வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தேசத்தை இழக்க மாட்டேன்! ராகுல் காந்தி சூளுரை!

0
101

கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார்.

இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் இன்று காலை தனது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் தந்தையின் புகைப்படத்தின் முன் அமர்ந்து வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மாங்கன்றுகளை நட்டுவைத்து, காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார்.

Also Read : பள்ளிக்குள் மதப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவது உரிமையாகுமா? ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட் கேள்வி!

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “வெறுப்பு அரசியலுக்கும், பிரிவினைவாதத்துக்கும் எனது தந்தையை இழந்தேன். ஆனால் அதேபோல் அதே சக்திகளுக்கு எனது தேசத்தை இழக்க மாட்டேன். வெறுப்பை நிச்சயமாக அன்பு வெல்லும். நம்பிக்கை அச்சத்தை தோற்கடிக்கும். இணைந்தே நாம் இதை வெல்வோம் ” என்று பதிவிட்டுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11.40 மணிக்கு ராகுல் திருவனந்தபுரம் செல்ல உள்ளார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 2.20 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு மூலம் கடலின் நடுவே பாறையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

Also Read : சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் கீரை வரப்பிரசாதமா? இன்சுலின் கீரையில் இன்சுலின் இருக்கிறதா? சுவாரஸ்ய தகவல்!

அங்கிருந்து படகு மூலம் மற்றொரு பாறையில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். 3.50 மணிக்கு காமராஜர் நினைவு மண்டபத்துக்கு சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை செய்கிறார். மாலை 4.10 மணிக்கு காந்தி மண்டபத்துக்கு சென்று அங்கு நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பிறகு ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சி தொடங்குகிறது. மாலை 4.30 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்க உள்ளார்.

மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry