அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன.
பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேலும் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழுவில் இயற்ப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தங்களை நீக்கியது செல்லாது எனவும் அறிவிக்கக்கோரி பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குகள் தொடரப்பட்டன.
Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive
இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு, மார்ச் 22-ம் தேதி 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தார். இருதரப்பிலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (மார்ச் 28) காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அவர் உத்தரவிட்டார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த நீதிபதி, பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார்.
தீர்ப்பு வெளியானவுடன் அதிமுக அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் அ.தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தீர்ப்பு வெளியான பின், எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவச் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் அ.தி.மு.க. தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான அறிவிப்பில் அவர் முதல் கையெழுத்திட்டார். பின்னர் சென்னை மெரினாவில், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தற்போது அஇஅதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யட்டிருக்கிறார். கட்சியின் நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இரா. நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம், எஸ். இராகவானந்தம், புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா, வி.கே. சசிகலா வரிசையில், எடப்பாடி பழனிசாமி இணைந்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry