வாய்ப்புண், வயிற்றுப் புண்ணுக்கு எளிமையான பாட்டி வைத்தியம்! உடனடி நிவாரணத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

0
6367

வாய்ப்புண் ஏற்பட்டால் தண்ணீர் விழுங்க முடியாமல், சாப்பிட முடியாமல் பெரும் அவதிப்பட நேரிடும். வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? அதை எளிதாக குணமாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

கன்னக்கதுப்புகளிலும், உதட்டு ஓரங்களிலும், நாக்கிலும், சிறு கொப்புளங்கள், சிவந்து போதல், வெடிப்பு, இரத்தக்கசிவு ஆகியவை Mouth Ulcer அதாவது வாய்ப்புண் இருப்பதற்கான அறிகுறிகள். எந்த உணவை சாப்பிட்டாலும் காரமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதிக இனிப்பையும் புளிப்பு சுவையையும் கூட சுவைக்க முடியாது.

சிலருக்கு பற்களின் அமைப்பு இயற்கையிலேயே மிகவும் கூர்மையாக இருக்கும் அல்லது ஏதேனும் விபத்துகளால் பற்கள் வடிவம் மாறிவிடும். அவர்களுடைய கூர்மையான பற்கள் வாயில் நாக்கில் உராய்ந்து காயங்களை ஏற்படுத்தி புண்ணை ஏற்படுத்தும். சில சமயம் வேறு ஏதாவது உடல் உபாதைகளுக்காக எடுத்துக் கொள்ளும் வீரியமான மருந்துகள் வாய்ப்புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் உருவாக்கி விடும். நீண்ட நாள் புகைப்பழக்கம், மது, பான், குட்கா, வெற்றிலை போன்ற பழக்கங்கள், வாய்ப்புண்ணுக்கு முக்கியமான மற்றொரு காரணமாகும்.

அதேபோல், மலச்சிக்கல், பித்த அஜீரணம், உடற்சூடு, வைட்டமின் சி, பி12, வைட்டமின் சத்து போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, உணவு ஒவ்வாமை போன்றவையும் மவுத் அல்சருக்கு காரணமாக அமைகின்றன. மனஅழுத்தம், ஆக்ரோஷ குணமுடையவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புண்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

வயிற்றில் புண்கள் இருந்தாலும், அதன் பாதிப்பு வாய்ப் புண்களின் மூலமாகவே வெளிப்படும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பசும், வாயில் புண்கள் ஏற்படுவதற்கான காரணமாகும். நமது அன்றாட உணவுப் பழக்க வழக்கங்களிலேயே இதை குணமாக்குவதற்கான வழிமுறைகள் இருக்கின்றனவாய்ப்புண் இருக்கும்போது, பச்சைமிளகாய், புளிப்புச் சுவையுடைய உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சுவைகொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அரை மூடித் தேங்காயை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக, தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் படும் படியாக குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசினால் ஒரே நாளில் நல்ல பலன் தெரியும்.

வாய் புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த நிவாரணம் தரும். வல்லாரை கீரையை இடித்து அல்லது நன்றாக அரைத்து, சிறிதளவு சாறு எடுத்து வாய்ப் புண்ணில் பூச விரைவில் குணமாகும். வெண்டைக்காயை நெய் விட்டு ஒரு நிமிடம் வதக்கி, அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண்களும், வாய் புண்ணும் குணமாகும்.

வாழைப் பூ வாய்ப்புண்ணுக்கும் வயிற்றுப் புண்களுக்கும் கை கண்ட மருத்துவமாகும். வாழைப் பூவை பாசிப் பருப்புடன் சேர்த்து கூட்டாக சாப்பிட்டு வர வேண்டும். மேலும் வாழைப் பூவை உரிக்கும் போது இறுதியில் எஞ்சும் சிறிய மொட்டை பச்சையாகவோ அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு விட்டால் உடனடியாக வாய்ப்புண் குணமாகும்.

வாய்ப்புண் இருக்கும் போது கொய்யா பழத்தை தொடர்ந்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். மேலும் கொய்யா இலைகளை வாய் ழுமுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. இதற்கு பதில் கொய்யா இலை இரண்டை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல தயாரித்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் உள்ளவர்கள் கசகசாவை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் ஆறும். வெல்லம், பாசிப் பயறு சேர்த்துக் கஞ்சியாக குடிக்கலாம். கீரை, பசும்பால், பீர்க்கங்காய், புடலங்காய், நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளைப் பூசணிக்காய் அல்லது அகத்திக்கீரையைச் சமைத்து சாப்பிட்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும். முருங்கைக்கீரை மற்றும் பூ, சிறுகீரையை சமைத்துச் சாப்பிடலாம். அதிமதுரப் பொடி அல்லது கடுக்காய் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.

மணத்தக்காளி கீரை வயிற்றூப்புண்ணை ஆற்றும் என்று சொல்வார்கள். மணத்தக்காளி கீரையை பூண்டு சேர்த்து கடைந்து இளஞ்சூடாக நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். மணத்தக்காளி கீரையை சூப் செய்து குடிக்கலாம். அதிகமாக வாய்ப்புண் இருப்பவர்கள் மணத்தக்காளி கீரை இலைகளை சுத்தம் செய்து அப்படியே மென்று சாப்பிடுங்கள்.

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் சின்னம்மை, தட்டம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் ஏற்படும். எனவே, வாய்ப்புண் வாரக்கணக்கில் தொடர்ந்தாலோ, குறுகியகால இடைவெளியில் திரும்பத் திரும்ப வந்தாலோ மருத்துவர்களின் ஆலோனையைப் பெற வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry