நுழைவுத் தேர்வு நடத்தி 11-ம் வகுப்பு சேர்க்கை! 15-ந் தேதிக்கு மேல் வகுப்புகள் தொடக்கம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

0
138

ஜுன் 3-வது வாரத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கையை முடிக்க தீர்மானித்துள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பெருந்தொற்று பரவல் சற்று குறையத் தொடங்கியதை அடுத்து, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது. மாணவர்களும், ஆசிரியர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்நிலையில், பெருந்தொற்று காரணமாக 10,11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

ஆனால் 4 மாதங்களைக் கடந்தும் இதுவரை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என்பது குறித்து அரசிடம் இருந்து தெளிவான முடிவு வரவில்லை. இதற்கிடையில், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ..எஸ். வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, தொடக்கம் முதல் முடிவு வரை பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 11-ம் வகுப்பு ஆரம்பிப்பது குறித்து ஆரம்பிக்கும் அந்த சுற்றறிக்கை, 12-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் என்பதாக முடிகிறது

குழப்பம் – 1

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என நந்தகுமார் கூறியிருக்கிறார். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எந்த எண்ணிக்கை வரையறையும் இல்லை.

குழப்பம் – 2

மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கான வரையறை இல்லாத நிலையில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரினால், ஒவ்வொரு பிரிவிலும் 10-15% கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம் என்றும் அந்த சுற்றறிக்கை குறிப்பிடுகிறது. அப்படியானால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிகளுக்கு, மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கை வரையறை வகுக்கப்பட்டுள்ளதா? என்ற குழப்பத்தை இந்த சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது.

குழப்பம் – 3

மாணவர்கள் குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமாக விண்ணப்பித்தால் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று நந்தகுமார் கூறுகிறார். நுழைவுத் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக அரசு இருக்கும் நிலையில், 11-ம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு என்பதும் குழப்பத்தை உருவாக்குகிறது. அத்துடன், எந்த மதிப்பெண் அடிப்படையில், 11-ம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கான பிரிவுகள் தீர்மானிக்கப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தவில்லை

குழப்பம் – 4

அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்த மாதம் 3-வது வாரத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என்று நந்தகுமார் கூறியுள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பெருந்தொற்று பரவல் சூழலைப் பொறுத்து, பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து பேரிடர் மேலாண்மைத்துறையும், சுகாதாரத்துறையும்தான் முடிவு செய்யும். ஆனால், 3-வது வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என அவர் தன்னிச்சையாக அறிவித்திருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை குழப்பங்களுடன், தெளிவற்ற ஒரு சுற்றறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள்தான் இதுவரை நுழைவுத் தேர்வு நடத்தி வந்தன. ஆனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கே நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்பதையும், எந்த அடிப்படையில் 11-ம் வகுப்பு தொடங்கும் தேதியை நந்தகுமார் அறிவித்தார் என்பதையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry