பிளஸ்-2 கணிதத் தேர்வு கடினம்! உயிரைப் பறிக்கும் வகையில் தேர்வுத்தாளை தயாரிக்கும் வக்கிரபுத்தி? கல்வியாளர்கள் கொந்தளிப்பு!

0
193

பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம்தேதி தொடங்கியது. மொழித்தாள், ஆங்கிலம், இயற்பியல் பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துள்ளன.

இந்நிலையில், கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. கணிதத் தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
ஒரு மார்க் கேள்வியில் 6 வினாக்களும், 2 மார்க், 3 மார்க், 5 மார்க் பகுதிகளில் தலா ஒரு வினாவும் மிகவும் கடினமாக இருந்ததாகவும், ஆழமாக யோசித்து, விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறினர்.

Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive

குறிப்பாக, 5 மார்க் பகுதியில் ஒரு கேள்விக்கு கொடுக்கப்பட்ட இருசாய்ஸ் வினாக்களும் கடினமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். கணிதத் தேர்வில் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டிருப்பதால், இந்த ஆண்டு கணிதத் தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண் மற்றும் 95-க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றும், அதன் காரணமாக பொறியியல் படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கணிதத் தேர்வு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12ம் வகுப்பு கணிதப்பாடத் தேர்வில் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.

கணிதப்பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல.

கணிதத்தில் 100% மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100% மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல. வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர் அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக்கூடாது.

12ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு உரிய அளவில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

Also Read : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு? ஒரே சென்டரில் தேர்வெழுதிய ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி! தேர்வர்கள் கலக்கம்!

இந்நிலையில், பிரபல கல்வியாளர் தங்கம் மூர்த்தி தனது முகநூலில் “கல்வி இனிது தேர்வு கொடிது” என்ற தலைப்பில் எழுதியுள்ள பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. “ப்ளஸ் டு கணிதம் தேர்வு மிக கடினமாக இருந்ததாக இன்றைய செய்தித் தாள்கள் சொல்கின்றன. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாணவி தற்கொலை. கேள்வித் தாளை உருவாக்கி, உயிரை எடுக்கும் கணித மேதாவிகளை என்ன செய்வது..?

ப்ளஸ் டு தேர்வு முடித்து ஒரு மாணவன் கலெக்டராகவா ஆகிவிட முடியும்? எளிதில் மாணவர்கள் எழுதிவிடக் கூடாதென்ற வக்கிரபுத்தியை அவர்கள் எங்கிருந்து கற்றார்கள். இரண்டு வால்யூம் என்பதே பெருங்குற்றம். கொடுமையிலும் கொடுமை. ப்ளஸ்-1 ல் இரண்டு வால்யூம் வேறு. இரண்டு வருடங்களில் 4 கணித புத்தகங்களைக் கற்றுத்தேற வேண்டும். வருடம் முழுக்க கற்றதை, கற்பித்ததை இவர்கள் கேள்வியில் கேட்க மாட்டார்களாம். சொந்தமாக சிந்தித்து எழுதுகிற கேள்வி கேட்பார்களாம்.
சொந்தமாக சிந்திக்க வைக்கிற கல்வியையா நீங்கள் போதிக்கிறீர்கள்.

செலபசில் இல்லாத கேள்விகளை கேட்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. ஏற்கனவே 50000 பேர் ஓடிப்போய்விட்டார்கள். மீதம் இருக்கிறவனையும் விரட்டிவிட முயற்சிக்கிறீர்கள். கல்வி இனிமையாக, எளிமையாக இருந்திடல் தானே சிறப்பு. கணிதத்தை நினைத்தால் கனவில் கூட பயம் வருகிறதே ஏன்? உங்கள் மேதாவித் தனத்தை பச்சைப் பிள்ளைகளிடத்தா காட்டுவது. இதே கேள்வித்தாளை கணித ஆசிரியர்களிடம் கொடுங்கள். எத்தனை ஆசிரியர்களால் சென்டம் எடுக்க முடியும்.

Also Read : #OnlineRummy தமிழக அரசால் என்ன செய்ய முடியும்? தடையா? முறைப்படுத்துதலா? அலட்சியம் காட்டும் மத்திய அரசு! Vels View

இதில் வேறொரு கூத்தும் நடக்கும். கேள்வியை தவறாக கேட்டு விட்டோம். Attend பன்னினால் பாஸ் என்பார்கள். தேர்வு நடக்கும் முறையே வன்முறை நிறைந்ததாக இருக்கிறது. 10 மணி தேர்வுக்கு 8.30 க்கு வர வேண்டுமாம். தேர்வு முடிந்து மதியம் 1.30க்குத் தான் வெளியே விடுகிறார்கள். ஐந்து மணி நேரம் ஒரு குழந்தை தேர்வு சென்டரில் இருக்க வேண்டும். ஜெயிலை விட மோசமானது. இதில் மாணவர்களை மிரட்டல் உருட்டல் பயமுறுத்தல் என்ற அச்சுறுத்தும் போக்குகள் வேறு.

மூன்று மணி நேர தேர்வு எதற்கு? தேர்வு ஒரு மணி நேரத்திற்கு வைத்தால் போதுமே. ஏன் 3 மணி நேரம். எந்த நாட்டில் 3 மணி நேரம் தேர்வு எழுதுகிறார்கள்? மூன்று மணி நேரமும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அதுவும் நின்றுகொண்டே இருக்க வேண்டும். உட்கார்ந்தால் கொலைக் குற்றத்துக்கு ஆளாகி விடக் கூடும். 3 மணி நேரமும் ஆசிரியர்களும் மாணவர்களும் மௌன விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.மாணவர்களை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டியது மட்டுமல்ல உயிரோடு வைத்திருக்க வேண்டியதும் கல்வியின் கடமை.” இவ்வாறு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இயற்பியல் தேர்வும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். பாடத்திட்டத்திற்கு வெளியே 4 கேள்விகள் கேட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று கடினமான கேள்வித்தாள் தயாரிப்பதால், தேர்ச்சி விகிதம் குறைவதுடன், உயர்கல்விக்கான வாய்ப்பு சரிந்துவிடும் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry