அம்பேத்கர், ஈ.வெ.ரா.வுக்கு முந்தைய சீர்திருத்தவாதி! “பஞ்சமி நிலம்” உருவாகக் காரணமாக இருந்த அயோத்திதாசரின் நினைவு நாள்!

0
88

3.30 Min(s) Read : தமிழ்நாட்டில் ஆதி தமிழ்க்குடிகளின் முன்னேற்றத்துக்காக அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, ஜான் ரத்தினம், மதுரை பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் இணைந்து பணியாற்றினார்கள். இவர்களில் பண்டிதர் அயோத்திதாசரின் 109வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கல்வியாளர், சமூக சிந்தனையாளர், மதச் சீர்திருத்தவாதி, அரசியல் சிந்தனையாளர், பத்திரிகை ஆசிரியர், மருத்துவர் என பன்முகம் கொண்டவர் அயோத்திதாசர். 1845-ம் ஆண்டு மே 20-ம் நாள், அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள தேனாம்பேட்டை ஆயிரம் விளக்கு பகுதியில் அயோத்திதாசர் பிறந்தார்.

காத்தவராயன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், தனக்கு தமிழ் கற்பித்த வல்லகாலத்தி அயோத்திதாசர் எனும் தன் ஆசிரியர் பெயரையே தன் பெயராக மாற்றிக்கொண்டார். இவரது தந்தை சித்த மருத்துவராகவும், ஹாரிங்டன் துரையிடம் சமையல்காரராகவும் இருந்தார். ரெட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமி என்பவரை அயோத்திதாசர் மணந்தார்.

Also Read : தேசிய கீதம்..! திராவிட மாடல்..! சட்டம் ஒழுங்கு..! எப்படிப் பாராட்ட முடியும்? வெளிநடப்பு செய்தது ஏன்? ஆளுநர் ரவி விளக்கம்!

ஏற்றத்தாழ்வுமிக்க சமூகத்தைக் கண்டு வெகுண்டெழுந்து சமூகச் சீர்திருத்தப் பாதையில் அயோத்திதாசர் தனது பயணத்தைத் தொடங்கினார். சாதி ஒழிப்பையும் சமூக விடுதலையையும் தனது லட்சியமாக அவர் கொண்டிருந்தார். ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஒலித்தார். ‘பூர்வ தமிழ்க் குடி’, ‘ஆதித்தமிழர்கள்’ என்கிற அடையாளத்தை முன்வைத்து, அவற்றை மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதே முன்வைத்திருந்தார் அயோத்திதாச பண்டிதர்.

“நமது மீட்சிக்கும் விடுதலைக்கும் வெளியிலிருந்து எவரும் உதவிட முடியாது. நமக்கான வலிமையை, சமகாலத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் நாமே திரட்டி அணியாக எழுவதன் மூலம் நாமே சாதித்துக்கொள்ள முடியும்” என்று அயோத்திதாசர் அறைகூவல் விடுத்தார். தமிழ், ஆங்கிலம், பாலி, சம்ஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளைக் கற்றிருந்தார்.

சாதி அழுக்குத் தோய்ந்த பெயர்களை நீக்கி தமிழன் என்று உணர்தல் வேண்டும் என்றார். ஒரு பைசா தமிழன், திராவிட பாண்டியன் போன்ற இதழ்களையும் நடத்தினார். அயோத்திதாசருடன் பணியாற்றிய ரெவரெண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் 1887-ம் ஆண்டு ‘திராவிட பாண்டியன்’ என்கின்ற இதழ் தொடங்கியதோடு ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கி உருவாக்கியிருந்தார். ‘திராவிட பாண்டியன்’ இதழில் பண்டிதர் அயோத்திதாசரின் பங்கும் இருந்தது.

Also Read : ‘தகுதியோ, யோக்கியதையோ இல்லை’! கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை வறுத்தெடுத்த தி.மு.க.! சைலன்ட் மோடுக்குப் போன சிபிஎம் தலைவர்கள்!

1907-ம் ஆண்டு ‘ஒரு பைசா தமிழன்’ இதழ் ஓராண்டு காலம் வெளிவந்தது. வாசகர்களின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையின் பெயரை 1908-ம் ஆண்டு ‘தமிழன்’ என அயோத்திதாசர் மாற்றி அமைத்தார். தமிழன் என்றால் “சாதி பேதமற்ற திராவிடனே தமிழன்” என்கின்ற வரையறையை அவர் வைத்திருந்தார்.

சித்த மருத்துவத்தை, தமிழ் மருத்துவம் எனவும் அழைத்தார். சிறந்த சித்த மருத்துவராகவும் விளங்கினார். தமிழ்த் தென்றல் திரு.வி.க-வின் குடும்ப மருத்துவராகவும் பண்டிதர் இருந்தார். இளமையில் திரு.வி.க-வுக்கு பக்கவாதம் ஏற்பட்டபோது அவரை எழுந்து நடமாடச் செய்தவர் அயோத்திதாசர். இவர் பெயரில் சென்னை தாம்பரத்தில் சித்த மருத்துவ நிறுவனம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஆதி தமிழ்க்குடிகளின் முன்னேற்றத்துக்காக அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, ஜான் ரத்தினம், மதுரை பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் இவருடன் இணைந்து பணியாற்றினார்கள். சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில் “சமூகம், சாதியால் பிளவுற்றிருக்கும்போது, இந்தியாவின் விடுதலை முதலில் அதன் ஏற்றத்தாழ்விலிருந்து கிடைக்க வேண்டும்” என்று அயோத்திதாசர் முழங்கினார். இது அப்போது மேல்தட்டு மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது . ராஜாக்கள் ஆட்சி முதல் ஆங்கிலேயர் ஆட்சி வரை அதிகாரவர்க்கத்தில் உயர் சாதியினர் ஆதிக்கம் இருந்ததை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தினார்.

Also Read : நிலக்கரிக்காக அடுத்தடுத்து ஏலம் விடப்படும் கிராமங்கள்! மாநில நிர்வாகத்துக்கு தெரியாதா? பாஜகவுடன் கைகோர்த்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா?

1891-ம் ஆண்டு டிசம்பர் 1-ல் சென்னை மாகாண சங்க மாநாடு நீலகிரியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமைக்கான தனிப் பள்ளிகள், அரசுப் பணி, பொது குளத்தில் நீர் எடுக்கும் உரிமை, சமவுரிமை, கிராம அதிகாரிகளாக அவர்கள் அமர்த்தப்படுதல், கோயில் நுழைவு என்பன போன்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1892-ல் சென்னை மாகாண சங்கம் சார்பில் அரசுக்கு அயோத்திதாசர் இரண்டு கோரிக்கை வைத்தார். ஒன்று கல்வியுரிமை மற்றொன்று நில ஒதுக்கீடு. இதனால் 1893-ல் தாழ்த்தப்பட்டவர்களிடம் கல்வி பரவலாக்கப்பட வேண்டும் என்ற அரசாணையே வெளியிடப்பட்டது. இதுதான் பிறகு பஞ்சமி நிலம் உருவாகக் காரணமாக அமைந்தது.

தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் ஆதி தமிழ்க்குடிகளின் வரலாற்றை கட்டமைக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டார் அயோத்திதாச பண்டிதர். இதற்காக சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, திருக்குறள், நன்னூல், வீரசோழியம், நாலடியார், காக்கை பாடினியம் போன்ற தமிழ் இலக்கிய சான்றுகளை எடுத்துக் கையாண்டார். பவுத்த நெறியில் ஈடுபாடு கொண்ட அயோத்திதாசர் 1900-ம் ஆண்டு நண்பர் கிருஷ்ணசாமியாரைச் சேர்த்துக்கொண்டு மலிகண்ட விஹாரயில் பஞ்சசீலம் பெற்று பவுத்தரானார்.

1902-ல் `தென்னிந்திய பவுத்த சாக்கிய சங்கம்’ எனும் அமைப்பை ராயப்பேட்டையில் நிறுவி பவுத்த மதக் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கினார். இந்திய பவுத்த மதத்தின் முதல் மறுமலர்ச்சியாளர் என்றும் அவர் அழைக்கப்பட்டார். அயோத்திதாசர் மேற்கொண்ட முக்கியமாக ஆய்வுகளில் ஒன்று “இந்திர தேச சரித்திரம்”. இந்திர தேசத்தின் பிரதான கோட்பாடான `புத்த தர்மத்தை’ ஏற்று, அரசர்களும் மக்களும் இன்புற்று வாழ்ந்ததாகவும், விவசாயம் செழித்திருந்ததாகவும், அறிவிலும் கலையிலும் மக்கள் தேர்ச்சி பெற்று விளங்கியதாகவும் அயோத்திதாசர் கூறுகிறார். இந்திய வரலாறு என்பது பூர்வ பவுத்தத்துக்கும், ஆரியத்துக்கும் நடந்த போராட்டம் என்று தன் இந்திர தேச வரலாற்றின் மூலம் எடுத்துரைத்தார்.

Also Read : சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகளை கரம்கூப்பி வரவேற்கும் தமிழக அரசு! மத்திய அரசு சொல்லி நிறைவேற்றப்படும் மசோதாக்கள்!

இந்த மீட்டுறுவாக்க வரலாறு என்பது வரலாறு அற்றவர்களின் வரலாறாக அமைகிறது” என்றார். அயோத்திதாசர் ஏன் பவுத்தத்தை முன் மொழிந்தார் எனக் கேள்வி எழுந்தபோது, அவர் வழியை பின்பற்றிய பல அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் ஒரே பதிலைத்தான் அளித்தனர். அது, காந்தியும், பாரதியும், திலகரும், விநோபாவும் ஏன் கீதையை முன்னெடுத்தனர் என வினா எழுப்பினால் அதற்கான பதில் கிடைக்கும் என்றனர். அயோத்திதாசரின் நோக்கமெல்லாம் சாதி பேதத்தை தவிடுபொடியாக்குவது மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்டோர் தங்கள் உயர்ந்த வரலாற்றை நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்பதும்தான்.

உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க முனைப்பு காட்டுபவர்களைத்தான் பண்டிதர் என்று அழைப்பார்கள். அவ்வகையில் திருவள்ளுவர் பற்றிய புனைவுகளை ஆதாரத்துடன் வெளியிட்டு உண்மையை விளக்கினார் அயோத்திதாசப் பண்டிதர். விபூதி ஆராய்ச்சி, கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரனின் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, திரிக்குறள் எனும் பெயரில் திருக்குறளுக்கு தெளிவுரை, புத்த மார்க்க வினா விடை, இந்திர தேச சரித்திரம், விவேக விளக்கம் போன்ற படைப்புகளையும் நிறுவியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கர், ஈ.வெ.ரா. போன்ற தலைவர்களின் சிந்தனைகள், செயல்பாடுகள், சாதிய மதவாத பிற்போக்கு சக்திகளை எதிர்க்கும் ஆளுமை என அனைத்துக்கும் முன்னோடியாக இருக்கிறார் அயோத்திதாசர். இந்திய நிலப்பரப்பில் அயோத்திதாசர் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பல அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாக ஒலித்த அயோத்திதாசப் பண்டிதர் 1914-ம் ஆண்டு மே 5-ம் தேதி மரணமடைந்தார். தான் மறையும் வரை ராயபேட்டையிலே வசித்து வந்தார். தமிழகத்தின் அரசியல் வரலாற்றின் அடையாள அடிப்படையை வகுத்துக் கொடுத்த அயோத்திதாச பண்டிதரை போற்றி வணங்குவோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry