Wednesday, December 7, 2022

புவனா ஒரு கேள்விக்குறி! ‘பார்ட் டைம்’ அரசியல்வாதியின் அலம்பலால், அதிருப்தியில் என்.ஆர். காங்கிரஸார்!

என்.ஆர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தி வரும் தொழிலதிபரான புவனா என்கிற புவனேஸ்வரனை, பார்ட் டைம் அரசியல்வாதி என அக்கட்சியினர் விமர்சிக்கின்றனர். கட்சி இவருக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் என்.ஆர். காங்கிரஸ் பிரகமுகராக அறியப்பட்டார் புவனா. கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பாலன் கொரோனாவால் இறந்ததை அடுதத்து, கட்சித் தலைவர் ரங்கசாமி, பொதுச்செயலாளர் பதவியை தமக்கு கொடுக்கப்போவதாக, இவர் சொல்லி வருகிறார்.

ரங்கசாமிக்கு தாம் மிகவும் நெருக்கம், கட்சியில் தாம் சொல்வது மட்டுமே நடக்கும் என்ற ரீதியில், இவர் பேசிவருவதாக சீனியர்கள் கூறுகின்றனர். பொதுச்செயலாளர் பதவி என்பது, கூட்டணி நிர்ணயம், வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் தேர்வு போன்ற பல முக்கிய பணிகளை கொண்டது. பகுதிநேர அரசியல்வாதியான புவனாவால், இதைச் செய்யமுடியுமா? சொந்தக் கட்சியினரையோ, மாற்றுக் கட்சி நிர்வாகிகளையோ இவர் அறிந்திருக்கிறாரா? என அவர்கள் கேட்கின்றனர்.

ரங்கசாமியை பொறுத்தமட்டில், அவர் ஒன் மேன் ஆர்மி போலத்தான் செயல்படுவார். பாலன், அவருக்கு நெருக்கமாகவும், நம்பிக்கையாகவும் இருந்தார், அவருக்கென ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கவில்லை, எனவேதான், அவரால் பொதுச்செயலாளராக நீடிக்க முடிந்தது. ஆனால், என்.ஆர். மீதான ஈர்ப்பால் கட்சிக்கு வருவோரை, புவனா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார். தனக்கென ஒரு கோஷ்டியையும் உருவாக்கி வருகிறார்.

புதிதாக கட்சிக்கு வரும் இளைஞர்களை ஈர்க்க புவனா என்ன செய்கிறார் என்பது சீனியர்களான எங்களுக்குத்தானே தெரியும், புவனா ஒரு பார்ட் டைம் அரசியல்வாதியென்று. அரிசியலில் சோபிக்க முடியாவிட்டால், அவர் முழு நேரமாக தொழிலை பார்க்க சென்றுவிடுவார். ரங்கசாமியை பொறுத்தமட்டில், அவர் யாரையும் அவ்வளவு எளிதாக நம்பமாட்டார், அதேபோல், கடைசி நேரத்தில்தான் அவர் முடிவெடுப்பார். கட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைப்பதும், தனக்கென கோஷ்டியை உருவாக்குவதும் அவருக்குத் தெரியாமல் இருக்குமா என அவர்கள் கேட்கின்றனர்.

காமராஜர் நகர் தொகுதியின் என்.ஆர். காங்கிரஸ் தலைவராக கீர்த்திவர்மா இருந்து வருகிறார். ஆனால், அவரை ஆலோசிக்காமல், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு இவரே கட்சிப் பொறுப்புகளை வழங்குகிறார். தொகுதியில் யானை பலம் கொண்ட ஜான்குமாரை எதிர்த்து, கீர்த்திவர்மா அரசியல் செய்துவரும்போது, புவனா, இடையில் புகுந்து தனி ஆவர்த்தனம் செய்கிறார். இவரது நடவடிக்கைகள் எதிர்த்தரப்பினருக்கு சாதமாக மாறும். இதை உறுதி செய்வதுபோல, கீர்த்திவர்மா, தனது அதிருப்தியை வாட்ஸ் அப் மூலம் கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்.

கட்சியில் மற்றொரு தரப்பினர் கூறும்போது, காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக புவனா களமிறக்கப்பட, காங்கிரஸ் வேட்பாளரான ஜான்குமார் அமோக வெற்றி பெற்றார். காமராஜர் நகர் தொகுதியில் இனிமேல் போட்டியிட்டு வெற்றி பெறுவது இயலாது என்பதால், எம்.எல்.. கனவை ஓரம்கட்டிவிட்டு, பொதுச்செயலாளர் பதவிக்கு அவர் குறிவைக்கிறார். கட்சி தொடங்கியதில் இருந்து உடன் இருக்கும் எங்களைப் போன்றவர்களை ஆலோசிக்காமல் என்.ஆர். முடிவெடுக்கமாட்டார். அந்த முடிவு புவனாவுக்கு சாதமாக இருக்காது.

என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிற்க ஆசைப்படுவோர் மற்றும் தொகுதியில் உள்ள தொண்டர்கள் முதற்கொண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். ஆனால், புவனாவோ, தாம் போட்டியிட்ட காமராஜர் நகர் தொகுதியில் எதையும் செய்யாமல், மற்ற தொகுதிகளுக்கு சென்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து, முக்கிய தலைவரைப் போல காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்

முழு நேர தொழிலதிபராகவும் இல்லாமல், முழு நேர அரசியல்வாதியாகவும் இல்லாமல், பெரிய பதவிக்கு புவனா ஆசைப்படுவதும், என்.ஆர்.-க்கு எல்லாமே தாம்தான் என்ற ரீதியில் பேசிவருவதையும், கட்சியினரை குழப்பும் விதமாக வேண்டுமென்றே தவறான தகவல்களை கசியவிடுவதையும் ஏற்கவே முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles