குழப்பத்தில் கல்வித்துறை! 11-ம் வகுப்புக்காக பள்ளிகள் திறக்கும்போது, 12-வது பொதுத்தேர்வை நடத்தாது ஏன்?

0
21

9-ம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து, 11-ம் வகுப்பு சேர்க்கையை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கும்போது, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் விட்டது ஏன்? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்புகளை அடுத்தவாரம் துவங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் ஐஏஎஸ் உத்தரவிட்டிருந்தார். குறிப்பிட்ட குரூப்பை அதிகமான மாணவர்கள் கோரினால், நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கையை முடிக்குமாறு அவர் கூறியிருந்தார்.

Also Read: நுழைவுத் தேர்வு நடத்தி 11-ம் வகுப்பு சேர்க்கை! 15-ந் தேதிக்கு மேல் வகுப்புகள் தொடக்கம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

இதனால் பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், நுழைவுத்தேர்வு முடிவை திரும்பப்பெற்று, நந்தகுமார் வெளியிட்டிருக்கும் புதிய சுற்றறிக்கையும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை ஓய்வுபெற்ற இயக்குநர் தேவராஜன், வேல்ஸ் மீடியாவுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “இவ்வளவு அவசரமாக 11-ம் வகுப்பு சேர்க்கையை நடத்த வேண்டிய அவசியமே இல்லை.

மக்கள் திரள்வதை தவிர்க்கத்தானே ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, 11-ம் வகுப்பு சேர்க்கைக்காக, மாணவர்களையும், பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைப்பது எப்படி சரியாக இருக்கும்? வகுப்புகள் தொடங்கினாலும், பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் மாணவர்கள் எப்படி பள்ளிக்கு வருவார்கள்? அவர்களுக்கான புத்தகங்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்க முடியுமா? மாணவரோ, பெற்றோரோ வந்துதானே வாங்கிச் செல்ல வேண்டும்? வகுப்புகள் நடத்தும் சூழல் இப்போது உள்ளதா?

நுழைவுத்தேர்வு முடிவை கைவிட்ட கல்வித்துறை, 9-ம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து, இடங்களை நிரப்ப உத்தரவிடுவது ஏன் என புரியவில்லை. 9-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை, ஆல் பாஸ் என அரசு அறிவித்துவிட்டது. பிறகு, எந்த மதிப்பெண்ணை இவர்கள் கணக்கில் எடுப்பார்கள். ஒரு குறிப்பிட்ட மாணவன், குடும்ப சூழல் அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாகக் கூட  குறைவான மதிப்பெண் எடுத்திருக்கலாம்.

அப்படியானால், தற்போது அந்த மாணவன் கோரும் குரூப்பை தர மறுப்பது நியாயமாகுமா? அரசுப் பள்ளிகளில், பெரும்பாலான மாணவர்கள் 1st Group, 2nd Group-ல் சேர ஆர்வம் காட்டுவதில்லை. 3rd Group-ஐத்தான் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். அப்படி இருக்கும்போது கூடுதலாக ஒரு Sectionஐ ஏற்படுத்தலாம். அதைவிடுத்து 9-ம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கில் கொள்வோம் எனக் கூறுவது தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இவ்வளவு அவசரமாக 11-ம் வகுப்பு சேர்க்கையை நடத்தும் அரசால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முடியாமல் போனது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு, மாணவரும், அவரது பெற்றோரும் பள்ளிக்கு வந்தாக வேண்டும். ஆனால், பொதுத்தேர்வு எழுத மாணவன் மட்டும் வந்தால் போதும். பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி, போதிய இடைவெளியுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியிருக்கலாம்.

அப்படி நடத்தியிருந்தால், உயர்கல்வி சேர்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக தவிர்த்திருக்க முடியும். அரசு அமைத்துள்ள குழுவின் வழிகாட்டுதலில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கினாலும், அவர்களில் சிலர் நீதிமன்றத்தை நாடினால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

11-ம் வகுப்பு சேர்க்கையை முடித்து, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கினாலும், கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை. எனவே பெருந்தொற்று பரவல் முற்றிலுமாகக் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு மாணவர் சேர்க்கையை நடத்தி பள்ளிகளை திறப்பதே சரியானதாக இருக்கும்என்று கூறினார்.

1st Group, 2nd Group-ல் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததற்கு பாடத்திட்டங்கள் கடினமாக மாற்றி அமைக்கப்பட்டதும் முக்கிய காரணமாக இருக்கிறது. உதாரணமாக 10-ம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகம் (இயற்பியல், வேதியியல், உயிரியியல்) சுமார் 350 பக்கங்கள் ஆகும். ஆனால் 11-ம் வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்கள், தலா ஆயிரம் பக்கங்கள் உள்ளன. எனவேதான் மாணவர்கள் காமர்ஸ் குரூப்பில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் மாணவர்கள் இளங்கலை பட்டப் படிப்பில் சேருவதும், மருத்துவம் சார்ந்த இணைப் படிப்புகளில் சேருவதும் வெகுவாகக் குறைந்து வருகிறது. எனவே, மாணவர்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும்போது, தீர்க்காமன பார்வையும், தெளிவான சிந்தனையும் இருப்பது அவசியம்

இதனூடே, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறந்து வகுப்புகளை எடுக்க கல்வித்துறை ஆணையர் உத்தரவிடும் நிலையில், 12-ம் வகுப்புக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்று அறிவித்திருப்பது வியப்பாக உள்ளது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry