குடிகாரர்களுக்கு வக்காலத்து! பள்ளி கட்டண விவகாரத்தில் மௌனம்! ஜான்குமாருக்கு சம்பத் சரமாரிக் கேள்வி?

0
44

புதுச்சேரி பாஜக எம்.எல்.. ஜான்குமார், தனது தொகுதி மக்களை போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க முயற்சி செய்யாமல், அவர்களை மேலும் மேலும் அடிமையாக்கும் வகையில் செயல்படுவது, குடும்பப் பெண்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

குடிகாரர்களுக்கு ஆதரவாக ஜான்குமார் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில்தனது தொகுதியைச் சேர்ந்த ஒருவர் மதுகிடைக்காததால், சானிடைஸரை தண்ணீரில் கலந்து குடித்து உயிரிழந்துவிட்டார். இது பற்றி துணை நிலை ஆளுநருக்கு தெரிவித்து மதுக்கடைகளை உடனடியாக திறக்க உத்தரவிடுமாறு கோரியுள்ளேன்என்று கூறியுள்ளார்.

ஜான்குமாரின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அனைத்து மதுக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என்று அறிவித்தார். அதன்படி நேற்று (08.06.2021) முதல் மதுக்கடைகள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளன.

தனது தொகுதியைச் சேர்ந்த ஒருவர் சானிடைசர் குடித்து இறந்ததுதான் ஜான்குமார் கோரிக்கை வைக்கக் காரணமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ள காமராஜ் நகர் தொகுதியில் போதைக்கு மிகவும் அடிமையானவர்கள் 10-20 பேர் இருக்கலாம். மதுகிடைக்காததால் பாதிக்கப்படுவோர் தம்மை தொடர்புகொண்டால், தேவையான உதவி செய்வதாக அறிவித்து, அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் கொடுத்திருக்கலாம். அல்லது, போதை மறுவாழ்வு மையத்தில் அவர்களை சேர்த்திருக்கலாம். இப்படிச் செய்திருந்தால், அவர்களது குடும்பங்கள் வாழ்ந்திருக்கும்.

இந்தநிலையில், ஜான்குமார் எம்.எல்.. எந்த கோரிக்கை வைத்தாலும், துணை நிலை ஆளுநர் உடனடியாக ஏற்கும் நிலையில், பள்ளிக்கட்டண கொள்ளையை தடுக்குமாறு அவர் கோரிக்கை வைப்பாரா? என்று முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.. சம்பத் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், தனியார் பள்ளிகள் முழுக்கட்டணத்தையும் செலுத்துமாறு பெற்றோரை வற்புறுத்தும் நிலையில், விரைவில் அமைச்சராக பதவியேற்க இருக்கும் ஜான்குமார், அரசுக்கு அழுத்தம் கொடுத்து கட்டண சலுகை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.  சம்பத்தின் இந்த கோரிக்கைக்கு பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோல், குடிகாரர்களுக்கு சலுகை காட்டும் ஜான்குமார் எம்.எல்.., மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தாதது ஏன் என்று கல்வியாளர்கள் கேட்கின்றனர். பள்ளிக்கு செலுத்துவதற்காக வைத்திருந்த கட்டணத்தை சில தகப்பன்கள் குடிக்குச் செலவழிக்கவே ஜான்குமார் வழிவகை செய்துள்ளார். மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்குமானால், எம்.எல்.. சம்பத் கேட்டதைப்போல உடனடியாக பள்ளிக் கட்டண சலுகை பெற்றுத்தர ஜான்குமார் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வ அதிகாரம் பொருந்தியவராக உருவெடுத்துள்ள ஜான்குமார், குடிகாரர்களுக்கு துணை நிற்பது முகம் சுளிக்க வைக்கிறது. பள்ளிக் கட்டண சலுகை பெற்றுத் தரவும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கவும் தனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தினால், வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &