ஒற்றுமை இழந்த பிராமணர்கள்!  அந்தணன் எனக் கூறவே அசிங்கப்படும் அவலம்! பாகம் – 2

0
2271

பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிஸ சித்தாந்தவாதிகளால், பிராமணர்கள் ஒடுக்கப்படுவது ஒருபுறம் என்றால், தற்போதுள்ள 90% பிராமணர்கள், அடையாளத்தை, ஒற்றுமையை, ஆச்சாரத்தை ஒதுக்கிவிட்டு தனிமைப்பட்டுள்ளார்கள்.

பிராமணர்கள் ஒதுங்குவதை அல்லது ஒதுக்கப்படுவதை இரண்டுவிதமாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். ஒன்று, பொதுச் சமூகத்தை விட்டு விலகி இருப்பவர்கள். இவர்களில் பலர் பிராமண சம்பிரதாயங்களை, முழுவதுமாக இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது கடைப்பிடிப்பார்கள். ஆனால், இவர்கள் உடன் பிறந்தவர்களுக்கு, சொந்தங்களுக்கு, சக பிராமணர்களுக்கு,  எந்த வகையிலும் உதவ முன்வரமாட்டார்கள்.

மேலதிகமாகச் சொன்னால், இவர்களது நடவடிக்கைகள், மற்ற சமூகத்தினரை எரிச்சலூட்டும். பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திராத இவர்கள், பிராமணர்கள் உள்பட மற்ற சமூகத்தினர் அனைவரையுமே அடிமைகள் போல நடத்துவதும், தான் சொல்வது, தனது நடவடிக்கை மட்டுமே சரி என்ற ரீதியிலும் நடந்துகொள்வார்கள். உதவி என்றோ, தான் சமூகத்தினர் என்றோ இவர்களை அணுகுவோரை உதாசீனப்படுத்துவார்கள். இவர்களைப் போன்றவர்களாலும் பிராமண சமூகம், மற்ற சமூகத்தினரால் தள்ளி வைக்கப்படுகிறது

இரண்டாவது, பொதுச் சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழக் கூடியவர்கள். இவர்களில் ஒரு சாரார் பிராமண கலாச்சாரத்தை ஓரளவுக்கேனும் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். மற்றொரு சாராரை மேற்கத்திய கலாச்சாரம் முழுமையாக வியாபித்திருக்கிறது. இந்த இரண்டு சாராருமே, அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்வார்கள். ஆனால், சந்தியாவந்தனம், நித்ய பூஜைகள், விரதங்கள், இது எதுவுமே அவர்களுக்கு தெரியாது, தெரிந்துகொள்ள ஆர்வமும் காட்டமாட்டார்கள். இவர்கள் திருநீறு மற்றும் திருமண் தரிப்பதும், கோயில்களுக்கு செல்வதும் அரிதானதே.   

Also Read : உச்சம் பெறும் பிராமண வெறுப்பு அரசியல்! பார்ப்பனர்களுக்கு எதிராக அதிகரிக்கும் ஊடகத் தீவிரவாதத் தாக்குதல்! பாகம்-1

கலாச்சார கட்டுப்பாட்டுக்குள்  வர மறுக்கும் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த இளைஞர், இளைஞிகள்தான் அதிகம் கலப்பு மணம் செய்வார்கள். பெண் பிள்ளை வைத்திருப்போரும், வேதம் படித்த இளைஞனுக்கு பெண் தரமாட்டார்கள். லாகிரி வஸ்துகள், மாது என செய்யக்கூடாதவற்றை மிகச்சரியாக செய்வார்கள். பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தக்கூட இவர்கள் தயங்குவார்கள். இவர்களில் பலர் நாத்திகர்களாகவும், இடதுசாரி சித்தாந்தத்தை பின்பற்றுவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படி உச்ச நிலையில், இரு கூறுகளாக இருக்கும் இவர்களைப் போன்றவர்கள்தான் நமக்கான எதிரிகள். உனக்கான எதிரி உன்னோடு இருக்கும்வரை நீ யாரையும் வெல்ல முடியாது என்று சொல்வதுண்டு. மொழி, மாநில அடையாளங்களைக் கடந்து, குமரி முதல் காஷ்மீர் வரை பரவியுள்ள இஸ்லாமியர்களைப் போலவோ, கிறித்தவர்களைப் போலவோ அல்லது தமிழகத்தில் மற்ற சாதி இந்துக்களைப் போலவோ, இவர்கள் பிராமணர்களுக்கான இயல்பை, ஒற்றுமையை தொலைத்ததுதான் பிரச்சனையின் ஆணி வேர்.

தான் அந்தணர் என்பதை உணர்ந்து, அதை அச்சமின்றி அடையாளப்படுத்திக் கொண்டு, கலாச்சாரத்தை ஆழமாகப் பின்பற்றி, நித்ய கர்மாக்களை தவறாமல் செய்து, கஷ்டப்படும் சக பிராமணர்களுக்கு உதவிசெய்து, அதேநேரம் மற்ற சமூகங்களையும் சகோதரத்துவத்தோடு அரவணைக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் பிராமண சமூகத்துக்குள்ளேயே இருக்கும் எதிரியை வென்று, அச்சமூகத்தை வெல்ல எதிரியே இல்லை என்ற நிலை உருவாகும்.

-பத்திரிகையாளர்கோ

(தமிழகத்தில் அகதிகளாகும் அந்தணர்கள்! மறுக்கப்படும் உரிமை! பரிதவிக்கும் ஏழை பிராமணர்கள்!பாகம் – 3)

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry