இந்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,யான ஆ. ராசாவுக்கு எதிராக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், பா.ஜ.க.வைச் சேர்ந்த மூன்று பெண் எம்.பி.க்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் ஆ. ராசா பேசினார். இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன.
Also Read : ஈரான் ஹிஜாப் விதிகளுக்கு எதிராக கர்ஜனை! பெண்கள் முடியை வெட்டி போராட்டம்!
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பெண் எம்.பி.,க்கள் மூன்று பேர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ராசாவின் பேச்சு தொடர்பான பத்திரிகை செய்திகள், ‘வீடியோ’வின் எழுத்து வடிவம் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளனர்.
மக்களவை சபாநாயகர் இல்லாத நேரத்தில் சபையை நடத்துவதற்கு, எட்டு எம்.பி.க்கள் தற்காலிக சபாநாயகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒருவரான ஆ. ராசாவை அந்தப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று, பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்துக்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள ராசா, மக்களவையை வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக தி.மு.க. மூத்த தலைவர் பாலுவுடன் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஓம் பிர்லா கூறியுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில், சபையை வழிநடத்தும் தற்காலிக சபாநாயகர் பொறுப்பில் இருந்து ராசா நீக்கப்படுவது உறுதி என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry