இணையதளத்தில் வெளியாகிறது நீட் விண்ணப்பம்! ஆகஸ்ட் 1-ல் நாடு முழுவதும் தேர்வு நடத்தப்படுவது உறுதி!

0
21

இந்த ஆண்டும் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று கூறியுள்ள தேசிய தேர்வு முகமை, தேர்வுக்கான விண்ணப்பம் விரைவில் ஆன் லைனில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில கல்வி வாரியங்கள் 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளன. கல்வி பொதுப்பட்டியலில் இருந்தாலும், சிபிஎஸ்இ வாரியத்தில் மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் 12,87,359 மாணவர்கள் மட்டுமே 12-ம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். இவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக ஒரு குழுவை அமைத்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், மாநிலங்களின் பாடத்திட்டத்தில் பயிலும் கோடிக்கணக்கான மாணவர்களை கவனத்தில் எடுக்கவில்லை. இவர்களுக்கான மதிப்பெண்ணை நிர்ணயம் செய்வதற்கு தேசிய அளவிலான ஒரு கொள்கையை வகுப்பதிலும் மத்திய கல்வி அமைச்சகம் ஆர்வம் காட்டவில்லை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டுமென, தமிழக அரசும், சில அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், நீட் தேர்வு நடத்தமாட்டோம் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷும் கூறிவருகிறார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவையும் ஸ்டாலின் அமைத்துள்ளார்.

எனவே, நீட் தேர்வு நடக்குமா?, நடக்காதா?, பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், டிப்ளமோ படிப்புகளுக்கு எந்த மதிப்பெண் அடிப்படையில் பிள்ளைகளை சேர்ப்பது என பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் உளவியல் குழப்பம் நிலவுகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கிறது.  தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்பதில் மத்திய அரசும் உறுதியாக இருக்கிறது. கடந்த ஆண்டு பெருந்தொற்று ஊரடங்கின்போது தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது. எனவே, இந்த ஆண்டு நீட் தகுதித் தேர்வுக்கு விலக்கு இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, திடீரென நீட் தேர்வை ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று.  கடந்தாண்டுகளில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும், தற்போது தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்பதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதே கல்வியாளர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. ஒருவேளை மாநில ஒதுக்கீடுக்கு விலக்கு பெற்றாலும், மத்திய அரசின் 15 சதவிகித இடங்களுக்காவது நிச்சயம் நீட் தேர்வு நடக்கும். பள்ளிகள் அளிக்கும் மதிப்பெண்தான், மருத்துவ இடங்களைப் பெற உதவும் என்றால், அதிக மதிப்பெண்கள் பெற, தனியார் பள்ளிகளுடன், பெற்றோர் பேரம் பேச வாய்ப்புள்ளது.

இந்த சூழலில்தான், மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு,  கண்டிப்பாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு முகமையின் இணையதளத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது, விரைவில் ஆன் லைன் விண்ணப்பம் வெளியிடப்படும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை கூறியிருக்கிறது.

ஆகஸ்ட் 1-ம் தேதி தேர்வு நடத்துவதை மீண்டும் உறுதி செய்வதற்காக, மத்திய கல்வி அமைச்சகமானது, பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளது. இதைத்தொடர்ந்து, இரண்டு வாரத்துக்குள் தேர்வுக்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &