ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்! ராகுல் பதவி நீக்க விவகாரத்தில் ஜெர்மனி கருத்து!

0
93

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, எம்.பி., பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரமும், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரின் பத்திரிகையாளர் சந்திப்பு, அந்நாட்டு அரசின் Deutsche Welle தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில், “இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல் காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டியவரை, ராகுல் காந்தி நீதிமன்றத்தைத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அந்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு வந்தபின்னரே அவர் மீதான தண்டனை நிலைக்குமா? அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதில் ஏதேனும் அடிப்படை இருக்கிறதா என்பதெல்லாம் தெளிவாகும். அந்த வழக்கில் நீதித்துறை சுதந்திரமும், அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், “நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம். நாங்கள் ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயக மாண்பைப் பேணுவது, கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது போன்றவற்றில் இந்தியா – அமெரிக்கா ஒருமித்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது.

மனிதநேயத்தைப் பேணுதல் என்பது இருநாடுகளிலும் ஜனநாயகக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா நல்லுறவைப் பேணும் நாடுகளின் எதிர்க்கட்சிகளுடனும் சுமுக உறவைப் பேணவே விரும்புகிறது” எனக் கூறியிருந்தது.

Also Read : பாஜக – திமுகவின் செல்லப் பிள்ளை ஓ.பி.எஸ்! மு.க. ஸ்டாலின் சொந்த புத்தியோடு செயல்பட மூத்த பத்திரிகையாளர் அறிவுறுத்தல்!

ஜெர்மனியின் தலையீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இதேபோன்று செய்யப்பட்ட 12 தகுதி நீக்கங்களை ஜெர்மனி ஒருபோதும் கவனத்தில் கொள்ளவில்லை. ராகுல் காந்தி ஸ்பெஷலா? உயர் நீதிமன்றத்தின் பார்வையைப் பொருட்படுத்தாமல், அவரது தகுதி நீக்கம் சட்டத்தின் கீழ் செல்லும். தகுதி நீக்கச் சட்டம் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது” என்று கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், “வெளிநாட்டு தலையீட்டை இனியும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது” என்று கூறியுள்ளார்.

மக்களவையில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை எந்த வெளிநாட்டு தூதர்களும் தன்னிடம் எழுப்பவில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் புதன்கிழமை கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த கருத்துக்கள் வந்துள்ளன. மோடி எனும் சாதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, எம்.பி பதவியை ராகுல் இழந்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry