அவ்வப்போது சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். எனவே, வீட்டில் நாம் சுவாசிக்கும் காற்றானது தூய்மையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், வெளியில் உள்ள காற்றைவிட, வீட்டில் நாம் சுவாசிக்கும் காற்றானது 5 மடங்கு மோசமாக உள்ளதாக ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மனித ஆரோக்கியத்துக்கு, காற்றின் தரம் மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு போன்றவற்றை முறையாக கையாளாததால் ஏற்படும் காற்று மாசு காரணமாக உலகளவில் ஆண்டொன்றுக்கு 38 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
Also Read : சுட்டெரிக்கும் வெயில்! வீட்டில் ஏசி இருக்கிறதா? பராமரிப்புக்கான முழுமையான வழிகாட்டுதல்!
வீட்டில் தரமற்ற காற்றை தொடர்ந்து சுவாசிக்கும்போது, தலைவலி, தலைச்சுற்றல், கண், மூக்கு, தொண்டை எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. அதேநேரம், வீட்டில் தரமற்ற காற்றை நாம் வருடக் கணக்கில் சுவாசித்து வரும்போது, சுவாசக்கோளாறு, இதயக்கோளாறு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களால் மரணிக்கக்கூட நேரிடலாம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜானி அவூக்கரன் எச்சரித்துள்ளார்.
வீட்டில் நாம் தரமற்ற காற்றை சுவாசிக்க முக்கிய காரணியாக இருப்பது முறையாக சுத்தம் செய்யப்படாத ஏசி எந்திரங்கள். சுத்தம் செய்யப்படாத ஏசி எந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது, மேற்குறிப்பிட்ட பாதிப்புகள் மட்டும் அல்லாமல் நிமோனியா பாதிப்பும் அதிக அளவில் ஏற்படுவதாக கண்டறியப்படுள்ளது.
வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும். அலுவலகம், வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்கள் சரியாக பராமரிக்கப்படாவிட்டால் அதில் கார்பன் மோனாக்சைடு, கார்பன்–டை–ஆக்சைடு, சிகரெட் புகை, பாக்டீரியா, சுத்தப்படுத்தும் திரவங்களின் படிமங்கள், பிரிண்டர் எந்திரத்தில் இருந்து வெளியாகும் ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வாகன புகை போன்றவைகள் கலப்பது அதிகரிக்கும் எனவும் டாக்டர் ஜானி அவூக்கரன் எச்சரித்துள்ளார்.
எனவே வீடு மற்றும் அலுவலகங்களில் ஏ.சி. எந்திரங்களை சரியாக பராமரித்து, அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏசி எந்திரங்களை சுத்தம் செய்து, அறையில் உள்ள காற்று தூய்மையானதாக இருப்பதை உறுதி செய்தால், ஆரோக்கியமாக வாழலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry