புதுவை வளர்ச்சிக்கு நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது! லட்சுமி நாராயணனுடன் மோதும் நாராயணசாமி!

0
9

மாநிலத்தின் பொருளாதர மீட்பு நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் லட்சுமி நாராயணனின் நேர்த்தியான ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதை செயல்படுத்தினால், லட்சுமி நாராயணனுக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதே நாராயணசாமியின் புறக்கணிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

தொடர்ந்து 4-வது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் லட்சுமி நாராயணன், முதல்வரின் நாடாளுமன்ற செயலாளராகவும் இருக்கிறார். மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்த அவர் முன்வைத்த யோசனைகள், பொருளாதார நிபுணர்களின் வரவேற்பை பெற்றது. அவரது ஆலோசனைகளை சுருக்கமாகப் பார்க்கலாம்.

மதுபானக் கடைகள், கேபிள் டிவி-யை அரசே ஏற்று நடத்த வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களிடம் சொத்துவரி வசூலிக்க வேண்டும், நட்டத்தில் உள்ள அரசு மில்கள், பொதுத்துறை நிறுவனங்களின் 50 சதவிகித பங்குகளை விற்று புதிய தொழில் தொடங்க வேண்டும், வீடுகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களில் சோலார் மின் இணைப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், காலியாக உள்ள அரசுத்துறை பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை நியமிக்க வேண்டும், பெரிய மென்பொருள் நிறுவனங்களுக்கு இலவச இடம் கொடுத்து, புதுச்சேரி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும், பி.எட். முடித்தவர்களை கொண்டு கூட்டுறவு ஆசிரியர் சங்கம் உருவாக்கி, அதன் மூலம் மூடப்பட்டுள்ள பள்ளிகளை நடத்த வேண்டும், இப்படி நீள்கிறது அவரது ஆலோசனைகள்.

பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக அரசு சார்பில் தனியாக நிபுணர் குழு அமைத்து பெற வேண்டிய ஆலோசனைகளை, காலவிரையமின்றி லட்சுமி நாராயணன் எளிமையாக முன்வைத்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க முடியவில்லை, ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் வழங்க முடியவில்லை, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என புதுச்சேரி அரசின் நிதி நிலை பல் இளிக்கிறது.

ஆனால், எதைப்பற்றியும் அரசோ, ஆளுநரோ, அதிகாரிகளோ கவலைப்படுவதாக தெரியவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், லட்சுமி நாராயணனும் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார். முதலமைச்சரும், ஆளுநரும் அதிகார மோதலில் ஈடுபடுவதும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாதற்கு, பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குறைகூறிக்கொள்வதும், வாடிக்கையாகிவிட்டது.

மாநிலத்தின் நிதி நிலையை மேம்படுத்த லட்சுமி நாராயணன் மே மாதம் முன்வைத்த யோசனைகளை செயல்படுத்தத் துவங்கியிருந்தாலே, இப்போது பலன்கள் கிடைக்கத் தொடங்கியிருக்கும். ஆனால், அவர் சொல்வதை ஏற்பதா?, அதனால் அவருக்குத்தானே நல்ல பெயர்? என்ற ஈகோ காரணமாகவே, புதுச்சேரியை குட்டி சிங்கப்பூராக்கும் அத்தனை யோசனைகளையும் அடியோடு நிராகரித்திருக்கிறார் முதலமைச்சர் நாராயணசாமி.

இதேபோல், கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து, மக்கள் தவிக்கும் நிலையில், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.10,000 வழங்க வேண்டும், ஆன் லைன் வகுப்புகளை சிரமமின்றி எதிர்கொள்ள 9,10,11,12-ம் வகுப்புகளில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட் கணினி வழங்க வேண்டும் என்ற லட்சுமி நாராயணனின் கோரிக்கையும் நாராயணசாமி கவனத்தில் எடுக்கவே இல்லை.

நிதிநிலை சரியில்லை எனச் சொல்லி மக்களை பட்டினி போடுவதும், திட்டங்களை நிறுத்துவதும், அரசாங்கத்தின் தோல்வியாகவே பார்க்கப்படும், வீதி வீதியாக வலம் வந்து அறிக்கை கொடுத்தால் மட்டும் போதுமா?, ஆட்சியும், கட்சியும் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற லட்சுமி நாராயணனின் எச்சரிக்கையைக் கூட சர்வ சாதாரணமாக கடந்துசெல்கிறார் நாராயணசாமி.

இதேபோல்தான் கோவிட்-19 தொற்று பரவல் தடுப்பு விவகாரத்திலும், சுகாதார அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் யோசனைகளையும் அவர் ஏற்கவில்லை. முதலமைச்சரின் ஈகோ, இன்னும் எவ்வளவுதான், மாநில நலனையும், மக்களையும் பலிவாங்கப்போகிறதோ என சாமானியர்கள் வேதனைப்படுகின்றனர்.

Also Read: நாராயணசாமி, மல்லாடி மோதலால் பலியாகும் உயிர்கள்! புதுச்சேரியில் ஈகோ யுத்தத்தால் வேகமாகப் பரவும் கொரோனா!

கட்சி மேலிடத்தில் உள்ள செல்வாக்காலும், ஜான்குமார் தயவாலும் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ள நாராயணசாமிக்கு, வரும் தேர்தலைப் பற்றியோ, கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க முயற்சிக்க வேண்டுமே என்பது பற்றியோ கிஞ்சித்தும் கவலையில்லை என்பதையே அவரது நடவடிக்கைகள் தெளிவாக்குவதாக காங்கிரஸ் கட்சியினரே கூறுகிறார்கள். நாராயணசாமியின் இந்த Don’t Care பாலிசிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். அப்போது பாதிக்கப்படப்போவது அவர் மட்டுமல்ல என்பதே நிதர்சனம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry