்ப்பு ஒன்றே இந்தப் பிரச்சினையை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகும்.

இதோ அதன் சாராம்சம்;  தனி நபர் நலனா? கட்சி நலனா? என்பதை வைத்து பார்க்கும் போது, பன்னீர் செல்வம் உள்ளிட்ட நால்வரின் கோரிக்கையை ஊக்குவித்தால் ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் செயல்பாடே ஸ்தம்பித்துவிடும்’ என்கிறது நீதிமன்றம். அப்படி இருக்க, சட்ட மன்றத்தில் உண்மையான அதிமுகவிற்கான அங்கீகாரத்தை முழுமையாகத் தராமல், பன்னீர் செல்வத்தை காப்பாற்றுவதிலேயே கண்ணும், கருத்துமாக உள்ளார் திமுக அரசின் சபாநாயகர் அப்பாவு!

Also Read : பிளஸ்-2 கணிதத் தேர்வு கடினம்! உயிரைப் பறிக்கும் வகையில் தேர்வுத்தாளை தயாரிக்கும் வக்கிரபுத்தி? கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

62 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவிற்கு சட்டமன்ற துணைத் தலைவர் இருக்கையைத் தராமல், மூன்றே உறுப்பினர்களின் அதரவைப் பெற்ற பன்னீர்செல்வத்திற்கு அப்பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதோடு அவரை எடப்பாடி பழனிசாமியின் அருகிலேயே உட்கார வைத்து, அதிமுக சார்பாக தான் பேசுவதாக பன்னீர் செல்வம் பேசுவதையும் ரசிக்கிறது திமுக அரசாங்கம்.

இதில் ஒ.பி.எஸ் தரப்பும், இ.பி.எஸ் தரப்பும் ஒருவருக்கொருவர் மூர்க்கமாக மோதுவதைக் கண்டு புளகாங்கிதப்படுகிறது பாஜக. திமுக, அதிமுக இரண்டும் திராவிடக் கட்சிகள்! அதில் ஏற்கனவே அதிமுகவை வசப்படுத்தி இருந்தது பாஜக. அந்த ஹோதாவில் அதிமுக விவகாரத்தில் ஒ.பி.எஸ்சுக்கு அதிமுக தலைமையில் இடம் தரக் கேட்டு நாட்டாமையும் செய்து பார்த்ததில், அதை ஏற்க மறுத்துவிட்டது அதிமுக.

அந்தக் கோபத்தில் இ.பி.எஸ்சை இன்று வரை மறைமுகமாக இம்சித்து வருகிறது பாஜக. இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழக சட்டமன்றத்தில் ஒ.பி.எஸ்ஸுக்கு திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து, ”நீதிமன்றம் சட்டமன்றத்தை கட்டுப்படுத்த முடியாது” என அராஜகமாக திமுக சபாநாயகர் அப்பாவுவைப் பேச வைப்பதாகும். இதே அப்பாவு தான் இது நாள் வரை பன்னீரை ஆதரிப்பதற்கு ”வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது”  என எண்ணிக்கையை வைத்து சுயமாக முடிவு எடுக்காமல்,  நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருப்பவர் போல பேசி வந்தார்.

Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive

இந்த விவகாரத்தில் பாஜகவின் சொல்கேட்டு அதிமுகவின் இரு தரப்பையும் சட்டமன்றத்தில் மோதவிட்டு ரசிக்கிறது திமுக. பாஜகவா? அதிமுகவா? எது திமுகவின் பிரதான எதிரி என்று பார்த்தால் பாஜக தான்! அதிமுக என்பது திமுகவில் இருந்து பிரிந்த ஒரு சகோதர இயக்கமே. அப்படி ஒரு சகோதர இயக்கம் இருப்பதால் தான் தமிழகம் தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்த முடியாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அந்த அதிமுக அழிவது திமுகவிற்குமே பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்கிவிடும்.

எனவே, அதிமுக விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தன் சொந்த புத்தி கொண்டும், மாநில நலன் சர்ந்தும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒ.பி.எஸ் என்பவர் அதிமுகவை அழிக்க பாஜகவிற்கு கையில் கிடைத்துள்ள ஒரு கோடாரியாகும்! அந்தக் கோடாரியை எடுத்துக் கொண்டு தானே நேரடியாக தாக்க முடியாத நிலையில், திமுகவை ஏவி தாக்குகிறது பாஜக. இதற்கு துணை போவது வரலாற்றில் திமுகவிற்கு அழியாத பழியைத் தான் பெற்றுத் தரும்.

இந்த விவகாரத்தில் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டியது அனைத்து கட்சிகளின் கடமையாகும். கம்யூனிஸ்டுகளும், காங்கிரசாரும் இன்னபிற திமுகவின் கூட்டணி கட்சிகளும் இதில் திமுக செய்யும் அநீதியை கண்டும், காணாமல் பாராமுகமாக போகக் கூடாது. அநீதி யாருக்கு இழைக்கப்பட்டாலும் அதை சார்பு நிலை எடுக்காமல் சட்டென்று தடுக்க முன் வருவதே ஜனநாயகத்தின் பண்பாகும்.

நன்றி: அறம் இணைய இதழ், திரு. சாவித்திரி கண்ணன்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry