Monday, June 5, 2023

தேசிய கீதம்..! திராவிட மாடல்..! சட்டம் ஒழுங்கு..! எப்படிப் பாராட்ட முடியும்? வெளிநடப்பு செய்தது ஏன்? ஆளுநர் ரவி விளக்கம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு(04/MAY/2023) பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அப்போது, இந்த ஆண்டு ஜனவரியில் ஆளுநர் உரைக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக நீங்கள் வெளிநடப்பு செய்தது சரியா? முக்கிய தலைவர்களின் பெயர்களையும் விட்டுவிட்டீர்களே? என்று முதல் கேள்வியாக எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துள்ள ஆளுநர், 2022-ம் ஆண்டு சட்டசபையில் முதன்முறையாக நான் பேசுவதற்கு முன்பு, அவர்கள் சட்டசபையில் தேசிய கீதம் இசைக்க மாட்டார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. நான் உரையாற்றுவதற்கு முன், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆளுநர் வருகை, புறப்பாட்டின்போது தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். நான் வற்புறுத்திய போதிலும், அவர்கள் ஆரம்பத்தில் தேசிய கீதத்தை இசைக்கவில்லை, ஆனால் அவர்கள் புறப்படும் நேரத்தில் இசைத்தனர்.

Also Read : ‘தகுதியோ, யோக்கியதையோ இல்லை’! கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை வறுத்தெடுத்த தி.மு.க.! சைலன்ட் மோடுக்குப் போன சிபிஎம் தலைவர்கள்!

இந்தமுறை, சபாநாயகர் என்னை அழைக்க வந்தபோது, முறைப்படி, மீண்டும் அவரிடம் கோரிக்கை வைத்தேன். நாடாளுமன்றத்திலும், அனைத்து சட்டசபைகளிலும், தேசிய கீதம் மதிக்கப்படுகிறது. அவரிடம் வாய்மொழியாகக் கேட்டுவிட்டு, நானும் அவருக்குக் கடிதம் அனுப்புகிறேன் என்று சொன்னேன். அவருக்கும், முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பினேன். அவர்கள் தேசிய கீதம் இசைக்கவில்லை.

அரசு தயாரிக்கும் உரையைப் பொறுத்தவரை, அதில் பொதுவாக அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்கள் இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும், அதை ஆளுநர் படிக்க வேண்டும். ஆனால் என்னிடம் கொடுக்கப்பட்ட உரை, கொள்கைகளோ, திட்டங்களோ அல்ல, பிரச்சாரம் என்ற பொருளில் நிறைந்திருந்தது. அவை தவறானவை, அவை பொய்.

சட்டம்-ஒழுங்கை பொறுத்தவரையில் தமிழகம் ‘அமைதிப் பூங்கா’ என்றார்கள். சில நிகழ்வுகளை மேற்கோள் காட்டினேன். தமிழகத்தில், பி.எப்.ஐ., பயங்கரவாத அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்ட மறுநாளில் இருந்து, ஐந்து நாட்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தது. வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது 50க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Also Read : தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகுமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

பின்னர் கோயம்புத்தூரில் ஒரு கோவிலின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அடுத்து, கள்ளக்குறிச்சி பள்ளித் தாக்குதலைக் குறிப்பிட்டேன். ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பிறகு, 5,000 பேர் வெகு தொலைவில் இருந்து வந்து, பள்ளியில் கூடி, அதை எரித்தனர். சான்றிதழ்கள், நூலகம் அனைத்தையும் அவர்கள் எரித்தனர். மாடுகளின் மடிகளை வெட்டினார்கள். வீடியோக்கள் உள்ளன.

இவை அனைத்தும் போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நடந்தது. மற்றொரு வழக்கு, சட்டசபையில் உரையாற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. பொதுக்கூட்டத்தில், பாதுகாப்புக்காக சீருடையில் இருந்த பெண் காவலர் ஒருவரை திமுக நிர்வாகி ஒருவர் மானபங்கப்படுத்தினார். வழக்கை வாபஸ் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் மாஃபியாக்கள் பற்றி கேள்விப்படுகிறோம். சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்த மணல் மாஃபியா கும்பல் அவரை வெட்டிக் கொன்றது.

மேலும், மத்திய ஏஜென்சிகள், குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக, பொதுத் தீட்சிதர்களுக்கு எதிராக எட்டு புகார்களை அளித்துள்ளன. அவர்கள் குறைந்த வயதுடைய தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என்பது புகார். ஆனால் அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை. பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Also Read : நிலக்கரிக்காக அடுத்தடுத்து ஏலம் விடப்படும் கிராமங்கள்! மாநில நிர்வாகத்துக்கு தெரியாதா? பாஜகவுடன் கைகோர்த்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறதா?

ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, ‘இரண்டு விரல் பரிசோதனை’, அதாவது கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வைத்தனர். அவர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். இது என்ன என்று கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதினேன். இப்போது, ​​நடக்கும் சம்பவங்களின் பின்னணியில், நான் அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அது மிகை அல்லவா?

நான் பாராட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள், பிறகு நான் திராவிட மாடல் ஆட்சி முறையைப் பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். முதலாவதாக, அத்தகைய மாதிரி ஆட்சிமுறை எதுவும் இல்லை. அது ஒரு அரசியல் முழக்கம் மட்டுமே. காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான அவநம்பிக்கையான முயற்சி. ‘ஒரு பாரதம், ஒரே இந்தியா’ என்ற கருத்தை ரசிக்காத ஒரு சித்தாந்தம்.

சுதந்திர இயக்கத்தை மட்டுப்படுத்திக் காட்டும் ஒரு சித்தாந்தம், சுதந்திர இயக்கத்தை வரலாற்றிலிருந்தும் நினைவிலிருந்தும் அழிக்க முயல்கிறது. தமிழ்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்தரத்துக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். அவர்களை விட்டுவிட்டு ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைத்தவர்களை புகழ்கிறார்கள், பெருமைபடுத்துகிறார்கள்.

Also Read : கள்ளச்சாராய விற்பனை அமோகம்! 2 பாக்கெட் வாங்கினால் முட்டை இலவசம்! தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா? என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!

நாடு முழுவதும் மொழிசார் நிறவெறியை வெறித்தனமாக அமல்படுத்தும் ஒரு கருத்தியல் இது. வேறு எந்த இந்திய மொழிக்கும், தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை. இத்தனைக்கும், சமீபத்திய பட்ஜெட் உரையைப் படித்தால் தெரியும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட மத்திய கலைஞர் நூலகத்தை தமிழக அரசு அமைக்கப் போகிறது.

இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் சித்தாந்தம். நான் அதை ஆதரிப்பேன் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. இல்லை, நான் மாட்டேன், நான் மாட்டேன் என்று சொன்னேன். நான் உரையாற்றிய பிறகு, சபாநாயகர் எனது உரையின் தமிழ்ப் பதிப்பைப் படிக்க, நான் காத்திருந்தேன். ஆனால், நெறிமுறைக்கு எதிராக, விதிமுறைகளுக்கு எதிராக, முதலமைச்சர் எழுந்து, சபாநாயகருடன் இணக்கமாக, ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரை சபையில் சங்கடப்படுத்த நினைத்தார்.

அதைச் செய்ய நான் அவர்களை அனுமதிக்கவில்லை. ஆளுநரை அவர் முன்னிலையிலேயே எப்படி அவமானப்படுத்த முடியும்? எனவே, நான் வெளியேறினேன். டாக்டர் அம்பேத்கரை பற்றி அவர்கள் என்னிடம் சொல்ல வேண்டாம். அவருடைய சிலையை நான் இங்கு நிறுவுவதற்கு முன், ஜனவரியில் இது நடந்தது. அவர் என் இதயத்தில் வாழ்கிறார்.” இவ்வாறு ஆளுநர் ரவி பதிலளித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles